Thursday, January 6, 2011

குவலா பிலா தமிழ் பள்ளிக்கு புதிய கட்டிடம் கோரி கையெழுத்து வேட்டை

06/01/2011 - செம்பருத்தி இணைய செய்தி 


இந்தியர்களின் தேவையை அறிந்து தேசிய முன்னணி அதன் சேவையை முழுமையாக வழங்குமா என்ற கேள்வி மீண்டும் மலர்ந்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் இந்தியர்களின் மனதை  கவர்வதில் தோல்வி கண்ட தேசிய முன்னணி மீண்டும் அதன் பழைய பாணியை தொடர்கிறது.
60 ஆண்டுகளுக்கு முன்பு அரை ஏக்கரில் கட்டப்பட்ட குவலா பிலா தமிழ் பள்ளியில் இன்று மாணவர்களின் எண்ணிக்கை 180 தாக உள்ள வேளையில் மாணவர்கள் சுகமான சூழழில் கல்வி பயில திணறுகின்றனர்.
சுமார் 5.5 சதவிகிதம் இந்திய ஜனத்தொகை கொண்ட குவலா பிலா மாவட்டத்தில் அன்றைய காலங்களில் பெரும்பாலான இந்தியர்கள் மரவெட்டு தொட்ட தொழிலாளர்களாக பணிபுரிந்தது உண்மையாகும்.
இந்திய மக்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டு, இத்தமிழ்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் சுற்றுவட்டார இந்தியர்களும் ஒரு புதிய தமிழ் பள்ளியை தாராளமான நிலப் பரப்பளவு கொண்ட இடத்தில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை பல முறை முன்வைத்துள்ளனர். இக்கோரிக்கையின் முதல் காரணமே இந்திய மாணவர்களின் எண்ணிக்கையாகும்.
இடப்பற்றாகுரையும் அசௌகரியமான சூழலையும் அடிப்படையாக கொண்டு, பல இந்திய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இத்தமிழ்பள்ளியை தவிர வேற ஒரு பள்ளிக்கு அனுப்ப ஆர்வம் காட்டுகின்றனர். உதாரணமாக சொல்லப்போனால், இப்பளியின் கழிவறை மாணவர்களின் வகுப்பறைக்கு அடுத்து அமைக்கப்படுள்ளதாகும்.
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி, ஜ.செ.க.நெகிரி மாநில தலைவர்களில் ஒருவரும் செனாவாங் சட்டமன்ற உறுப்பினருமான பி.குணசேகரன் தலைமையில் அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரிய சங்க பிரநிதிகளுடன் கூட்டம் ஒன்று நடைப்பெற்றது.
அதில் பகாங் மாநில ஜ.செ.க-வின் மகளிர் தலைவி து.காமாட்சி மற்றும் பல பொது மக்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  அப்பொழுது அக்கூட்டத்தில், இப்பள்ளியின் சூழ்நிலையை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல மக்களின் ஆதரவுடன் கையெழுத்து வேட்டை ஒன்றினை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இன்று அவை தொடங்கப்பட்டது.
இப்பள்ளியின் விவகாரம் குறித்து ம.இ.க-வின் ஆட்சி குழு உறுப்பினர் திரு.வி.எஸ். மோகன் வெளிட்ட செய்தி அறிக்கைகள் மிகவும் தெளிவற்ற பாணியில் அமைந்தது மட்டுமல்லாமல் இப்பள்ளிக்கான நிலவிவகாரம் பற்றி உறுதியற்ற நிலைப்பாடினை வலுப்படுத்தியது.
மேலும், ஒரு கட்டத்தில் இப்பள்ளிக்கான நிலம் அடையாளம் காணப்பட்டது என்று கூறியதை, மாநில கல்வி இலாக்கா மறுத்து விட்டது. இப்பள்ளிகான புதிய கட்டிட கோரிக்கை இத்தனை வருடக்காலமாக அரசாங்கம் தனிமைப்படுத்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
தற்சமய சூழலில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தமிழ் பள்ளிகளில் கூடிகொண்டே போகிறதை அரசாங்கம் முழுமையாக கவனிக்க வேண்டும். 1957 ம் ஆண்டில் சுமார் 50000 மாணவர்கள் 880 மேற்பட்ட தமிழ் பள்ளிகளில் பயின்றார்கள் என்பதனை புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.
இன்றைக்கு மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ள வேளையில் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எந்த விதத்தில் இதனை நியாபடுத்துவது?
கடந்த சில வருடங்களில் இந்தியர்களின் மத்தியில் தாய் மொழி பாடத்தை கற்றுக்கொள்ளும் ஆர்வம் மேலோங்கிவிட்டது. அதனால் அவர்களின் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர்.
மேலும் தேசிய மொழி பள்ளிகளில் இஸ்லாமிய பாடங்களின் ஆதிக்கம் கூடுதலாக இருப்பதால், இந்திய பெற்றோர்கள் தனது பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்புவதும் உண்டு. இதனை அரசாங்கம் ஊக்குவித்து தமிழ் பள்ளிகளின் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய முயலவேண்டும். செய்ய வில்லை என்றால், இந்திய குழந்தைகளின் எதிர்காலத்தின் மேல் அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை என்றுதான் வெளிப்படையாக சொல்ல முடியும்.
இன்றைய நாள் வரை சுமார் 90 சதிவிகித சீனர்களும் 60 சதவிகித இந்தியர்களும் தனது பிள்ளைகளை தாய் மொழி பள்ளிகூடங்களுக்கு அனுப்புகிறார்கள் என்பது உண்மையாகிறது. இவர்களின் உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளித்து போதுமான தேவைகளை பள்ளிக்கூடங்களில் வழங்கவேண்டும்.
குவலா பிலா தமிழ் பள்ளியின் அசௌகரியமான சூழலை முன்னுதாரணமாக கொண்டு, இந்தியர்களுக்கு அரசாங்கம் போதுமான பள்ளிகூடங்களை கட்டுவதுமட்டுமல்லாமல், மாணவர்கள் சுகமான சூழலில் கல்வி கற்க அப்பள்ளிகளில் போதுமான இடவசதியை செய்து தர வேண்டும்.
ஆகையால் நெகிரி மாநில ம.இ.க-வின் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.எஸ்.மோகன், ம.இ.க மற்றும் கல்வி அமைச்சு அனைவரும் ஒன்றிணைத்து எந்த ஒரு பாராட்சமும்மின்றி நெகிரி மாநில அரசாங்கத்திடமிருந்து குவலா பிலா தமிழ் பள்ளிக்கு கல்வி அமைச்சின் 1957ஆம் ஆண்டின் “கல்வி திட்டங்கள் விதிமுறைகளுக்கு” உட்பட்டு சுமார் 2 – 4 ஹெக்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை வழங்கி புதிய கட்டிடம் கட்டி வசதிகள் செய்து தர வேண்டும்.
2008 ம் தேர்தல் முடிவினை படமாக கொண்டு, இந்தியர்களின் இந்த வேண்டுக்கோளை பூர்த்தி செய்ய தேசிய முன்னணி முனைப்பு காட்டுமா அல்லது மேலும் உதாசினப்படுத்துமா என்று மீண்டும் அனுபவிக்க வேண்டிய காலமிது. 
இந்த கோரிக்கையை வெற்றியடையுமா அல்லது கனவாகவே திகழுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும் மு.குலசேகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment