Saturday, November 27, 2010

இனவாத புரட்சியா? அல்லது இழிளிவு நிலையின் முதிர்ச்சியா? - மு.குலசேகரன்


இனவாத வார்த்தைகளை பள்ளிகளில் அள்ளி வீசிவது மலேசியாவில் உள்ள பல மலாய் இனத்தை சார்ந்த ஆசிரியர்களின் இடையே ஒரு வீர தீர செயலாக கருத்தப்படுகிறது. மாணவர்களுக்கு ஒற்றுமையின் கூற்றை விளக்க வேண்டிய ஆசிரியர்கள், பல இன மாணவர்கள் மத்தியில் நடைபெறும் கூட்டங்களில் இந்தியர்களையும் சீனர்களையும் குறி வைத்து கேவலப்படுத்துகின்றனர். பள்ளி பருவகாலங்களில் இது போன்ற கேலிப் பேச்சுகளுக்கு ஆளாவது மனதில் வெறுப்புத்தன்மையையும் பகைமை குணத்தையும் உருவாக்கும் என்பதனை இவர்கள் மறந்து விடுகிறார்கள். 

இனவாதம் என்ற பெயரில், ஆய்வு கட்டுரைகள் எழுதுவதும், பொது இடங்களில் இழிவாக பேசுவதும், அரசாங்க பயிற்சி முகாம்களில் இனவாத கொள்கைகளை விதைப்பதும் போன்ற செயல்கள் சமீபகாலமாக எந்த ஒரு கட்டுபாடின்றி துளிர் விட்டு படர ஆரம்பத்துவிட்டது. இதனை அரசாங்கம் ஒரு பொழுதும் கடுமையாக கருதாமல் சாக்கு போக்கு சொல்லிக்கொண்டே போனதால் மீண்டு இது தொடர் கதையாகி விட்டது. வெறுத்து போன வார்த்தை விதைகளை மாணவர்களின் மத்தியில் விதைத்தால் எப்படி நமது நாடு ஒன்று பட்ட சமுதாய சின்னமாக விளங்கும். 

தன்னுடைய இனத்தின் மேன்மைகளை பிற இனத்தவரிடம் சொல்லி புரிய வைப்பது சிறப்பு. அதேசமயத்தில்  குறிவைத்து பிற இனத்தை சங்கடப்படுத்தி பேசுவது தவறு என்று நாளும் தெரிந்த ஆசிரியர்களுக்கு தெரியாத? 

முக்கியமான  தேர்வு நாளான ஐந்தாம் படிவம்  தேசிய தேர்வின் போது மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சொல்லி அனுப்புவது சிறந்ததா அல்லது இழிவு படுத்துவது சிறந்ததா? மாணவர்கள் இச்சூழ்நிலையில் எப்படி சிறப்பாக தனது கவனத்தை பரீட்சையில் செலுத்த முடியும்?

கண்டிப்பாக மாணவர்களின் எண்ணம் சிதற தொடங்கிவிடும் என்று ஒரு தேர்வு மேற்பார்வையாளருக்கு தெரியாதா? 

போர்ட்டிக்சன் அருகாமையில் உள்ள லுகுட் ராஜா ஜமாத் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்றுகொண்டிருக்கும் எஸ்.பி.எம் தேர்வின் இரண்டாவது நாளன்று, தலைமை  தேர்வு அதிகாரி இந்திய மற்றும் சீன மாணவர்களை குறிவைத்து இழிவாக பேசியது பலரின் கவனத்தை ஈன்றது மட்டுமல்லாமல் இதற்கு முடிவு என்பது இல்லையா என்ற கேள்வி பலரின் மத்தியில் தொடங்கிவிட்டது. 

இந்த சூழ்நிலை இனவாத புரட்சியா? அல்லது இழிளிவு நிலையின் முதிர்ச்சியா? என்று சிந்திக்க வேண்டியதுள்ளது. இந்த நிலை தொடர்வதின் உள்நோக்கமென்ன? இவர்களின் இழிவுக்கு இந்தியர்களும் சீனர்களும் அடக்குமுறைக்கு ஆளாகுவது எந்த விதத்தில் நியாயம்? இதே போன்ற வார்த்தைகளை இந்தியகளோ அல்லது சீனர்களோ பள்ளியில் பேசியிருந்தால் என்னென்ன சூழ்நிலைக்கு ஆளாகியிருப்பார்கள்? அவ்வகையில் ஏதேனும் நடந்ததா? இல்லை, காரணம் நாட்டின் எல்லா இன மக்களின் ஒற்றுமை என்பது மிக முக்கியமான அம்சம். அதனை காப்பாற்ற வேண்டும். அவ்வாறு செய்தல் மட்டுமே சுபிச்சத்துடன் வாழ முடியும் என்பது உண்மை.அது இந்தியர்களுக்கும் சீனர்களும் தெரிந்த  ஒன்று. 

இதற்கும் முன்பு பேசப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மேல் முறையான,விரைவான மற்றும் பொருத்தமான சட்டம் பாய்திருந்தால் இன்று இந்த நிலை மீண்டும் எழ வாய்ப்பில்லை. ஆனால் தேசிய முன்னணி அரசாங்கம் ஒரு குருட்டுதன்மையுடைய கோழை அரசாங்கம். இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மேல் எந்த ஒரு உடனடி தீர்வை எடுக்க முடியாமல் தவிக்கும் செயலிழந்த அரசாங்கம். பிற இனத்தின் மேல் கருணை இல்லா அரசு தேசிய முன்னணி என்பது ஒரு முன்னுதாரணம். 

இதற்க்கு காரணம் நிச்சயமாக இந்த ஆணவ தேசிய முன்னணி அரசாங்கமே. காலங்காலமாக விஷமூட்டப்பட்டு வந்த இவர்களின் சிந்தனை முறையை மாற்றுவதென்பது இலகுவான காரியமல்ல ஆனால் முடியாத காரியமல்ல. அரசாங்க சேவை பயிற்சி திட்டத்தில் இருக்கும் அனைத்து இனவாத ஓட்டைகளை அடித்தால் இவை அனைத்தும் சரியாகும். மேலும், இனவாத வார்த்தைகளை உபயோகப்படுத்தினால் உடனடியாக அவர்களின் மேல் எந்த ஒரு பாரபட்சமின்றி கடுமையான சட்டத்தை உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படியான கருத்துக்களை விதைப்பவர்கள் எல்லோரும் என்னைப்பொறுத்தவரையில் மக்களை பிரித்து ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் சக்தியொன்றின் கைக்கூலிகள். இச்சூழ்நிலையை களைய ஒட்டுமொத்த இந்திய அமைப்புகளும் அரசியல் தலைவர்களும் ஒரு மனதோடு இனவாத வார்த்தை வன்முறை புரியும் தனிமனிதர்களுக்கு எதிராக குரல் கொடுத்து அரசாங்கத்திற்கும் அசூரதனமான அழுத்தத்தை கொடுத்தால் மட்டுமே சிந்தனை மாற்றத்தை உருவாக்க முடியும். 

அதற்க்கு  தோள்கொடுப்பார்களா ம.இ.க பிரதிநிதிகள்? அல்லது மீண்டும் ரகசிய அறையில் ரகசிய ஒப்பந்தம் செய்வார்களா?

No comments:

Post a Comment