Showing posts with label இண்டர்லோக். Show all posts
Showing posts with label இண்டர்லோக். Show all posts

Tuesday, March 1, 2011

“வெளிநாட்டு ஆடு நனையுதென்னு உள்நாட்டு ஓநாய் அழுகிறது”


இண்டர்லோக் நாவலுக்கு எதிரான போராட்டத்தை துணைப் பிரதமர் காவல் துறையின் உதவியோடு தடுத்து நிறுத்திவிட்டார்.
அதே சமயத்தில் நேற்று பிரதமர் நஜிப் ரசாக், இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியினர் நாட்டின் மீது உலக நாடுகளின் பார்வைக்கு மலேசியாவை களங்கப்படுத்தும் எண்ணம் கொண்டுள்ளதாக அர்த்தமற்ற கருத்தை தெரிவித்தார்.
நேற்று நாளிதழ் செய்தியில், நாட்டின் உள்துறை அமைச்சர், அந்த ஆட்சேப கூட்டம் வெற்றியளிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஒருவர் தனது கல்வி அமைச்சின் கீழ் செய்த தவறை மறைக்க முற்படுகிறார், இன்னொருவர் உலக நாட்டின் பார்வை பற்றி கவலைப்படுகிறார் மேலுமொருவர் நோக்கம் நிறைவேறவில்லை என்கிறார்.
இவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக தங்களது பதவி கவசத்தை தற்காத்துக்கொள்ள பதில்கள் கூறுகிறார்களே ஒழிய, இந்திய சமுதாயம் ஏன் திரண்டார்கள், எதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்கள், அவர்களின் கோரிக்கை என்ன? அது தனிமனித கோரிக்கையா அல்லது ஒரு சமுதாயத்தின் குரலா என்று சீர்தூக்கி பார்க்காமல் மீண்டும் மீண்டும் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.
இதில் ஒரு சிறந்த வேடிக்கை என்னவென்றால், துணைப் பிரதமர் முகைதீன் யாசின், லிபியா மக்களின் சுதந்திரத்தை மதித்து அவர்கள் ஆட்சேபனை கூட்டத்தை நடத்த கடாபிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால் தனது நாட்டில் தனது மக்கள் அதுவும் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படும் இந்தியர்கள் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்த வாய்ப்பும் அடித்தளமும் வழங்காத முகைதீன் அந்த ஆலோசனை தர தகுதியானவரா?
முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம், நம் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு சட்டமா? அனைத்துமே மனித உயிர்கள் தானே, எதற்காக துணைப்பிரதமர் இருமாப்பான கொள்கையுடன் நடந்து கொள்கிறார். இவர் இந்நாட்டிற்கு துணை பிரதமராக இருக்க தகுதியானவரா?
கண்ணுக்கு தெரிந்த தன் நாட்டு இந்திய மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத முகைதீன், கண்ணுக்கு தெரியாத லிபியா நாட்டு மக்களுக்கு ஆதரவு கரம் வழங்குவது என்பது வியப்பாக உள்ளது.
இந்நாட்டில் இந்திய சமுதாயத்தின் போராட்ட சிந்தனைகளை ஒடுக்க நினைக்கிறது தேசிய முன்னணி. இந்தியர்களை அவமானப்படுத்தி அதில் நாட்டின் பல இன மக்களின் ஒற்றுமையின் நீரோட்டத்தை கலைத்து மக்களை பிளவுபடுத்தி காண முயற்சி செய்கிறது. இவ்வருடத்தின் மிகச்சிறந்த அரசியல் தந்திர சூழ்ச்சியின் ஏற்பாடுதான் இண்டர்லோக் நாவால்.
இந்திய சமுதாயத்தின் மேல் ஜாதி என்ற பிரிவுகளை காட்டி வேற்றுமை என்ற வர்ணத்தை பூசி பிளவை உண்டாக்குகிறது தேசிய முன்னணி. இனச் சிக்கலை ஏற்படுத்தும் இந்த தேசிய முன்னணிக்கு ஒரு சில இந்திய கட்சிகளும் அதன் தலைவர்களும் துதிபாடுவது வெட்கமாக உள்ளது. பதவியை தற்காத்துக்கொள்ள தன்மானத்தை விற்பதா?

Monday, February 28, 2011

அமைதி பேரணிக்கு போலீஸ் அனுமதி வழங்கியிருக்கவேண்டும்

செம்பருத்தி இணையதள செய்தி








மக்களின் ஜனநாயக உரிமையை காவல்துறை மீண்டும் மீண்டும் மதிக்க தவறியுள்ளது என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர்  மு.குலசேகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை இண்டர்லோக் நாவலுக்கு எதிரான அமைதி பேரணியை முடக்க காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைப்பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம் என குலா தெரிவித்தார்.
கடந்த 11 ம் திகதி பிப்ரவரி மாதம் பேரணிக்கு அனுமதி பெரும் மனுவை இண்ட்ராப் மனித உரிமைக் கட்சி டாங் வாங்கி காவல்துறையிடம் விண்ணப்பம் செய்திருந்தது. ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எதனால் நிராகரிக்கப்பட்டது என்று காவல்துறை நேர்மையாக சொல்ல இயலாத பட்சத்தில், அந்த பேரணிக்கு மக்கள் கூடினால் அவர்களின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறை எடுக்கக்கூடாது.
மாறாக அந்த பேரணிக்கு காவல்துறை பாதுகாப்பு தர வேண்டும். அதே சமயத்தில் விண்ணப்பம் செய்ய வில்லை என்ற பாளை நொண்டி சாக்கை போலீசும் சம்பத்தப்பட்ட அமைச்சும் இனியும் சொல்ல கூடாது என குலா சொன்னார்.
ஆகவே, பலரும் எதிர்க்கும் அந்த நாவலை உடனடியா தடை செய்ய வில்லை என்றால், அனைத்து இந்தியர்களும் ஆதரவு தெரிவுக்கும் இண்ட்ராப் மனித உரிமைக் கட்சியின் இண்டர்லோக்கிற்க்கு எதிரான அமைதிப் பேரணிக்கு காவல்துறையும் அரசாங்கமும் மற்றும் துணைப்பிரதமர் முகைதீன் யாசினும் கண்டிப்பாக மரியாதை வழங்க வேண்டும் என்பது என்னுடைய உறுதியான நிலைப்பாடு என குலசேகரன் மேலும் சொன்னார்.
இதற்கிடையில், கொள்கை பூர்வாங்க அமைப்பின் இயக்குனர் லிம் தேக் கீ இண்டர்லோக் நாவலுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்.
அவரின் பார்வைப்படி, இண்டர்லோக் நாவலில் மனதை புன்படுத்தப்படும் வார்த்தைகள் அதிகமாக உள்ள வேளையில் அதனை ஐந்தாம் படிவ மாணவர்களின் உபயோகத்திலிருந்து முற்றா தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மலேசியாகினி இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்ட அந்த கல்விமானின் மின்னஞ்சல் குறிப்பில், ஒரு சில தரப்பினர் “அவதிப்புக்கு எதிரான சுதந்திரத்தை” தடை செய்ய முயற்சி செய்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறு செய்வதினால் தவறு இழைத்தவர்களின் கருத்துக்கள் சரியானதாக கருதப்பட்டு அப்புத்தகத்தை பாட நூலாக அங்கிகாரம் வழங்க முயற்சியை நிலைநாட்டலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு வேலை, மாலாய் இனத்தவர்களை அவமானப்படுத்தும் வாசகம் ஒன்று இருந்தால் இதே போன்ற “அவதிப்பு எதிரான சுதந்திரத்தை” தடை செய்வார்களா என்று அவர் கூறியிருந்தார்.

Thursday, February 3, 2011

செனட்டர் கோகிலன், மக்கள் பிரதிநிதி அல்ல என்கிறார் சுகுமாரன்

செம்பருத்தி இணையதளம் செய்தி

இந்தியர்களை இழிபடுத்திய வாசகத்தின் எந்த பக்கத்தை பார்த்தாலும் அதனை வெறுக்க தோணும் பொழுது புரிந்து கொள்ளுங்கள் என்று கூறுவது அமைச்சருக்கு அழகல்ல. வார்த்தையின் வழி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் கோகிலன் பிள்ளை போன்ற அரசியல் வியாதிகளை எந்த ஒரு தமிழர் நிகழ்வுக்கும் அழைக்கக்கூடாது. கோகிலன் வார்த்தையில் இந்திய சமூதாயத்தின் எதிர்காலத்திற்கு கெட்ட சகுனத்தை காண முடிகிறது என சுகுமாரன் சாடியுள்ளார்.

உண்மையான இந்தியனாக இருந்து இந்தியர்களின் நலனில் அக்கறை காட்டினால் மட்டுமே துணை அமைச்சர் பதவியில் நிலைக்க முடியாது என்ற தேசிய முன்னணியின் அரசியல் தத்துவத்தை கோகிலன் பிள்ளை நன்கு அறிந்து வைத்துள்ளார். ஒரு சில நேரங்களில் ஒட்டு மொத்த இந்திய சமுதாயமே அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் பொழுது, இந்திய சமுதாய பிரதிநிதிகள் இந்தியர்களை மேலும் இழிவுபடுத்த அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுவதும் அவர்களின் அரசியல் பதவிக்கும் பட்டத்திற்கும் விலை போவது வாடிக்கையாகிவிட்டது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபகாலமாக இண்டர்லோக் நாவல் நாட்டில் பல சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த சர்ச்சை எதனால் எழுந்தது என்பதனை செனட்டர் கோகிலன் முதலில் நன்கு அறிந்திருக்க வேண்டும். இந்தியர்கள் பல கோணங்களில் இண்டர்லோக் நாவலின் எழுத்தினால் பாதிகப்படுள்ளனர். அந்த புத்தகத்தின் வாசகங்கள் இந்திய சமுதாயத்தை பெரிய அளவில் பாதித்தது மட்டுமல்லாமல் பிற இனத்தவரையும் கேவலப்படுத்தியுள்ளது. அப்புத்தகத்தை முழுமையாக படித்த பிறகுதான் அந்நாவலுக்கு எதிராக இந்தியர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். அனைவரின் கண்களுக்கு தவறாக தென்படும் வாசகம் கோகிலன் கண்களுக்கு மட்டும் சரியாக தென்படுவது எப்படி? துணை அமைச்சர் என்ற காரணத்தினாலோ? என சுகு கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பாக சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ம.இ.க தலைவர்களும் அந்நாவலுக்கு முழுமனதாக எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில் கோகிலன் மட்டும் தனியாக ஒரு கருத்தை வெளியிடுவது, அமைச்சரவையில் இந்திய பிரதிநிதிகள் ஒற்றுமையாக இல்லை என்பது தெளிவாகிறது. மேலும், இந்நாவல் குறித்து தேசிய முன்னணியின் இந்திய அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் ஒன்று கூடி பேசவில்லை என்பதும் நிரூபணமாகிறது.

இது அரசியல் பிரச்னை அல்ல, மாறாக ஒரு சமூதாயத்தின் பிரச்னை என்று அனுதினமும் அனைத்து இந்தியர்களும் குரல் எழுப்பும் பொழுது செனட்டர் கோகிலன் போன்றவர்கள், அரசாங்கத்திற்கு சார்ந்து பேசுவது 52 வருட வழக்கமாகிவிட்டது. 

வெளியுறவு துறை துணை அமைச்சர் செனட்டர் கோகிலன் வெளிநாட்டு விவகாரங்களில் உண்ணிப்பாக கவனம் செலுத்தும் அதே வேளையில் உள்நாட்டில் என்னென்ன பிரச்னைகள் உண்டு என்பதனை சீர்தூக்கி பார்க்க வேண்டும். இது நாள் வரை வாய் மூடி மௌனமாக இருந்த கோகிலன், திடீர்ரென வீறுகொண்டு எழுந்து தன்முகத்தில் உமிழ்ந்து கொள்ளும் அளவிற்கு கருத்து தெரிவித்ததை கண்டால், மௌனமே அவருக்கு சிறந்தது என்று சொல்லவேண்டும்.

இனி இண்டர்லோக் நாவல் பிரச்னையில் அவர் மேலும் கருத்துரைக்காமல் இருந்தால், அது அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் சிறப்பாக இருக்கும் என சுகுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

Monday, January 24, 2011

இண்டர்லோக் நாவலுக்கு எதிராக போலீஸ் புகார்

மலேசியா நண்பன் செய்தி 24/01/2011

தமிழ் நேசன் செய்தி 24/01/2011

நாடு முழுவதும் இண்டர்லோக்கிற்கு எதிராகப் போலீஸ் புகார்கள்

மலேசியா இன்று செய்தி.











இண்டர்லோக் புத்தகம் இந்தியர்களை இழிவுபடுத்துகிறது  என்றும் அது இடைநிலைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டாய வாசிப்பு பட்டியலிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கூறி நாடு முழுவதும் பல இந்திய அமைப்புக்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஒரே சமயத்தில் புகார் செய்துள்ளன.


பேராக்கில் ஈப்போ, பத்து காஜா, சித்தியவான், தெலுக் இந்தான், தைப்பிங் ஆகியவற்றிலும் பாகாங்கில் குவாந்தானிலும் கிளந்தானில் கோத்தா பாருவிலும் கோலாலம்பூரில் செந்தூல், பினாங்கில் தாசெக் குளுகோரிலும் மலாக்காவில் ஜாசினிலும் நெகிரி செம்பிலானில் போர்ட்டிக்சனிலும் போலீசில் புகார்செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

“அரசாங்கமும் கல்வி அமைச்சும் இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்காமல் அந்த சர்ச்சையை வேண்டுமென்றே தொடர விரும்புகின்றன”, என்றும் கூறி தாம் அவற்றின் போக்கு மற்றும் நிலை மீதும் புகார் செய்துள்ளதாக பேராக் டிஎபி இளைஞர் பிரிவின் அரசியல் கல்விப் பிரிவுத் தலைவர் பி சுகுமாரன் கூறினார்.


“சுய மரியாதையுள்ள எந்த இந்திய சமூகமும் தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய இண்டர்லாக் நாவலை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் ஆதாரமற்றது, அவமானப்படுத்துகிறது, இன உணர்வுகளைத் தொடுகிறது. இந்திய சமூகத்தை முழுமையாக இழிவுபடுத்தும் வகையில் வேண்டுமென்றே திரிக்கப்பட்ட வரலாற்று பிழைகளும் அதில் உள்ளன”, என்று சுகுமாரன் சொன்னார்.
அந்த நாவல் பற்றி மேலும் மறு ஆய்வுகளோ அல்லது மற்ற தரப்புக்களுடன் ஆலோசனைகளோ நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்ட அந்த டிஎபி போராளி, அந்தப் புத்தகம் இந்த நாட்டில் நிலவுகிற இன ஒற்றுமை சீர்குலைவதற்கு வழி வகுப்பதற்கு முன்னர் தேசிய இடைநிலைப் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலிருந்து அது மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

"அந்த நாவலில் வருகின்ற கதாபாத்திரங்கள் ஆக்கப்பூர்வப் பண்புகளைப் பிரதிபலிக்கவில்லை. பள்ளிக்கூட நிலையில் அது கற்பதற்கான ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டால் அது புனிதமான பண்புகளை மேம்படுத்தாது.  மாறாக மற்ற இனங்கள் மீதும் இந்திய சமூகம் மீதும்  வெறுப்புணர்வையே அதிகரிக்கும்”, என்றும் சுகுமாரன் குறிப்பிட்டார்

Wednesday, January 12, 2011

நீதிமன்ற தலையீடு அவசியமற்றது

மக்கள் ஓசை செய்தி 12/01/2011


செம்பருத்தி இணையதள செய்தி 
இண்டர்லோக் நாவலுக்கு எதிரான குரல் மேலோங்கி உயர்ந்து சென்று கொண்டிருக்கும் வேளை யில் அதனை மீட்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் எந்த ஒரு முனைப்பையும் காட்டாமல் இருப்பது, இந்திய சமுதாய மக்களிடையே ஆத்திரத்தை உருவாக்குகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு பலவிதமான சூழ்சிகளை செய்து அந்நாவலை தக்க வைப்பதில் ஆர்வத்தை காட்டுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு இலக்கிய நாவலாக உபயோக படுத்த வெளியிட்ட அப்புத்தகம், இந்தியர்களின் பொறுமையை சோதித்துள்ளது. இந்நாவல் ஒரு கற்பனை கதையாக இருக்கும் பட்சத்தில், இந்நாவலின் உள்ளடக்கங்களை உணர்வுள்ள தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது.
அதற்க்கு காரணம், இந்தியர்களை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டிருப்பதை நன்கு உணரமுடிகிறது. அதன் அடிப்படையில் பல தமிழ் இயக்கங்களும் தனிமனிதர்களும் அந்நாவலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர், கல்வி அமைச்சின் அலட்சிய போக்கை கண்டு அப்புத்தகத்தை ஏரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இது போன்ற செயல்கள் சட்டத்திற்கு எதிரானதாக இருந்தாலும், அவை இந்தியர்களின் மன ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது.
இப்பொழுது இப்பிரச்னை ஒரு புதிய பாதையை நோக்கி சென்று மேலும் இந்தியர்களின் இழிவுக்கும், கௌரவ அழிவுக்கும் பாதையை அமைக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. ம.இ.க. மத்திய செயற்க்குழுவின் உறுப்பினரும், முன்னால் ம.இ.க-வின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின் புதல்வருமான ச.வேள்பாரி அவர்கள் இந்நாவலை மீட்டுக்கொள்ள சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு செய்துள்ளார்.
தான் எடுக்கப் போகும் அந்த சட்ட நடவடிக்கையில், நீதிமன்றம் இண்டர்லோக் நாவலை உபயோகத்திலிருந்து மீட்டுக்கொள்ள உத்தரவை பிறப்பிக்க எடுக்கும் முயற்சியாக அமைகிறது  என்று கூறியுள்ளார். நோக்கம் நல்லவையாகதான் உள்ளது. ஆனால் இதன் எதார்த்தத்தை ஆழமாக அறிந்திருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செய்வதினால் உடனடியாக இந்நாவலை மீட்டுக்கொள்ள உத்தரவு கிடைக்கப்பெறாது என்பது உண்மையாகும். அதற்க்கு கால அவகாசம் தேவை. இந்த கால கட்டம் இந்தியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை உருவாக்கும் என்பதும் திண்ணம்.
திரு.வேள்பாரி அவர்கள் ஆஸ்ட்ரோலியா மற்றும் மலேசியாவில் உள்ள சட்ட ஆலோசகர்களை கலந்து பேசிய பிறகுதான் இம்முடிவை எடுத்தார் என்று தெரிவித்துள்ளார். சட்ட நடவடிக்கை இந்நாவல் பிரச்னைக்கு சாதகமான தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சட்ட நடவடிக்கை இப்பிரச்சனைக்கு சிறந்த முடிவை தருமா?
அதன் அடிப்படையில் நீதிமன்றம் சென்று அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரான நடவடிக்கை சாத்தியமில்லை என்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:
1). இந்நாவலை கல்வி அமைச்சு அறிமுகப்படித்துயுள்ள வேளையில், இந்நாவலை மீட்டுக்கொள்ளபடும் என்ற முடிவை கல்வி அமைச்சே அறிவித்தாக வேண்டுமே ஒழிய, இவ்விவகாரத்தில் நீதிமன்ற தலையீடு தேவையற்றது.
2). அதையும் தாண்டி இப்பிரச்சனை நீதிமன்றத்தில் செவிமடுக்கப்பட்டால், இதன் முடிவு, உயர் நீதிமன்றம், மேல் முறையீட்டு நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றம் வரை சென்று கால தாமதத்தை உருவாக்கும் அதே வேளையில், அந்நாவல் பள்ளிக்கூட உபயோகத்திற்கு பெரும் வாய்ப்பைத் தரும் சாத்தியமுண்டு.
3). இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வாக, ம.இ.க.வின் தலைவர்கள் அம்னோவின் சர்வாதிகாரிகளுடன் ஒன்று கூடி கலந்து பேசி இந்நாவலை மீட்டுக்கொள்ள முடிவெடுக்கவேண்டும். அதிலும் குறைந்த பட்சமாக இந்தியர்களை இழிவுபடுத்திய அனாவசிய சொற்களை அகற்றி அதன் பிறகு பயன்பாட்டை உறுதிபடுத்தலாம்.
4). ம.இ.க தேசிய முன்னணின் மூத்த பங்காளி கட்சியாக இருக்கும் வேளையில், இப்பிரச்சனையை தேசிய முன்னணின் வட்டாரத்திலேயே பேசி முடிக்க முடியாதது ஏன்? எதற்காக ம.இ.க-வின் குட்டித் தலைவர்கள் அரசாங்க ஆட்சியில் இருக்கும் கட்சியில் இருந்துக் கொண்டு அரசாகத்திற்க்கு எதிராக நீதிமன்றம் செல்லவேண்டும்? இதன் அவசியம் என்ன? ம.இ.க-வின் குரல் பலவீனமாக உள்ளதா? அல்லது மதிப்பற்ற நிலையில் ம.இ.க வா?
இந்திய மக்களின் உணர்வை தேசிய முன்னணியின் அரசியல் கொள்கை உதாசினப்படுதுகிறது என்ற உண்மையை ம.இ.க அறிந்திருந்தால் அல்லது அறிந்துக்கொண்டாள், தேசிய முன்னணியை விட்டு விலக வேண்டும். அவ்வாறு செய்வதற்கு ம.இ.க தயார் நிலையில் உள்ளதா அல்லது அவ்வாறு செய்வதற்கு துணிச்சல் இருக்கிறதா?
இந்திய சமுதாயத்தின் காவலன் என்று கொக்கரிக்கும் ம.இ.க, இன்று இந்தியர்களின் கௌரவத்தை அம்னோ காற்றில் பறக்கவிடுவதை பார்க்க மட்டுமே முடிகிறது. அம்னோ அரசாங்கத்திற்கு  எதிராக சட்ட நடவடிக்கை என்பது ம.இ.க தனது சட்டையில் சாக்கடையை அள்ளி போடுவது போல உள்ளது. அதற்க்கு மாறாக தேசிய முன்னணியை விட்டு விலகுவதே சிறந்த பதிலடியாகும். அவ்வாறு  முடியுமா?
கடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியின் அரசியல் காயங்களை மறைக்க சீர்திருத்த கொள்கையை கையாளும் என்று சொல்லப்படுவது வெறும் வாய்ச் சொல்லே !!! மக்களின் ஆதரவை பெற நடத்தும் அரசியல் கபட நாடகம் அது.
இருப்பினும், இந்தியர்கள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வில்லை என்றால், இனி வருங் காலங்களில் தேசிய முன்னணி இந்தியர்களை மேலும் மேலும் அவமானப்படுத்தி அதன் ஆணவத்தை பலமாக்கிக்கொள்ளும் என குலசேகரன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, January 5, 2011

“இண்டர்லோக்” பாடநூலை மீட்டுக்கொள்வதில் கல்வி அமைச்சு காட்டும் தயக்கம் தெனாங்கில் எதிரொலிக்கும், குலசேகரன்

-மலேசியாகினி- 

இவ்வருடம் படிவம் 5 நிலை மாணவர்களுக்கு மலாய் இலக்கிய பாடநூலாக, புதிதாக அச்சிடப்பட்டுள்ள, “இண்டர்லோக்” நாவலை பயன்படுத்த ஆரசாங்கம் திட்டமிட்டுள்ள வேளையில், சர்ச்சைக்குரிய வார்த்தைகளையும் உள்நோக்கங்களையும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலை அரசாங்கம் உடனடியாக மீண்டுக்கொள்ள வேண்டும் என்று டிஎபியின் தேசிய உதவித் தலைவரும் ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். குலசேகரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.


அந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் “கப்பலில் இவர்களுக்கு எந்த ஒரு சிரமும் இல்லை, காரணம் கப்பலில் இருப்பவர்களில் பெரும்பாலோர் சரளமாக தமிழிலில் பேசி பழக கூடியவர்கள். வட தேசத்திலிருந்து வந்தவர்கள் ஒரு சிலர் மலையாளத்திலும் தெலுங்கிலும் பேசுவதும் உண்டு. இருப்பினும் இவை அனைத்தும் ஏறக்குறைய தமிழ் வார்த்தைகளே. மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகள்  இரண்டும் திராவிட மொழிகளின் கீழ் தோற்றம் கண்டவையாகும். இதில் முக்கியமானது, இவர்கள் அனைவரும் சகஜமாக கூடி பழகும் பண்பைக் கொண்டவர்கள், காரணம் இவர்கள் அனைவரும் ஒரே ஜாதியான பறையர்கள் குலத்தைச் சார்ந்தவர்கள். ஒருவரை ஒருவர் தொடும் பொழுது, தீண்டாமை என்பது கிடையாது. இதனால் இவர்கள் சுதந்திரமாக கலந்து பழகலாம். கப்பலில் தங்கும் வசதிகள் முறையாக இல்லாததால் இவர்கள் ஆட்டு மந்தைகள் போலவே இருந்தனர்” என்ற 211 பக்கத்தின் எழுத்துக்கள் இந்திய இனத்தை திட்டமிட்டு இழிவுபடுத்தும் வாசகமாக  அமைகிறது.

“மேலே கூறப்பட்டுள்ள அனைத்து வார்த்தைகளும் அர்த்தமற்றவை, இந்தியர்களின் மனதை காயப்படுத்தும் நோக்கம் கொண்டவையாக இருக்கும் வேளையில், அதில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகள் சிறுபிள்ளைத்தனமானது. இது போன்ற முறையற்ற வார்த்தைகளை எந்த ஓர் அறிவுள்ள மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று”, என்று குலா கூறுகிறார்.

ஜாதி என்ற ஒரு விவரம் அன்றைய காலத்தில் இருந்திருந்தாலும், அனைவரும் ஒரே ஜாதியைச் சார்ந்தவர்கள்

 என்பது அப்பட்டமான பொய்யாகும் என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
“இருப்பினும், ஜாதியை குறிவைத்து ஒரு நாவலை எழுதுவது எந்த விதத்தில் மாணவர்களுக்கு பயனாக இருக்க முடியும்? நாகரிக காலத்தில் போட்டி போட்டு கொண்டு மாணவர்கள் படிக்கும் வேளையில் இது போன்ற எழுத்துக்கள் எப்படி மாணவர்களுக்கு துணையாக அமையும்?”, என்று அவர் வினவுகிறார்.

மஇகா தனது வலிமையான எதிர்ப்பைத் தெரிவித்து அந்நாவலின் உள்ளடக்கத்தை மாற்றி அமைக்க குரல் கொடுத்துள்ளது. மஇகாவின் தேசிய தலைவர் பழனிவேல், இது போன்ற விவரங்கள் சமூதாயத்தை பாதிக்கக்கூடும் வகையில் அமைவதால், அதனை உடனடியாக சரிபடுத்த வேண்டும் என்று குரல் எழுப்பி இருக்கும் அதே வேளையில், மஇகாவின் துணை தலைவரும் மனிதவள அமைச்சருமாகிய டாக்டர் சுப்ரமணியம் இந்நாவலின் உள்ளடக்கத்தை மீண்டும் மறு பரீசீலினை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது போன்ற வார்த்தைகள் பல இன மக்களின் ஒற்றுமையை உருவாக்குவதில் சிரமத்தை எதிர்நோக்கும் என்றும் கூறியுள்ளார்.

“கோரிக்கைகளும், எதிர்க்குரல்களும் தினமும் எழுந்த வண்ணமாக இருக்கும் வேளையில், கல்வி அமைச்சு இவர்களின் வேண்டுகோளை மதிப்பதாக தெரியவில்லை. தற்சமயம் இந்த நாவலுக்கு பெரும்பாலான இணையப் பதிவாளர்கள் ஆதரவை வழங்கும் வண்ணமாக கருத்துக்களை வெளியிடுகின்றனர். அதில் ஒரு சிலர் “இந்நாவலின் எழுத்துக்களின் மேல் அதிகமாக உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை என்றும், அதனை இனவாதமாக பார்த்தால் இனவாதமாகத்தான் தெரியுமே ஒழிய, எழுத்தாளரின் உண்மை அதில் பறிக்கப்படுவதாக” கூறுகின்றனர்.”

தேசிய முன்னணியின் மூத்த பங்காளிக்கட்சியாக மஇகா திகழ்ந்தாலும், அம்னோவின் ஆதிக்கம் தேசிய முன்னணியில் கூடுதலாக உள்ளது என்பது உண்மை. அம்னோ ஆதிக்கவாதிகளின் உயரத்திற்கு உரிமையுடன் பேச மஇகாவிற்கு சொல்லுரிமை கிடையாது. தேசிய முன்னணி எதை சொல்கிறதோ அதனை மஇகாவும் மசீசவும் பின்மற்றியே ஆகவவேண்டும் என்பது கட்டாய சூழ்நிலையாக இருக்கும் தருணத்தில், எந்த வகையில் இவர்களின் எதிர்க்குரலை தேசிய முன்னணி எப்படி மதிக்கும்?

“தேசிய முன்னணி அரசாங்கம், இந்நாவலுக்கு உடனடியாகத் தீர்வு காண முடியாமல் இருப்பது, இந்தியர்களின் உணர்சிகளை அது மதிப்பளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. மேலும் தேசிய முன்னணிக்கு இது ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை.

கடந்த காலத்தை போலவே தேசிய முன்னணி இந்தியர்களை அவமானப்படுவதில் குறிக்கோளுடன் உள்ளது. மேலும் அவர்களின் முந்தைய அரசியல் கர்வம் இன்னும் மேலோங்கியுள்ளதை இதன் வழி நன்கு தெரிந்துக்கொள்ளலாம். சமீபத்தில் கர்வ குணத்தை அடியோடு அழிக்க வேண்டும் என்று பிரதமர் கூறியது வெறும் வாய்ப்பேச்சே.”

ஒட்டுமொத்தமாக இந்திய சமூகம் புண்பட்டுள்ள வேளையில், மஇகாவும் எதிர்த்து கோரிக்கை விடுத்துள்ள அதே சமயத்தில், தேசிய முன்னணி கண்டும் காணாதது போல் இருப்பது வேதனையைத் தருகிறது என்கிறார் குலா.

“இறுதியாக, இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு காணப்படவில்லை என்றால், எதிர்வரும் தெனாங் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் “இண்டர்லோக்” நாவல் சர்ச்சையை டிஎபி   ஒரு பெரும் விவகாரமாக மாற்றும் என்று பகிரங்கமாக அறிவிக்கிறேன்”, என்று எம். குலசேகரன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

“இன்றைய நாள் வரை அதனை மீட்டுக் கொள்வதற்கு கல்வி அமைச்சு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காதது நம்மை திடுக்கிட செய்கிறது.”