Tuesday, December 28, 2010

கோடீஸ்வரர்களை உருவாக்கும் திட்டம்: மஇக தலைவர்களின் வாடிக்கையான வேடிக்கை, குலசேகரன்

மலேசியாகினி செய்தி 27/12/2010

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மலேசியாவில் எத்தனைக் கோடீஸ்வரர்கள், அன்றைய காலத்திலிருந்து இன்றைய நாள் வரை இருந்தார்கள் மற்றும் அவர்களை உருவாக்கியது யார் என்று மஇகவின் புதிய தேசிய தலைவர் ஜி. பழனிவேல் கவனிக்க வேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள் மக்களின் நலனிலும் நாட்டின் மேம்பாட்டிற்கும் அயராது உழைக்க வேண்டும். 

அதனைத் தவிர கோடீஸ்வரர்களை உருவாக்க திட்டமிடுதல் கூடாது என்று டிஎபி ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

உழைப்பை முதலீடாக வைத்து மாறு பட்ட சிந்தனையை அடித்தளமாக கொண்டு உயர்ந்தவர்கள்தான் நாட்டில் காணப்படும் பல இந்திய கோடீஸ்வரர்கள். ஒரு சிலரின் பெயர்கள் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அவர்களின் உயர்வை மக்கள் நன்கு அறிவார்கள். இவர்களின் சிந்தனையில் “சுய நம்பிக்கை” மட்டுமே மேலோங்கியிருந்ததே தவிர அரசியல் பின்னணி அல்ல என்று அவர் மேலும் கூறுகிறார்.



மஇகவின் புதிய தேசிய தலைவர் பல கோணங்களில் இந்திய சமுதாயத்திற்கு “விடுதலை” வாங்கித்தர முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு மக்களின் அடிப்படை விவகாரத்திலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.



மலேசியாவில் நமக்கு கூட்டறவு சங்கம் இல்லையா? இருக்கின்ற கூட்டுறவு சங்கங்களுக்கு யார் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குவது? அனுபமுள்ள கூட்டுறவுகளை ஒதுக்கி ஒரு புதிய ஒன்றை ஆரம்பித்து மீண்டும் பழைய பல்லவியை 

பாடவா? என்று குலசேகரன் தமது அறிக்கையில் வினவியுள்ளார்.

மஇகவின் புதிய தலைவர் என்ற முறையில், முன்னாள் தலைவரின் அனைத்து மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கான சிந்தனையைத் தீட்ட வேண்டும். முன்னாள் தலைவர் செய்த திட்டமிடுதல் கொள்கையை கைவிட வேண்டும்.

“இந்திய சமூதாயத்திற்கு நான் பெரிய திட்டம் வைத்துள்ளேன் என்பது பழைய பல்லவி. அதிலும் பழைய தேசிய தலைவரின் வீரமற்ற வசனங்கள் அவை. அதனை பின்மாற்றாமல் இருந்தால் போதும்.”

இத்தனைக் காலமாக ஜி.பழனிவேல் துணை அமைச்சராக இருந்தபோது, இதுபோன்ற வார்த்தைகளைக் கூறியதே கிடையாது. மேலும், முன்னாள் தேசிய தலைவர் ச.சாமிவேலு தனது சக தலைவர்களை தனது இருப்பு கரம் கொண்டு கட்சியை வழி நடத்தியுள்ளார் என்பதும் இதன் வழி வெளிப்படையாகிறது. இதற்குத்தான் மக்கள் உங்களை முன்பு தேர்ந்தெடுத்தார்களா? என்று குலசேகரன் கேட்கிறார்.

“அப்பொழுது எல்லாம் மௌனம் சாதித்துவிட்டு இப்பொழுது சீறிப் பாய்வதின் நோக்கம் என்ன? இப்பொழுதுதான் சிந்தனை புரட்சி மலர்ந்ததா? இலவச கல்வியை அரசாங்கம் வழங்கினாலும், இந்நாட்டில் இன்னும் பல நூறு தமிழ்ப்பள்ளிகள் அடிப்படை வசதி இன்றி இருக்கின்றன. அதற்கு ஒரு முடிவு பிறக்க வழி செய்யலாமே. பகுதி உதவி பெறும் தமிழ்ப்பள்ளிக்கூடங்களை அரசாங்க பள்ளிகளாக மாற்ற ஏதேனும் திட்டம் உள்ளதா? இல்லையென்றால், அதற்குத் திட்டம் போடவும். அரசாகங்கத்திடம் பரிந்துரை செய்யவும்”, என்று தமது அறிக்கையில் குலா கோருகிறார். 

கல்வி நிலையில் நமது இந்தியர்களின் வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது? ஆய்வு செய்தீர்களா? அதனை மாற்ற பல திட்டங்களை உருவாக்க வேண்டும். இன ரீதியான உயர்கல்விக்கு தேர்ந்தெடுத்தல் முறையில் இந்தியர்களுக்கு நிரந்த வாய்ப்பு கிடைக்குமா? சீர்தூக்கி கவனியுங்கள்.  மேலும் எம்.ஆர்.எஸ்.எம் போன்ற கல்லூரிகளில் இந்தியர்களுக்கு வாய்ப்பு எத்தனை விழுக்காடு வழங்கப்படுகிறது, என்பது போன்ற கல்வி சம்பந்தமான மேம்பாட்டு திட்டங்களை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

மக்கள் நலன் பெரும் திட்டம் என்பது, தலைவர் நாற்காலிக்கு வந்தவுடன் செயல்படுத்துவது அல்ல. வருவதற்கு முன்பு செய்து காட்ட வேண்டும். 

அப்பேர்பட்டவர்தான் உண்மையான மக்கள் நல தொண்டர், தலைவர் என்று சுட்டிக் காட்டிய குலா, சிதைந்துப்போன இந்திய சமுதாயத்தின் பணத்தை மறுபடியும் சுரண்ட நினைப்பது என்ன நியாயம் என்று கேட்கிறார்.

புதிய தலைவர் என்ற முறையில், நமது சமூதாய வளர்ச்சிக்கு சிறப்புச் சேர்க்க கொள்கை வசனங்கள் பரப்புவதை நிறுத்திவிட்டு நல்வழி செயல் திட்டங்களை உறுதிப்படுத்துமாறும், நாட்டின் மாற்றங்களுக்கு முகங்கொடுத்து, இந்திய சமுதாயத்தின் ஏற்றத்தை குறிக்கோளாகக்கொண்டு தலைமைப் பொறுப்பை வகித்தால் நல்லது என்று குலசேகரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment