Monday, January 10, 2011

மாணவர்களை செருப்பால் அடித்த ஆசிரியரை தண்டிப்பது யார்?


இடைநிலைப்பள்ளியில் புகுமுக வகுப்பை சார்ந்த இரண்டு இந்திய மாணவர்களை ஆசிரியர் தலையில் செருப்பால் அடித்தது மட்டுமல்லாமல் கீழே தள்ளி மாணவனின் நெஞ்சில் உதைத்தார்  என்று அம்மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
இந்நிகழ்வு சுல்தான் அப்துல் அசிஸ் இடைநிலைப் பள்ளியில் நிகழ்ந்துள்ளது. மாணவர்கள் ஒன்று கூடும் சபை நிகழ்வில் இவ்விருவரும் பேசிக்கொண்டிருந்தனர் என்ற காரணத்தினால் அந்த ஆசிரியர் அளவுக்கு மீறிய செயலை செய்தது கண்டிக்கத்தக்கது.
மாணவர்கள் தப்பு செய்வது சகஜம். அவர்களை கண்டிப்பது ஆசிரியர்களின் முழுமையான கடமையும் கூட. ஆனால் ஆசிரியர்களுக்கும் எல்லை உண்டு.
இச்செயல் எல்லை மீறலை விட சர்ச்சையான விவகாரம். அதுவும் சமீப காலமாக இந்திய மாணவர்களின் மேல் ஆசிரியர்கள் இவ்வாறு செய்வது, அவர்களின் மேல் அளவு கடந்த வெறுப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
ஒரு வேலை, அவ்விரு மாணவர்களுக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் யார் அதற்க்கு பொறுப்பு வகிப்பது? காலால் ஒரு மாணவனை நெஞ்சில் உதைத்ததாக கூறப்படும் மாணவனின் நெஞ்சில் உள்காயங்கள் ஏற்பட்டிருந்தால், என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது கல்வி கற்ற ஆசிரியர்களுக்கு தெரியாதா?
அதவைவிட பெரிய கொடுமை, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் செய்ய சென்ற பொழுது காவலர்கள் புகாரை எடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் முத்தையா உதவியுடன் புகார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதே போன்ற இன்னொரு சர்ச்சையான விவகாரம் கம்பாரிலும் நடந்தது. அதிலும் ஒரு இந்திய மாணவன் தான் ஆசிரியரால் செருப்பால் தாக்கப்பட்டார். இதுநாள் வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று யாருக்கும் தெரிவிப்பதும் கிடையாது. காவல்துறையில் புகார் செய்தால் அந்த ஆசிரியர்களையும் காவல்துறையில் விசாரணை செய்வதில்லை. கல்வி இலாக்காவில் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கையும் எடுப்பதும் கிடையாது. காலம் கடந்த பிறகு தான் விசாரணை செய்கிறார்கள்.
இது போன்ற செயல்கள் மாணவர்களுக்கு பெரிய பிரச்சனையாக முடிகிறது. புகார் செய்த காரணத்தினால் இனிமேல் அம்மாணவர்கள் அப்பள்ளியில் பயில தயக்கம் காட்டுவார்கள். மாற்றலாகி வேற ஒரு பள்ளிக்கு சென்றால் அங்கே இப்பிரச்சனையை முன்வைத்து அம்மாணவர்களின் மேல் கவனத்தை ஆசிரியர்கள் முழுமையா செலுத்துவதில்லை. ஏன் என்று கேட்டால், கடந்த கால புகாரை சுட்டிக்காட்டி பேசவும் வாய்ப்புண்டு. இதனால் மனரீதியாக பாதிக்கப்படுபவர்கள் மாணவர்களே.
சமீப காலமாக இந்தியர்களின் மேல் இழைக்கப்படும் கொடுமைகளை குறித்து நாம் அன்றாடம் தினசரி நாளிதள்களில் படிபதுண்டு. இதற்க்கு யார் காரணம் என்று ஆராயாமல், தக்க நடவடிக்கை எடுக்க மறுக்கும் தேசிய முன்னணின் அரசாங்கத்தை முழுமையா ஒதுக்குவதே இன்றைய சூழ்நிலையின் அவசியம்.
இரக்கமின்றி அரக்க குணத்தோடு நடந்துக்கொள்ளும் ஆசிரியர்களை குறை கூறுவதை விட பொறுப்பற்ற கல்வி அமைச்சின் தன்மூப்பான செயலே இதற்க்கு காரணம்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மேல் உரிய நடவடிக்கை தேவை என்பதெல்லாம் கடந்த கால கோரிக்கை. ஆனால் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப அந்த ஆசிரியரை உடனடியாக கல்வி கற்க தகுதியற்றவர் என்று முத்திரை குத்தி பணிநீக்கம் செய்தால், இது போன்ற பிரச்சனைகள் வருங் காலத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.குலசேகரன் தனது பத்திரிக்கை   அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment