மக்கள் ஓசை செய்தி 12/01/2011
செம்பருத்தி இணையதள செய்தி
இண்டர்லோக் நாவலுக்கு எதிரான குரல் மேலோங்கி உயர்ந்து சென்று கொண்டிருக்கும் வேளை யில் அதனை மீட்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் எந்த ஒரு முனைப்பையும் காட்டாமல் இருப்பது, இந்திய சமுதாய மக்களிடையே ஆத்திரத்தை உருவாக்குகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு பலவிதமான சூழ்சிகளை செய்து அந்நாவலை தக்க வைப்பதில் ஆர்வத்தை காட்டுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு இலக்கிய நாவலாக உபயோக படுத்த வெளியிட்ட அப்புத்தகம், இந்தியர்களின் பொறுமையை சோதித்துள்ளது. இந்நாவல் ஒரு கற்பனை கதையாக இருக்கும் பட்சத்தில், இந்நாவலின் உள்ளடக்கங்களை உணர்வுள்ள தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது.
அதற்க்கு காரணம், இந்தியர்களை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டிருப்பதை நன்கு உணரமுடிகிறது. அதன் அடிப்படையில் பல தமிழ் இயக்கங்களும் தனிமனிதர்களும் அந்நாவலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர், கல்வி அமைச்சின் அலட்சிய போக்கை கண்டு அப்புத்தகத்தை ஏரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இது போன்ற செயல்கள் சட்டத்திற்கு எதிரானதாக இருந்தாலும், அவை இந்தியர்களின் மன ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது.
இப்பொழுது இப்பிரச்னை ஒரு புதிய பாதையை நோக்கி சென்று மேலும் இந்தியர்களின் இழிவுக்கும், கௌரவ அழிவுக்கும் பாதையை அமைக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. ம.இ.க. மத்திய செயற்க்குழுவின் உறுப்பினரும், முன்னால் ம.இ.க-வின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின் புதல்வருமான ச.வேள்பாரி அவர்கள் இந்நாவலை மீட்டுக்கொள்ள சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு செய்துள்ளார்.
தான் எடுக்கப் போகும் அந்த சட்ட நடவடிக்கையில், நீதிமன்றம் இண்டர்லோக் நாவலை உபயோகத்திலிருந்து மீட்டுக்கொள்ள உத்தரவை பிறப்பிக்க எடுக்கும் முயற்சியாக அமைகிறது என்று கூறியுள்ளார். நோக்கம் நல்லவையாகதான் உள்ளது. ஆனால் இதன் எதார்த்தத்தை ஆழமாக அறிந்திருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செய்வதினால் உடனடியாக இந்நாவலை மீட்டுக்கொள்ள உத்தரவு கிடைக்கப்பெறாது என்பது உண்மையாகும். அதற்க்கு கால அவகாசம் தேவை. இந்த கால கட்டம் இந்தியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை உருவாக்கும் என்பதும் திண்ணம்.
திரு.வேள்பாரி அவர்கள் ஆஸ்ட்ரோலியா மற்றும் மலேசியாவில் உள்ள சட்ட ஆலோசகர்களை கலந்து பேசிய பிறகுதான் இம்முடிவை எடுத்தார் என்று தெரிவித்துள்ளார். சட்ட நடவடிக்கை இந்நாவல் பிரச்னைக்கு சாதகமான தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சட்ட நடவடிக்கை இப்பிரச்சனைக்கு சிறந்த முடிவை தருமா?
அதன் அடிப்படையில் நீதிமன்றம் சென்று அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரான நடவடிக்கை சாத்தியமில்லை என்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:
1). இந்நாவலை கல்வி அமைச்சு அறிமுகப்படித்துயுள்ள வேளையில், இந்நாவலை மீட்டுக்கொள்ளபடும் என்ற முடிவை கல்வி அமைச்சே அறிவித்தாக வேண்டுமே ஒழிய, இவ்விவகாரத்தில் நீதிமன்ற தலையீடு தேவையற்றது.
2). அதையும் தாண்டி இப்பிரச்சனை நீதிமன்றத்தில் செவிமடுக்கப்பட்டால், இதன் முடிவு, உயர் நீதிமன்றம், மேல் முறையீட்டு நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றம் வரை சென்று கால தாமதத்தை உருவாக்கும் அதே வேளையில், அந்நாவல் பள்ளிக்கூட உபயோகத்திற்கு பெரும் வாய்ப்பைத் தரும் சாத்தியமுண்டு.
3). இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வாக, ம.இ.க.வின் தலைவர்கள் அம்னோவின் சர்வாதிகாரிகளுடன் ஒன்று கூடி கலந்து பேசி இந்நாவலை மீட்டுக்கொள்ள முடிவெடுக்கவேண்டும். அதிலும் குறைந்த பட்சமாக இந்தியர்களை இழிவுபடுத்திய அனாவசிய சொற்களை அகற்றி அதன் பிறகு பயன்பாட்டை உறுதிபடுத்தலாம்.
4). ம.இ.க தேசிய முன்னணின் மூத்த பங்காளி கட்சியாக இருக்கும் வேளையில், இப்பிரச்சனையை தேசிய முன்னணின் வட்டாரத்திலேயே பேசி முடிக்க முடியாதது ஏன்? எதற்காக ம.இ.க-வின் குட்டித் தலைவர்கள் அரசாங்க ஆட்சியில் இருக்கும் கட்சியில் இருந்துக் கொண்டு அரசாகத்திற்க்கு எதிராக நீதிமன்றம் செல்லவேண்டும்? இதன் அவசியம் என்ன? ம.இ.க-வின் குரல் பலவீனமாக உள்ளதா? அல்லது மதிப்பற்ற நிலையில் ம.இ.க வா?
இந்திய மக்களின் உணர்வை தேசிய முன்னணியின் அரசியல் கொள்கை உதாசினப்படுதுகிறது என்ற உண்மையை ம.இ.க அறிந்திருந்தால் அல்லது அறிந்துக்கொண்டாள், தேசிய முன்னணியை விட்டு விலக வேண்டும். அவ்வாறு செய்வதற்கு ம.இ.க தயார் நிலையில் உள்ளதா அல்லது அவ்வாறு செய்வதற்கு துணிச்சல் இருக்கிறதா?
இந்திய சமுதாயத்தின் காவலன் என்று கொக்கரிக்கும் ம.இ.க, இன்று இந்தியர்களின் கௌரவத்தை அம்னோ காற்றில் பறக்கவிடுவதை பார்க்க மட்டுமே முடிகிறது. அம்னோ அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை என்பது ம.இ.க தனது சட்டையில் சாக்கடையை அள்ளி போடுவது போல உள்ளது. அதற்க்கு மாறாக தேசிய முன்னணியை விட்டு விலகுவதே சிறந்த பதிலடியாகும். அவ்வாறு முடியுமா?
கடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியின் அரசியல் காயங்களை மறைக்க சீர்திருத்த கொள்கையை கையாளும் என்று சொல்லப்படுவது வெறும் வாய்ச் சொல்லே !!! மக்களின் ஆதரவை பெற நடத்தும் அரசியல் கபட நாடகம் அது.
இருப்பினும், இந்தியர்கள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வில்லை என்றால், இனி வருங் காலங்களில் தேசிய முன்னணி இந்தியர்களை மேலும் மேலும் அவமானப்படுத்தி அதன் ஆணவத்தை பலமாக்கிக்கொள்ளும் என குலசேகரன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment