Monday, January 3, 2011

சிலாங்கூர் மாநில ஆட்சியை அபகரிக்க தே.மு திட்டம், குலசேகரன்


03/01/2011 - செம்பருத்தி இணையதளத் செய்தி 


பேராக் மாநில மக்கள் கூட்டணின் நம்பிக்கையின் சின்னமாக விளங்கும் டத்தோ நிஜார் கூறியது போல சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சியை அபகரிக்க மத்திய அரசாங்கம் தனது சூழ்ச்சி வலைகளை விரிக்க ஆரம்பத்துவிட்டது.
அதன் முதற்கட்டமாக மாநில செயலாளர் நியமனத்தில், சிலாங்கூர் மக்கள் கூட்டணி அரசாங்கத்திடம் கலந்தாலோசிக்காமல் நியமனம் செய்ததாகும் என  ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் அங்கிகாரம் வழங்கிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் பொழுது, தனது சுய அரசியல் லாபத்திற்காக தேசிய முன்னணி மீண்டும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது. இந்த ஆட்சியை கவிழ்த்து விட்டால் தேசிய முன்னணி தனது கொள்கைகளை காப்பாற்றலாம் என்று எண்ணம் கொண்டுள்ளது.
தேசிய முன்னணி மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதில் சுணக்கம் காட்டும் வேளையில், தனது அரசியல் சுயநலத்திற்காக மேலும் மேலும் குழப்பத்தை உருவாக்குவதில் நுணுக்கமாக ஆர்வத்தை காட்டுகிறது. இதன் வழி மக்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதும் தெரிகிறது. மக்கள் கூட்டணி மேல் மக்கள் வெறுப்பை வளர்க்கும் வகையில் தேசிய முன்னணியின் சூழ்சிகள் அமைகிறது
சிலாங்கூர் மாநிலத்தில் மக்கள் கூட்டணி அரசாங்கம் மக்களுடன் ஒற்றுமையாகவும் செல்வாக்காகவும் இருப்பது தேசிய முன்னணியின் கண்ணை பறிக்கிறது. நற்பெயரை ஈட்டிக்கொண்ட மக்கள் கூட்டணியின் மேல் அகோர அரசியல் தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பது வெட்ட வெளிச்சமாகிறது.
நிஜார் கூறியது போல, மீண்டும் ஒரு ஆட்சி அபகரிப்பு நாட்டின் அரசியல் சாசனத்தில் எழுதப்படும் சூழ்நிலை உருவாக சாத்தியமுள்ளது. பேராக் மாநிலத்தில், மாநில செயலாளர் தேசிய முன்னணியின் கைப்பாவையாக இருந்து, மக்கள் கூட்டணி ஆட்சி கவிழ்வதில் முக்கிய கடமையாற்றினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இனிமேலும் சட்டத்தை புரட்டி, விசாரணை செய்து உண்மை எது பொய் எது என்று அறிவதற்கு காலதாமதமாக உள்ள வேளையில், நீதிமன்றத்தில் இப்பிரச்சனையை தீர்த்துக்கொள்ள சட்டம் இடங்கொடுத்தாலும், செயல் படுத்தும் பொழுது எந்த ஒரு வாய்ப்பும் சாதக சூழ்நிலையை உருவாக்கும் என்று கூறுவது கடினம்தான்.
அப்படியே நீதிமன்றம் சென்றாலும், அவை இழுபறி நிலைக்கு தள்ளப்படும் என்பதும் ஆணித்தரமான உண்மையாகும்.
அவ்வாறு செய்வதினால், சிலாங்கூர் மக்கள் கூட்டணியின் மாநில ஆட்சியின் கவனத்தை திசை திருப்பி, தேசிய முன்னணி தனது சூழ்சிகளை அடுக்க வாய்ப்புண்டு. அவை அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு அடித்தளமாக அமையும். இவை தேர்தல் நோக்கமுல்லவை. அதற்காகத்தான் இத்தனை விதமான குழப்பங்கள்.
தேசிய முன்னணி நேர்மையான கொள்கைகளை உதறிவிட்டு, நாட்டின் முன்னேற்ற லட்சியத்தை உதாசினப்படுத்தி ஆட்சியை அபகரிக்க முயல்கிறது.
கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றியில் மக்களின் நம்பிக்கைக்கும் வெற்றி கிடைத்துள்ளது. நேர்மையான லட்சியமும் அதில் கலந்துள்ளது.
“இவை இரண்டும் நிலை நாட்டப்பட்டால் மட்டுமே ஆட்சியை மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தில் மலர வைக்க முடியும் மக்கள் கூட்டணி. தேசிய முன்னணியின் சூழ்ச்சியை மக்கள் நன்கு கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அராஜகம் வழி ஆட்சியை அமைக்க மக்கள் ஒரு பொழுதும் துணை போகமாட்டார்கள் என்பது என்னுடைய அசைக்கமுடியாத எண்ணம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment