Thursday, December 30, 2010

மக்கள் கூட்டணி மாநிலங்கள் இந்திய வாக்காளர்களுக்கு நிறைய செய்து இந்தியர்களிடம் நெருங்கிய நட்பை உருவாக்க வேண்டும்.

ஜ.செ.க நெகிரி செம்பிலான் இந்திய தலைவர்கள் மற்றும் குவாலா பிலா கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மு.குலசேகரன் நிழத்திய  உரை

அநேகமாக தெனாங் சட்டமன்ற இடைத்தேர்தல் இக்காலகட்டத்தின் இறுதி பொதுத்தேர்தலாக  கருதப்படும் வேளையில், இதன் ஆதரவை முன்னோடியாக வைத்துதான் பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தை கலைக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சிலர் கூறுவது போல அடுத்த பொதுத்தேர்தல் அடுத்த வருட மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்ற வியூகங்கள் உண்மையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். 

அதன் அடிப்படையில் மக்கள் கூட்டணிக்கு மிஞ்சி இருப்பது வெறும் மூன்று மாத கால அவசம் மட்டுமே என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தல், ஒரு முக்கியமான தேர்தல் மட்டுமல்லாமல், நாட்டின் அரசியல் சாசனத்தில் சரித்திரத்தை உருவாக்கக்கூடிய சாத்தியமுள்ளது. 

கடந்த கால மலேசியா நாட்டின் அரசியல் வியூகங்களை புரட்டிப் பார்த்தால், எந்த ஒரு அரசியல் ஆர்வாளரோ அல்லது அரசியல் வர்ணனையாளர்கள், நுட்பமாக அரசியல் கருத்துக்களை வெளியிட்டதில்லை என்பது தெரியவரும். அதே வேளையில் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கை இழக்கும் சாத்தியமோ அல்லது ஆட்சி கவிழுமா என்ற வர்ணனைகளும் அவர்களின் எண்ணத்தில் எட்டியது கிடையாது. 

ஆனால் தற்சமய அரசியல் சூழ்நிலையை சீர்தூக்கி பார்த்தால், கடந்த பொதுத்தேர்தலின் சுனாமி அலை மீண்டும் ஒரு பேரலையை உருவாக்கி அரசியல் மறுமலர்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பாக்கப்படுகிறது. 

இப்பொழுது, தேசிய முன்னணி தலைவர்களும் மீண்டும் ஆட்சி பீடத்தை கைப்பற்றுவது கேள்வி குறியாகிவிட்டது என்று பேச தொடங்கி விட்டனர். மக்களின் ஆதரவை எளிதாக இடைபோட முடியாமல் தவிக்கும் இக்கட்டான நிலையில் உள்ளனர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மேலும் இது பற்றி பேசுகையில் ஒரு சிலர், தேசிய முன்னணியை சீர்திருத்த புரட்சியின்றி கவிழ்ப்பதும் கடினம் என்று கூறுகின்றனர். ஆனால் தேசிய முன்னணி சீர்திருத்த புரட்சியை செய்யுமா அல்லது அவ்வகையான் மாற்றங்களுக்கு தயாராக உள்ளதா என்பது கேள்வி குறியே. 

ஒரே மலேசியா கொள்கையை அடித்தளமாக கொண்ட தேசிய முன்னணி, பல இன மக்கள் உரிமைகளின் சமத்துவத்தை காப்பாற்ற இன்னும் தத்தளிக்கிறது என்பதே உண்மை. ஒரே மலேசியா கொள்கையின் கீழ் அரசியலில் வெறும் ஒப்பனை மாற்றங்களை மட்டுமே கொண்டு வருமே ஒழிய குறிப்பிடும் வகையிலான மாற்றங்களை கொண்டுவர முடியாது. இதற்க்கு காரணம் மிகப்பெரிய அளவில் உள்ள சுய அரசியல் சூழ்ச்சி முடிச்சுகள் ஆகும். பல மேடைகளில், மாற்றங்களை பற்றி பேசும் தேசிய முன்னணி மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது. அவர்களால் மாற்றம் என்ற வார்த்தையை உச்சரிக்க மட்டுமே முடியும். செயல் படுத்த முடியாது. 

இனி வருங் காலங்களில், சிறந்த ஆட்சி முறையை மலேசியர்கள் அனுபவிக்க விரும்பினால், மாற்று கூட்டணியான மக்கள் கூட்டணி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. 

கடந்த பொதுத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் புதிய அரசியல் தளத்தை உருவாக்குவதில் வேந்தர்களாக இருந்த பட்சத்தில், மீண்டும் வருகிற இடை தேர்தலிலும் அதனை தொடர்ந்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலும் அசைக்க முடியாத ஆதரவை மக்கள் கூட்டணிக்கு வழங்கி மத்திய அரசாங்கத்தை கைப்பற்ற முக்கிய பங்களிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். 

ஆகவே இந்தியர்களின் வாக்கை பெறுவதில், மக்கள் கூட்டணி அரசாங்க மாநிலங்களும், மக்கள் கூட்டணி தலைவர்களும் இந்தியர்களிடம் நெருக்கமான நல்லுறவை பேணுவது அவசியமாகும் வேளையில், இந்தியர்களின் தேவைகளை சீர்தூக்கி பார்த்து அவர்களின் தேவைகளை சரிவர செய்ய வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாகும். 

தேசிய முன்னணியின் ஆட்சியில் பல இன்னல்களையும் வேறுபாடுகளையும் அனுபவித்த இந்தியர்களின் மனதை கவர்ந்து, மக்கள் கூட்டணியின் மலேசியர்களுக்கு மலேசியா என்ற உன்னத கொள்கையின் வெளிப்பாடுகளை தெளிவுபடுத்தி அவர்களை அரவணைக்க முயற்சி செய்ய வேண்டும். 

மக்கள் கூட்டணி மக்களின் தேர்வு என்ற எண்ணத்தை அவர்களின் ஆழ்மனதில் பதிய வைக்க இன்றே நடைபோட வேண்டும்.

No comments:

Post a Comment