Saturday, October 2, 2010

பேராக் மாநில டிஎபி பதவியிலிருந்து குலா விலகுகிறாரா?

பேராக் மாநில டிஎபியில் நிலவும் உட்பூசல் காரணமாக மாநில துணைத் தலைவர் எம். குலசேகரன் அப்பதவியிலிருந்து விலகப்போவதாக வலுவான வதந்தி பரவியுள்ளது.

டிஎபியின் தேசிய துணைத் தலைவரும் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் பேராக் மாநில தலைமையத்துவத்தில் காணப்படும் இன்றையக் குறைபாடுகள் குறித்து இன்று அறிவிக்கப்போவதாக நேற்றிரவு அவரது டிவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

நேற்றிரவு ஈப்போவில் நடந்த கட்சியின் தலைமையத்துவ கூட்டத்திற்குப் பின்னர் அச்செய்தியை அவர் வெளியிட்டார்.

மாநில பதவியிலிருந்து விலகப்போவதற்கான வலுவான அறிகுறிகளை அவர் காட்டியுள்ளார். ஆனால், அவர் இன்னும் கட்சி உறுப்பினர் என்ற நிலையில் உள்ளார்.

“டிஎபியை விட்டு விலகும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால், மாநில பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து சிந்தித்து வருகிறேன். போதும் போதும் என்றாகிவிட்டது. நாளை (இன்று) நடக்கவிருக்கும் செய்தியாளர் கூட்டத்தில் நான் அனைத்தையும் விளக்குவேன்”, என்று நள்ளிரவு மணி 12.45 க்கு அவர் டிவிட்டர் செய்தார்.

இருப்பினும், கட்சியின் தேசியத் தலைவர்கள் அவருடன் நடத்திய கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் குலசேகரன் தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டுள்ளார் என்று ஒரு வட்டாரம் கூறியது.
இருந்தாலும், அவர் திட்டமிட்டிருந்தவாறு இன்று காலை மணி 10.30 க்கு அவரது செய்தியாளர் கூட்டம் பேராக் டிஎபி த்லைமையகத்தில் நடைபெறக்கூடும்.

டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், உதவித் தலைவர் டான் கோக் வாய் மற்றும் தேசிய அமைப்புச் செயலாளர் தெரசா கோக் ஆகியோர் உடனடியாக நேற்றிரவு ஈப்போ சென்றடைந்தனர். அவர்கள் உயர்நிலை சமரசப் பேச்சில் ஈடுபட்டிருந்தனர்.

No comments:

Post a Comment