Monday, March 28, 2011

குலசேகரனின் குரல் மக்கள் கூட்டணியின் குராலாகும், மனோகரன் எம்.பி


இண்டர்லோக் நாவல் பிரச்னை என்பது இந்தியர்களின் பிரச்னை என்று ம.இ.கா குரல் கொடுக்கும் வேளையில், இண்டர்லோக் மலேசியர்களின் பல இன மக்களின் ஒற்றுமையின் நீரோட்டத்தை சிதைக்கும் என்ற கோணத்தில் மு.குலசேகரன் குரல் எழுப்புகிறார் என்பதனை அனைவரும் முதலில் அறிந்திருக்க வேண்டும் என தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.மனோகரன் தெரிவித்தார்.
இண்டர்லோக் நாவலின் உள்ளடக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் என்பது இந்தியர்களின் எதிர்ப்பு குரலின் பலத்தின் பிரதிபளிப்பாகும். ஆனால் அந்நாவல் தடைசெய்ய வேண்டும் என்பது மக்கள் கூட்டணியின் கோரிக்கையாகும். அதற்கு, மக்கள் கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மு.குலசேகரன் முன்னெடுத்து எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்பது உண்மை.
அதே சமயத்தில் நாடாளுமன்றத்தில் குலசேகரனின் குரல் மக்கள் கூட்டணியின் குரலாக திகழ்கிறது. ஆனால், ம.இ.கா வின் சௌகரியமான எதிர்ப்புக் குரல் தேசிய முன்னணியின் குரலா என்பதனை சகோதரர் கே.பி.சாமி அவர்கள் முதலில் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என மனோ மேலும் சொன்னார்.
இது தொடர்பில் மனோகரன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மக்கள் கூட்டணியின் தலைவர்கள் திருவாய் மலர வில்லை என்று சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.  அன்வார் இப்ராஹிம், லிம் கிட் சியாங் மற்றும் ஹடி அவாங் போன்ற தலைவர்கள் பேசினால் மட்டுமே மக்கள் கூட்டணியின் நிலைப்பாடு பிரதிபளிக்கும் என்று சொல்வது அர்த்தமற்றது. குலசேகரனின் குரல் மக்கள் கூட்டணியின் வகைச்சொல் என்பதனை அறிந்திருக்க வேண்டும்.
சகோதரர் கே.பி.சாமி ஒரு சிறந்த போராட்டவாதி. மேலும், இந்திய மக்களின் சேவகனாக இருக்கும் வேளையில், ம.இ.கா வின் உண்மையான நேர்மையான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். ஆய்வு செய்யப்பட்ட முடிவு அறிவித்த பொழுது குலசேகரன் கம்பிரமாக எழுந்து நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் மொகைதீனை எதிர்த்து குரல் கொடுத்தார் என்பது மறைக்க முடியாத உண்மை.
ஆனால், ம.இ.க-வின் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தும் ஒன்றுமே பேசவில்லையே. அதுதானே வேதனையாக உள்ளது. முதுகெலும்பு இல்லை என்று குலசேகரன் சொன்னதில் எந்த ஒரு தவறும் கிடையாது. காரணம் நாடாளுமன்றத்தில் அந்த சூழ்நிலை தான் உண்மை நிலையின் தோற்றம்.
மேலும், இன்றைய நாள் வரை நாடாளுமன்றத்தில் இந்த இண்டர்லோக் நாவலுக்கான எதிர்ப்புக் குரல் ம.இ.கா-விடம் இருந்து கிளம்பியது கிடையாது. இது நாள் வரை  ம.இ.கா-வின் பிரதிநிதிகள் எந்த ஒரு தீர்மானத்தையும் நாடாளுமன்ற விவாதத்திற்கு சமர்பித்ததே கிடையாதே? அதனை என்ன என்று சொல்வது?
நான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில்  இண்டர்லோக் நாவலுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்த பொழுது, சபாநாயகர் அதனை புறக்கணித்து விட்டார். அந்த வேளையில் நான் எழுந்து குரல் கொடுத்த பொழுது ம.இ.கா தோழர்களின்  ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு வேதனை தான் கிட்டியது. அந்த தருணத்தில் எதனால் ம.இ.காவின் தோழர்கள் வாய் மூடி மௌனம் சாதித்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.
மக்கள் வழங்கிய அங்கிகாரத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கும் இந்திய பிரதிநிதிகள் அனைவரும் ஒற்றுமையாக கூடி பேசியிருந்தால், குலசேகரன் அவ்வாறு சொல்வதற்கு இடம் பிறந்திருக்காதே. ஆனால், எதை செய்தாலும் ம.இ.கா அரசியல் நோக்கத்துடனும் சுயநலத்துடனும்  செய்வது, இந்திய சமுதாயத்திற்கு பாதிப்பை தருகிறது என்ற உண்மை நாம் காலம் காலமாக அறிந்த ஒன்று.
இந்த நாவல் தடைசெய்ய வேண்டும் என்ற குரல் ஒருபுறம் எழுந்த வண்ணமாக இருக்க, மறு ஆய்வுக்கு ஒப்புதல் தெரிவித்தது ம.இ.கா என்பது உண்மை.
இன்று அந்நாவல் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பது மக்கள் கூட்டணியின் கோரிக்கை. ஆனால், திருத்தப்பட்ட பிறகு பயன்படுத்தப்படும் என்பது தேசிய முன்னணியின் அசையாத நிலைப்பாடு. இதில் எந்த கோரிக்கைக்கு ம.இ.கா சரி என்று தைரியமாக சொல்ல இயலும்?
ம.இ.கா நியமித்த பிரதிநிதிகள் மாற்றங்களுக்குரிய வேலையை மட்டும் தான் செய்ய முடியும். ஆனால், மக்களின் கோரிக்கை அதுவா? மக்களின் கோரிக்கை தடைசெய்ய வேண்டும் என்பதாகும். அதற்கு என்ன செய்கிறது ம.இ.கா ? இன்றைய நாள் வரை தேசிய முன்னணியின் ஒரே ஒரு அம்னோ அல்லது ம.சீ.ச-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றிருக்குமா ம.இ.கா ? கிடையாது.
சகோதரர் கே.பி.சாமி அவர்கள், தனது அறிக்கையில் மு.குலசேகரனிடம் தொடுத்த அனைத்து கேள்விகளையும் ம.இ.கா-வின் தேசிய தலைவரிடமும், ம.இ.கா-வின் முழு அமைச்சரிடமும் முதலில் கேட்க வேண்டும். பட்டியலை பிறரிடம் கேட்பதை விட, முதலில் பட்டியலை போட்டு வித்தியாசங்களை கவனிக்கவேண்டும் என மனோகரன் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment