Thursday, February 3, 2011

செனட்டர் கோகிலன், மக்கள் பிரதிநிதி அல்ல என்கிறார் சுகுமாரன்

செம்பருத்தி இணையதளம் செய்தி

இந்தியர்களை இழிபடுத்திய வாசகத்தின் எந்த பக்கத்தை பார்த்தாலும் அதனை வெறுக்க தோணும் பொழுது புரிந்து கொள்ளுங்கள் என்று கூறுவது அமைச்சருக்கு அழகல்ல. வார்த்தையின் வழி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் கோகிலன் பிள்ளை போன்ற அரசியல் வியாதிகளை எந்த ஒரு தமிழர் நிகழ்வுக்கும் அழைக்கக்கூடாது. கோகிலன் வார்த்தையில் இந்திய சமூதாயத்தின் எதிர்காலத்திற்கு கெட்ட சகுனத்தை காண முடிகிறது என சுகுமாரன் சாடியுள்ளார்.

உண்மையான இந்தியனாக இருந்து இந்தியர்களின் நலனில் அக்கறை காட்டினால் மட்டுமே துணை அமைச்சர் பதவியில் நிலைக்க முடியாது என்ற தேசிய முன்னணியின் அரசியல் தத்துவத்தை கோகிலன் பிள்ளை நன்கு அறிந்து வைத்துள்ளார். ஒரு சில நேரங்களில் ஒட்டு மொத்த இந்திய சமுதாயமே அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் பொழுது, இந்திய சமுதாய பிரதிநிதிகள் இந்தியர்களை மேலும் இழிவுபடுத்த அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுவதும் அவர்களின் அரசியல் பதவிக்கும் பட்டத்திற்கும் விலை போவது வாடிக்கையாகிவிட்டது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபகாலமாக இண்டர்லோக் நாவல் நாட்டில் பல சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த சர்ச்சை எதனால் எழுந்தது என்பதனை செனட்டர் கோகிலன் முதலில் நன்கு அறிந்திருக்க வேண்டும். இந்தியர்கள் பல கோணங்களில் இண்டர்லோக் நாவலின் எழுத்தினால் பாதிகப்படுள்ளனர். அந்த புத்தகத்தின் வாசகங்கள் இந்திய சமுதாயத்தை பெரிய அளவில் பாதித்தது மட்டுமல்லாமல் பிற இனத்தவரையும் கேவலப்படுத்தியுள்ளது. அப்புத்தகத்தை முழுமையாக படித்த பிறகுதான் அந்நாவலுக்கு எதிராக இந்தியர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். அனைவரின் கண்களுக்கு தவறாக தென்படும் வாசகம் கோகிலன் கண்களுக்கு மட்டும் சரியாக தென்படுவது எப்படி? துணை அமைச்சர் என்ற காரணத்தினாலோ? என சுகு கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பாக சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ம.இ.க தலைவர்களும் அந்நாவலுக்கு முழுமனதாக எதிர்ப்பு தெரிவிக்கும்பட்சத்தில் கோகிலன் மட்டும் தனியாக ஒரு கருத்தை வெளியிடுவது, அமைச்சரவையில் இந்திய பிரதிநிதிகள் ஒற்றுமையாக இல்லை என்பது தெளிவாகிறது. மேலும், இந்நாவல் குறித்து தேசிய முன்னணியின் இந்திய அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் ஒன்று கூடி பேசவில்லை என்பதும் நிரூபணமாகிறது.

இது அரசியல் பிரச்னை அல்ல, மாறாக ஒரு சமூதாயத்தின் பிரச்னை என்று அனுதினமும் அனைத்து இந்தியர்களும் குரல் எழுப்பும் பொழுது செனட்டர் கோகிலன் போன்றவர்கள், அரசாங்கத்திற்கு சார்ந்து பேசுவது 52 வருட வழக்கமாகிவிட்டது. 

வெளியுறவு துறை துணை அமைச்சர் செனட்டர் கோகிலன் வெளிநாட்டு விவகாரங்களில் உண்ணிப்பாக கவனம் செலுத்தும் அதே வேளையில் உள்நாட்டில் என்னென்ன பிரச்னைகள் உண்டு என்பதனை சீர்தூக்கி பார்க்க வேண்டும். இது நாள் வரை வாய் மூடி மௌனமாக இருந்த கோகிலன், திடீர்ரென வீறுகொண்டு எழுந்து தன்முகத்தில் உமிழ்ந்து கொள்ளும் அளவிற்கு கருத்து தெரிவித்ததை கண்டால், மௌனமே அவருக்கு சிறந்தது என்று சொல்லவேண்டும்.

இனி இண்டர்லோக் நாவல் பிரச்னையில் அவர் மேலும் கருத்துரைக்காமல் இருந்தால், அது அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் சிறப்பாக இருக்கும் என சுகுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment