மலேசியாஇன்று செய்தி
7 APR | தலைப்பு செய்தி.
7 APR | தலைப்பு செய்தி.
பக்காத்தான் ரக்யாட்டின் சரவாக் தேர்தல் பரப்புரை அமோகமாக தொடங்கியுள்ளது. நேற்றிரவு கூச்சிங், சிபு, மிரி ஆகிய இடங்களில் அதன் பரப்புரையைச் செவிமடுக்க ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
கூச்சிங்கில் ஐஓஐ வாணிக வளாகத்தில் உள்ள திறந்தவெளி அங்காடி மையத்தில், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் உள்பட மாற்றுக்கட்சித் தலைவர்களின் உரைகளைக் கேட்பதற்கு சுமார் ஐயாயிரம் பேர் திரண்டிருந்தார்கள்.
மீரியில், பூல்வார்ட் வாணிக மையத்திலும், சிபுவில் நிபுணத்துவ மருத்துவ மையத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
மக்கள் பெருந்திரளாக வந்ததைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் அதை தம் டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி குறிப்பிட்டதுடன் இது பக்காத்தானுக்கு நல்லதொரு தொடக்கம் என்றும் கூறினார்.
2006 மாநிலத் தேர்தலுடன் ஒப்பிடும்போது இப்போது தேர்தல் பரப்புரைகளுக்கு வருவோர் உறுதியான முடிவுடன் வருவதாக உள்ளூர் செய்தியாளார்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தனர்.
கூச்சிங்கில் கூட்டம் நடைபெற்ற இடத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்ந்து விட்டதால், கூட்டத்தினர் பேச்சுகளைக் கேட்பதற்கும் பேச்சாளர்களைப் பார்ப்பதற்கும் வசதியாக சுற்றிலும் ஒலிபெருக்கிகளும் வீடியோ திரைகளும் வைக்கப்பட்டன.
குவான் எங்தான் நேற்றைய கூட்டங்களின் நாயகனாக விளங்கினார். மலாய், ஆங்கிலம், சீனம் ஆகிய மொழிகளில் கலந்து பேசிய அவர் “இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய போரில்” குதித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
பிஎன் பங்காளிக் கட்சியான எஸ்யுபிபி பல புதிய முகங்களைக் களம் இறக்கியிருந்தாலும் பக்காத்தானின் உண்மையான எதிரி நீண்ட காலம் முதலமைச்சராக இருக்கும் அப்துல் தாயிப் மகமுட்தான் என்று பினாங்கு முதலமைச்சர் கூறினார்.
“எஸ்யுபிபி வேட்பாளர்கள் திறமையானவர்கள்தான். ஆனால், இவர்களுக்கு வாக்களிக்குமுன்னர் ஒரு கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும்.
“இந்தப் புதிய வேட்பாளர்கள் ‘பெக் மோவை’ஆதரிப்பவர்களா?”, என்று தாயிப்பின் நரைமுடியைக் குறிக்க சரவாக் சீனர்கள் பேச்சுவழக்கில் குறிப்பிடும் சொல்லைப் பயன்படுத்தினார் குவான் எங்.
“அவர்கள் ஆமாம் என்று சொன்னால் வாக்காளர்களுக்கு அது பிடிக்காது. இல்லை என்று சொன்னால் தாயிப்புக்கு ஆத்திரம் வந்துவிடும். அதன் விளைவு பயங்கரமாக இருக்கும்.”
தாயிப்பும் துணை முதலமைச்சரும் எஸ்யுபிபி தலைவருமான ஜோர்ஜ் சானும் பதவி விலகுவதாகக் கூறியிருப்பதை வைத்தும் குவான் எங் கிண்டலடித்தார்.
“2006-இலும் இதையேதான் சொன்னார் சான். பதவி விலகினாரா? அதைச் செய்யவில்லை,ஆனால், தாயிப் செய்ததுபோல் மறுமணம் செய்துகொண்டார்.
“அவர்கள் பதவி விலகுவர் என்று நம்புகிறீர்களா?”, என்றவர் வினவினார்.
மீரியில், ச்சான் ஆறாவது தவணையாக சட்டமன்றத்துக்குப் போட்டியிடும் பிசா தொகுதியிலும் டிஏபி ஒரு தேர்தல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அங்கு 2006 தேர்தலைக் காட்டிலும் ஆதரவு கூடியிருந்ததாக டிஏபி இளைஞர் தலைவர் அந்தோனி லோக் கூறினார். அங்கு தேர்தல் நிதிக்கு ரிம10,200 திரட்டப்பட்டது.
கூச்சிங் கூட்டத்தைப் போலவே இங்குப் பேசியவர்களும் தாயிப்பைக் கிண்டல் செய்தார்கள்.
பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார், சிறிது நேரம் சீனத்தில் பேசி கூட்டத்தின் பாராட்டைப் பெற்றார். இன்னொரு உதவித் தலைவரான தியான் சுவா, பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் சரவாக்கின் எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமத்தைத் திருப்பிக் கொடுக்கும் என்று வாக்குறுதி அளித்தார்.
பண்டார் கூச்சிங் முன்னாள் எம்பி சிம் குவான் யாங், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரேசா கொக் ஆகியோரும் அக்கூட்டத்தில் பேசினார்கள்.
சிபுவில், சரவாக் டிஏபி தலைவர் வொங் ஹோ லெங், கிட் சியாங் ஆகியோரின் உரையைக் கேட்க தெருவெல்லாம் பெருங் கூட்டம் கூடியது
No comments:
Post a Comment