Saturday, October 2, 2010

குலா விளக்கக்கூட்டத்தை ரத்து செய்தார்

பேராக் டிஏபி கட்சித் தலைமைத்துவத்தில்  நெருக்கடி நிலவுவதுபோல் தெரிகிறது. அது பற்றி விளக்குவதற்கு மாநில துணைத் தலைவர் எம்.குலசேகரன் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

சண்டையிடுவதை நிறுத்திக்கொண்டு நிலைமையைத் தணிவிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்குமாறு டிஏபி தலைமைத்துவம் அவரைக் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிகிறது.

இன்றைய செய்தியாளர் கூட்டம், “இங்கே-இங்கா” உறவினர்கள் அவர்களின் அணியில் சேராதவர்களை ஒழித்துக்கட்ட மேற்கொண்ட முயற்சிகளை அம்பலப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
மாநிலத் தலைவர் இங்கே கூ ஹாம், செயலாளர் இங்கா கோர் மிங் ஆகியோரையும் அவர்களின் ஆதரவாளர்களையும் உள்ளடக்கியதுதான் “இங்கே-இங்கா” அணி. இவ்விருவரின் அதிகாரத்துவ பாணியிலான தலைமைத்துவத்தில் மற்ற தலைவர்கள்  நீண்ட காலமாகவே அதிருப்தி கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரு தரப்பாருக்குமிடையிலான தகராற்றைத் தீர்ப்பதற்காக நேற்றிரவு ஈப்போவில் உயர்நிலை சமரசக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.  கட்சி ஆலோசகர் லிம் கிட் சியாங் உள்பட உயர் தலைவர்கள் அதில் கலந்துகொண்டார்கள்.

ஆனால், எந்தத் தீர்வும் காணப்படாமலேயே அக்கூட்டம் முடிந்தது. “இங்கே-இங்கா” அணியினர் சமரசம் செய்துகொள்ளவும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றவும் மறுப்பதாக குலசேகரனின் அணியினர் கூறினர்.

இன்று குலசேகரனைத் தொடர்புகொண்டு பேசியபோது, ஒரு வாரம் வெளிநாடு செல்வதாகவும் திரும்பிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டப்போவதாகவும் கூறினார்.

நேற்றிரவு சமரசப் பேச்சுக்களில் இழுபறி நிலவியதாகவும் அதனால் 90 நிமிடங்களுக்குப் பின் அதிலிருந்து  வெளியேறியதாகவும் அவர் சொன்னார்.
“மாநிலத் தலைமைத்துவத்தில் நிலவும் பிரச்னைக்கு ஒரு உருப்படியான தீர்வு காண முடியாதிருப்பதை நினைத்தால் வெறுப்பாக இருக்க்கிறது.”
பேராக் டிஏபி-யைத் தங்கள் பிடிக்குள் வைத்துக்கொள்ள “இங்கே-இங்கா”அணி மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டு தாமும் வேறு சில தலைவர்களும் ஆத்திரம் அடைந்திருப்பது உண்மைதான் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

“எவ்வகையிலும் வெற்றிபெறவும் பதவியில் தொடர்ந்து இருக்கவும் அவர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள்.

“ஒன்றுபட்ட அரசியல் போராட்டம் என்ற கட்சிக்கொள்கை மறக்கப்பட்டு தன்னலமும் அணிசார்ந்த பூசல்களும் தலைதூக்கியுள்ளன”, என்றாரவர்.
பல்வேறு நிகழ்வுகளின் காரணமாக, மாநிலத் தலைவர்களுக்கிடையில்  சச்சரவு மூண்டதை அடுத்து நேற்றிரவு சமரசப் பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்ப்பட்டதாக குலசேகரனுக்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று கூறியது.
“இங்கே-இங்கா” அணியினர் மூடப்பட்ட கிளைகளைப் புதுப்பிப்பதுடன்  எதிரணிக்கு ஆதரவு அளிக்கும் கிளைகள் நவம்பர் மாதக் கட்சித் தேர்தலில் வாக்களிப்பதைத் தடுக்க அவற்றை ரத்து செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இங்கேயும் இங்காவும்  மாநில முழுவதிலும் குலசேகரனையும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட மற்ற தலைவர்களையும் குறை சொல்லித் திரிகிறார்கள் என்பது இன்னொரு குற்றச்சாட்டு.
மேலும், எதிரணியினரின் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில், குறிப்பாக குலசேகரனின் ஈப்போ பாராட் தொகுதியிலும் மாநிலச் செயலாளர் லியோங் மெய் மிங்கின் ஜாலோங் தொகுதியிலும்  “இங்கே-இங்கா” அணியினர் புதிய கிளைகளை அமைத்திருக்கிறார்கள். அத்துடன் அங்கு ஏற்கெனவே சேவை மையங்கள் இருக்கும்போது இவர்களும் சேவை மையங்களை அமைத்திருப்பதாக அந்த வட்டாரம் கூறியது. 
“நீண்ட காலம் வாயைப் பொத்திக்கொண்டு இருந்துவிட்டோம். இனி, பொறுப்பதற்கில்லை”, என்று அவ்வட்டாரம் தெரிவித்தது.

எதிரணியினரின் கிளைகளை ரத்துச் செய்ய ‘இங்கே-இங்கா’ அணியினர் மகஜர் ஒன்றைத் தயாரிக்க முனைந்ததுதான் சச்சரவு வெளிப்படையாக வெடிக்கக் காரணமாக இருந்தது.

“தெபிங் திங்கி, பாசிர் பெடாமார் முதலிய கிளைகளை எப்படி ரத்துச் செய்ய முடியும்? அவை நீண்ட காலமாக இருந்து வரும் கிளைகள். 2008 தேர்தலில் கட்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவை”, என்றந்த வட்டாரம் கூறிற்று.

நேற்றைய சமரசக் கூட்டத்தில் லிம்மும் மற்ற தேசிய தலைவர்களும் பேராசைகொண்டு செயல்பட்ட “இங்கே-இங்கா” அணியினரைக் கடுமையாகக் கண்டித்தனர்.

ஆணவமும் மட்டுமீறிய தன்னம்பிக்கையும் அழிவுக்கு இட்டுச் செல்லும் என்று லிம் கூறியதாக தெரிகிறது.

இங்கே தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் வேறு விசயங்களில் கவனம் செலுத்த முற்பட்டது கூட்டத்தினருக்கு எரிச்சலைத் தந்ததாக அந்த வட்டாரம் கூறியது.

இப்போதுள்ள நெருக்கடிக்குத் தீர்வுகாண இங்கே அல்லது இங்கா பதவிதுறக்க வேண்டும், அது ஒன்றே வழி என்று குலசேகரனும் “இங்கே-இங்கா” அணிக்கு எதிரானவர்களும் கருதுவதாகத் தெரிகிறது.

அதன்மூலமாகத்தான் பேராக் டிஏபிமீது அவர்களுக்குள்ள பிடியை உடைத்தெறிய முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இவ்விவகாரம் தொடர்பில் இங்கா-இங்கே கருத்தை அறிய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவர்களிடமிருந்து இதுவரை பதில் இல்லை.

No comments:

Post a Comment