மலேசியாஇன்று செய்தி:
பேராக் மாநில ஆட்சியை தேசிய முன்னணி அபகரித்தது. இந்தியர்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவதாக கூறி பேராக் மாநிலத்திலுள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் சுமார் 2,000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது என்று டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.
ஆனால், அந்த நிலம் யாரிடம் வழங்கப்பட்டது? பேராக் அறவாரியத்திடம் வழங்கப்பட்டது. அவ்வாறியத்தின் உறுப்பினர்கள் யார்? மாநிலச் செயலாளர், மாநில நிதி ஆலோசகர் மற்றும் பல தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களும் அதில் இடம் பெற்றுள்ளனர்.
“எத்தனை இந்தியர்கள் அந்த வாரியத்தில் இடம் பெற்றுள்ளனர்? “பூஜ்யம்”தான் பதில். அதில் இடம் பெறுவதற்கு தேசிய முன்னணி ஆட்சியில் ஓர் இந்தியர் கூடவா இல்லை? அல்லது மஇகாவில் தகுதியான யாரையும் தேசிய முன்னணி கண்டுபிடிக்கவில்லையா?”, என்று கேட்கிறார் குலா.
இதில் நகச்சுவை இருக்கிறது. ஏனென்றால், பேராக் மாநில மஇகா தேசிய முன்னணியில் ஒரு கோமாளித்தனமான பங்காளித்துவத்தைக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து மஇகா சிங்கம் கர்ஜிக்கவில்லை.
தமிழ்ப்பள்ளிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிலம் இந்திய பிரதிநிதி இல்லாமல் எப்படி நடைமுறைப்படுத்தப்படும்?
தேசிய முன்னணி இனவாதமாக நடந்துகொள்வதில்லை என மார்தட்டிக்கொள்ளும் மஇகா இந்தச் சூழ்நிலைக்கு என்ன பதில் தர முடியும்?
பேராக் மாநில ஆட்சியில் இந்தியர்களின் பிரதிநிதி இல்லை என்பது உண்மை. மேலும், அங்கே இருக்கும் சட்டமன்ற தலைவரும் ஒரு கண்துடைப்புக்கே என்பதும் இந்த விசயத்தில் உண்மையாகிறது.
அந்த நிலத்திற்கான பிரிமியம் ஏன் இதுநாள் வரையில் செலுத்தப்படவில்லை? பிரிமியம் செலுத்தப்படவில்லை என்றால் வழங்கப்பட்டுள்ள 2,000 ஏக்கர் நிலம் பறிபோய் விடும் என்பது அனைவரும் அறிந்ததே.
“அந்த வாரியத்தில் இடம் பெற்றிருப்பவர் மாநிலச் செயலாளர். அப்பிரிமியம் கட்டவில்லை என்றால் நிலம் பறிபோய் விடும் என்பது தெரிந்தே கட்டவில்லையா? அல்லது, இந்த அறவாரியத்திற்குத் தமிழ்ப்பள்ளிகளின் மீது அக்கறையில்லையா?”, என்று குலசேகரன் வினவுகிறார்.
ஆட்சியை அபகரித்தப் பிறகு தேசிய முன்னணி பல முக்கிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது. அதில் இந்தியர்களின் மனதைக் குளிர வைப்பதற்காக இந்த 2,000 ஏக்கர் நிலம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தைப் பற்றி வரும் தகவல்கள் இத்திட்டம் வெற்றி பெறும் என்பதைக் கேள்விக்குறியாக்குகின்றன என்றார் குலா.
இந்த நிலத்தின் கதி என்ன? பேராக் அறவாரியம் அந்த பிரிமியம் தொகையைச் செலுத்துமா அல்லது சாக்குப்போகுச் சொல்லி திட்டத்திற்குக் குழிபறிக்குமா? இக்கேள்விகளுக்கு முழுமையான பதில் ஒன்றுமில்லை என்பதுதான் இதுவரையிலான நிலை.
“இந்த விவகாரத்தில் மிகச் சிறந்த அரசியல் நாடகம் நடத்தியது யார்? தேசிய முன்னணியா அல்லது மஇகாவா? இலவசமாகக் கொடுக்கப்பட்ட இந்த நிலத்தை இன்றுவரையில் எந்த ஒரு திட்டமுமின்றி போட்டு வைக்கப்பட்டிருக்கும் பேராக் அறவாரியத்தை நாம் குறை சொல்வதா அல்லது இவ்விவகாரம் குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் இருக்கும் மஇகா தலைவர்களைக் குறை கூறுவதா?, என்று கேட்கிறார் எம்.குலசேகரன்.
No comments:
Post a Comment