Tuesday, March 1, 2011

“வெளிநாட்டு ஆடு நனையுதென்னு உள்நாட்டு ஓநாய் அழுகிறது”


இண்டர்லோக் நாவலுக்கு எதிரான போராட்டத்தை துணைப் பிரதமர் காவல் துறையின் உதவியோடு தடுத்து நிறுத்திவிட்டார்.
அதே சமயத்தில் நேற்று பிரதமர் நஜிப் ரசாக், இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியினர் நாட்டின் மீது உலக நாடுகளின் பார்வைக்கு மலேசியாவை களங்கப்படுத்தும் எண்ணம் கொண்டுள்ளதாக அர்த்தமற்ற கருத்தை தெரிவித்தார்.
நேற்று நாளிதழ் செய்தியில், நாட்டின் உள்துறை அமைச்சர், அந்த ஆட்சேப கூட்டம் வெற்றியளிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஒருவர் தனது கல்வி அமைச்சின் கீழ் செய்த தவறை மறைக்க முற்படுகிறார், இன்னொருவர் உலக நாட்டின் பார்வை பற்றி கவலைப்படுகிறார் மேலுமொருவர் நோக்கம் நிறைவேறவில்லை என்கிறார்.
இவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக தங்களது பதவி கவசத்தை தற்காத்துக்கொள்ள பதில்கள் கூறுகிறார்களே ஒழிய, இந்திய சமுதாயம் ஏன் திரண்டார்கள், எதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்கள், அவர்களின் கோரிக்கை என்ன? அது தனிமனித கோரிக்கையா அல்லது ஒரு சமுதாயத்தின் குரலா என்று சீர்தூக்கி பார்க்காமல் மீண்டும் மீண்டும் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.
இதில் ஒரு சிறந்த வேடிக்கை என்னவென்றால், துணைப் பிரதமர் முகைதீன் யாசின், லிபியா மக்களின் சுதந்திரத்தை மதித்து அவர்கள் ஆட்சேபனை கூட்டத்தை நடத்த கடாபிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால் தனது நாட்டில் தனது மக்கள் அதுவும் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படும் இந்தியர்கள் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்த வாய்ப்பும் அடித்தளமும் வழங்காத முகைதீன் அந்த ஆலோசனை தர தகுதியானவரா?
முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம், நம் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு சட்டமா? அனைத்துமே மனித உயிர்கள் தானே, எதற்காக துணைப்பிரதமர் இருமாப்பான கொள்கையுடன் நடந்து கொள்கிறார். இவர் இந்நாட்டிற்கு துணை பிரதமராக இருக்க தகுதியானவரா?
கண்ணுக்கு தெரிந்த தன் நாட்டு இந்திய மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத முகைதீன், கண்ணுக்கு தெரியாத லிபியா நாட்டு மக்களுக்கு ஆதரவு கரம் வழங்குவது என்பது வியப்பாக உள்ளது.
இந்நாட்டில் இந்திய சமுதாயத்தின் போராட்ட சிந்தனைகளை ஒடுக்க நினைக்கிறது தேசிய முன்னணி. இந்தியர்களை அவமானப்படுத்தி அதில் நாட்டின் பல இன மக்களின் ஒற்றுமையின் நீரோட்டத்தை கலைத்து மக்களை பிளவுபடுத்தி காண முயற்சி செய்கிறது. இவ்வருடத்தின் மிகச்சிறந்த அரசியல் தந்திர சூழ்ச்சியின் ஏற்பாடுதான் இண்டர்லோக் நாவால்.
இந்திய சமுதாயத்தின் மேல் ஜாதி என்ற பிரிவுகளை காட்டி வேற்றுமை என்ற வர்ணத்தை பூசி பிளவை உண்டாக்குகிறது தேசிய முன்னணி. இனச் சிக்கலை ஏற்படுத்தும் இந்த தேசிய முன்னணிக்கு ஒரு சில இந்திய கட்சிகளும் அதன் தலைவர்களும் துதிபாடுவது வெட்கமாக உள்ளது. பதவியை தற்காத்துக்கொள்ள தன்மானத்தை விற்பதா?

No comments:

Post a Comment