உழைப்பாளர் வர்க்கம் அனைவரும் மே முதல் நாளான இந்த தொழிலாளர் நாளை உரிமையுடனும் உணர்வுடனும் கொண்டாட வேண்டுவதோடு இந்நன்னாளில் மலேசியா வாழ் தொழிலாளர் சமுதாயத்திற்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் தனது தொழிலாளர் நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
குலசேகரன் வெளியிட்டுள்ள தொழிலாளர் வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
உண்ண உணவு, உடுக்க உடை, வாழ வீடு இவற்றோடு உலக வாழ்க்கைக்குத் தேவைப்படும் வசதிகள் அனைத்தையும் ஓயாத உழைப்பால் நமக்கு உருவாக்கித்தரும் தொழிலாளர் சமுதாயத்தை நினைத்து வணங்கிப் போற்றும் உன்னதமான நன்னாள் இம் ‘மே நாள்’.
உழைக்கும் தொழிலாளர் சமூகத்தின் உரிமையை உலகுக்கு உணர்த்திடும் மே முதல் நாள், உலக நாடுகளில் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. நேர்மையான தொழிலாளர் கொள்கையை மதித்து , அதன் வழி நின்று அனைத்து தொழிலாளர் நலன்களைக் காக்கும் உணர்வோடு இந்த அரசாங்கம் செயல்பட வேண்டும்.
மலேசிய நாட்டில், பல்லின மக்கள் ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட பல்வேறு தொழிலாளர் நல திட்டங்களை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட குறைந்தபட்ச வருமான தொகையை முதலில் அரசாங்கம் வழங்க சட்ட திருத்தங்களை நிறைவேற்றி அமுல்படுத்த வேண்டும்.
ஏழை தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அடிப்படை வசதியினை அதிகப்பட்சமாக செய்து தர வேண்டும்.
தோட்ட மக்களும் அனைத்து சலுகைகளும் பெற்று வாழ்கையில் உயர அரசாங்கம் தனி கவனம் செலுத்த வேண்டும். தொழிலாளர் வர்க்கம், அரசாங்கத்தின் ஊக்கத்தொகை ஆகியவை தடையின்றிக் கிடைத்திடவும் ஆவணம் செய்யவேண்டும். மேலும் பணியிடங்களில் பாலியல் வன்முறை கலாச்சாரத்தை அடியோடு களைந்து பெண்வர்கத்தின் கௌரவத்தை நிலைநாட்ட அனைவரும் பாடுபட வேண்டும்.
இப்படி எண்ணற்ற சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மலேசியாவில் வாழும் அனைத்து தொழிலாளர் குடும்பங்கள் பயன்பெரும் வண்ணமாக தொடர்ந்து பாடுபட்டு வரும் தொழிலாளர்களின் தோழன் ஜ.செ.க-வின் சார்பில், அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது இனிய இதயம் கனிந்த மே தின நல்வாத்துக்களை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன் என குலசேகரன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment