Saturday, August 21, 2010

மலேசியாஇன்று செய்தி - டிண்டிங்ஸ் நிலத்தை”குட்டி இந்தியா” என்று அறிவித்திடுக


டிண்டிங்ஸ் இந்திய பாரம்பரிய நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கும் குழு, சித்தியானில் நல்ல விலைபோகும் பகுதியில் 2.2 ஹெக்டாரில் அமைந்துள்ள அந்நிலத்தை பேராக் அரசு “குட்டி இந்தியா”என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறது.

உத்தேச குட்டி இந்தியா,எதிர்காலத்தில் இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் என்று அது எதிர்பார்க்கிறது.

அக்கனவு நனவாக அரசாங்கம் நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் அக்குழு விரும்புகிறது. நேற்று அக்குழு மஞ்சோங் நில அலுவலகத்திடம் ஒப்படைத்த மகஜரில் இப்பரிந்துரைகள் அடங்கியுள்ளன.

பாரம்பரியமாக இந்தியர்களுக்குச் சொந்தமான அந்நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும் முயற்சியின் தொடர்பில் அங்கு வாழும் இந்தியர்களின் நிலைப்பாடும் மன உணர்வுகளும் கோரிக்கைகளும் அம்மகஜரில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

மகஜரை மாவட்ட நில அதிகாரி அஹமட் ஷாபியிடம் அல்லது அவரின் உதவியாளரிடம் ஒப்படைக்க 30-பேரடங்கிய குழு ஒரு மணி நேரமாகக் காத்திருந்தததாகவும் ஆனால் அவர்கள் வரவில்லை என்றும் டிஏபி தேசிய உதவித் தலைவரும் மாநில துணைத் தலைவருமான எம்.குலசேகரன் கூறினார்.

இறுதியில் அதனைப் பெற்றுக்கொண்ட நில அலுவலகப் பணியாளர் ஒருவர், மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிர் தள்ளுபடி செய்தாலொழிய இந்தியர் பாரம்பரிய நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கை தொடரும் என்று அக்குழுவினரிடம் தெரிவித்தார். அக்குழுவில் டிஏபி மாநிலத் தலைவர் இங்கே கூ ஹாமும் இடம்பெற்றிருந்தார்.

இந்திய விவகார ஆலோசகர் என்ன செய்கிறார்?

இந்த நிலத்தில் எஸ்ஆர்கே சிம்பாங்க் எம்பாட் தொடக்கப்பள்ளி கட்டும் விசயத்தில் மாநில அரசுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் முறையான தொடர்பு இல்லாமல் இருப்பது குறித்து குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

“இந்த நிலத்தின் பாரம்பரிய மதிப்பு குறித்து பேராக் மாநில பாரிசான் இந்திய விவகார ஆலோசகர் ஏன் ஸாம்ப்ரியிடம் தெரிவிக்கவில்லை? அல்லது, இது நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான மாநில அரசின் முடிவுடன் வீரசிங்கம் ஒத்துப்போன விசயமா?, என்று ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினரான குலசேகரன் வினவினார்.

அது 1930 களில், சித்தியானைச் சுற்றியிருந்த 35 தோட்டங்களில் வாழ்ந்த பால்மரம் வெட்டும் இந்திய தொழிலாளர்களிடம் திரட்டப்பட்ட நன்கொடையைக் கொண்டு வாங்கப்பட்ட நிலமாகும்.

No comments:

Post a Comment