Sunday, December 19, 2010

தெனாங் இடைத்தேர்தல்: இந்தியர்களின் வாக்குகள் அரசியல் சுனாமியை உருவாக்கும்

மலேசியாகினி செய்தி 

தேசிய முன்னணி ஆட்சியில் பல கசப்பான அனுபவங்களைக் கடந்த இந்தியர்கள், மீண்டும் அவர்கள் வாக்கின் ஆதிக்கத்தை நிரூபிக்கும் தளமாக அமையப் போகிறது தெனாங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் என்று கூறுகிறார் டிஎபி தேசிய துணைத் தலைவரும் ஈப்போ பாரட் நாடாளுமன்ற 
உறுப்பினருமான எம்.குலசேகரன்.

இந்தச் சட்டமன்ற தொகுதியில் சுமார் 12.11 விழுக்காடு அல்லது சுமார் 1757 இந்தியர்கள் வாக்காளராக இருக்கின்றனர்.

இம்முறை தெனாங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியர்கள் எடுக்கப்போகும் முடிவு உடனடியாக நாட்டின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடியதாக அமையும் என்பதை உறுதியாக சொல்லமுடியும் என்றார்.

சிறந்த பிரதிநிதித்துவத்தைக் கொண்ட கூட்டணியை இந்தியர்கள் வாக்காளர்கள் ஆய்வு செய்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதும் திண்ணம்.

“இனவாத தேசிய முன்னணி அரசாங்கத்திடமிருந்து நமது உரிமைகளைப் பெறுவதற்கு அனுதினமும் நாம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் பயனளிக்காது போனதால் மாற்று கூட்டணியை இந்திய சமூகத்தினர் 
முழுமையாக ஆதரிப்பார்கள் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.”

இனவெறி பிடித்த தேசிய முன்னணியிடம் ஒரு சில ஒத்தூதி கட்சிகள் இந்தியர்களின் உரிமைகளை அடகு வைத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
தேசிய முன்னணி ஆட்சியில் இந்தியர்களுக்கான பல உரிமைகள் அறிவிக்கப்படுவதுபோல் அமல்படுத்தப்படுவதில்லை. தட்டிக்கேட்டால் எதுவும் நமக்கு மிஞ்சுவதும் இல்லை.

“இந்தியர்கள் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகள் சரியானவையாக இருந்திருக்கின்றனவா? அல்லது முழுமை பெற்றிருக்கிறதா? சிந்திக்கும் தருணமிது”, என்று அவர் கூறுகிறார்.

“இந்தியர்கள் இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் வாக்கு அளிக்காவிட்டாலும் ஒருவருக்கு வெற்றி உறுதி என்பதைச் சுட்டிக் காட்டிய குலசேகரன், இந்தியர்களுக்கு இத்தனை ஆண்டுகாலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு ஒட்டுமொத்தமாகத் தங்களுடைய கடும் எதிர்ப்பை வெளிக்காட்ட தெனாங் தொகுதி இந்தியர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகச் சிறந்த சந்தர்ப்பம் இது”, என்றார்.
இந்தியர்களின் வாக்குகள் இம்முறை மக்கள் கூட்டணியின் வெற்றிக்கொடியை பறக்க விடுவதற்கான வாய்ப்பு இது.

“இந்தச் சந்தர்ப்பத்தை இந்திய வாக்காளர்கள் நழுவ விடக்கூடாது”, என்பதை வலியுறுத்திய குலசேகரன், விரைவில் மக்கள் கூட்டணி இந்திய தலைவர்கள் தெனாங் சட்டமன்ற தொகுதி இந்தியர்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள ஆயத்த நிலையில் இருக்கிறார்கள் என்றார்.

“மக்களின் ஆதரவு எங்களுக்கு உண்டு என்பதனை இவ்வேளையில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதனை ஆணித்தரமாகவும் சொல்றேன்”, 
என்று அவர் மேலும் கூறினார்.


No comments:

Post a Comment