Monday, January 24, 2011

நாடு முழுவதும் இண்டர்லோக்கிற்கு எதிராகப் போலீஸ் புகார்கள்

மலேசியா இன்று செய்தி.











இண்டர்லோக் புத்தகம் இந்தியர்களை இழிவுபடுத்துகிறது  என்றும் அது இடைநிலைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டாய வாசிப்பு பட்டியலிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கூறி நாடு முழுவதும் பல இந்திய அமைப்புக்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஒரே சமயத்தில் புகார் செய்துள்ளன.


பேராக்கில் ஈப்போ, பத்து காஜா, சித்தியவான், தெலுக் இந்தான், தைப்பிங் ஆகியவற்றிலும் பாகாங்கில் குவாந்தானிலும் கிளந்தானில் கோத்தா பாருவிலும் கோலாலம்பூரில் செந்தூல், பினாங்கில் தாசெக் குளுகோரிலும் மலாக்காவில் ஜாசினிலும் நெகிரி செம்பிலானில் போர்ட்டிக்சனிலும் போலீசில் புகார்செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

“அரசாங்கமும் கல்வி அமைச்சும் இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்காமல் அந்த சர்ச்சையை வேண்டுமென்றே தொடர விரும்புகின்றன”, என்றும் கூறி தாம் அவற்றின் போக்கு மற்றும் நிலை மீதும் புகார் செய்துள்ளதாக பேராக் டிஎபி இளைஞர் பிரிவின் அரசியல் கல்விப் பிரிவுத் தலைவர் பி சுகுமாரன் கூறினார்.


“சுய மரியாதையுள்ள எந்த இந்திய சமூகமும் தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய இண்டர்லாக் நாவலை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் ஆதாரமற்றது, அவமானப்படுத்துகிறது, இன உணர்வுகளைத் தொடுகிறது. இந்திய சமூகத்தை முழுமையாக இழிவுபடுத்தும் வகையில் வேண்டுமென்றே திரிக்கப்பட்ட வரலாற்று பிழைகளும் அதில் உள்ளன”, என்று சுகுமாரன் சொன்னார்.
அந்த நாவல் பற்றி மேலும் மறு ஆய்வுகளோ அல்லது மற்ற தரப்புக்களுடன் ஆலோசனைகளோ நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்ட அந்த டிஎபி போராளி, அந்தப் புத்தகம் இந்த நாட்டில் நிலவுகிற இன ஒற்றுமை சீர்குலைவதற்கு வழி வகுப்பதற்கு முன்னர் தேசிய இடைநிலைப் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலிருந்து அது மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

"அந்த நாவலில் வருகின்ற கதாபாத்திரங்கள் ஆக்கப்பூர்வப் பண்புகளைப் பிரதிபலிக்கவில்லை. பள்ளிக்கூட நிலையில் அது கற்பதற்கான ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டால் அது புனிதமான பண்புகளை மேம்படுத்தாது.  மாறாக மற்ற இனங்கள் மீதும் இந்திய சமூகம் மீதும்  வெறுப்புணர்வையே அதிகரிக்கும்”, என்றும் சுகுமாரன் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment