Wednesday, March 16, 2011

“சிம்ம குரலோன் பி.பட்டுவை யாரும் மறக்கவில்லை” : கோ.ஆனந்தன்


அரசியல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அதில் தலைவரையோ அல்லது தலைவர் குடும்பத்தினரையோ இன்றைய அரசியல்வாதிகள் மறந்து விடக்கூடாது என்று எச்சரிக்கை ஓலமிடுதல் மிகவும் வேடிக்கையாக உள்ளது என ஜ.செ.க தாமான் லோக் லிம் கிளையின் தலைவர் கோ.ஆனந்தன் தெரிவித்தார்.
“ஜ.செ.க-வின் சிம்ம குரலோன் பி.பட்டுவை மறந்துவிடாதீர்கள்” என்று அறிக்கை விடுவது மேலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும். தலைவர் பட்டுவை யார் மறந்துவிட்டார்கள்? கட்சியா? அல்லது அவரின் அரசியல் சுவடிகளை பின்பற்றிவரும் இன்றைய பேராக் மாநில ஜ.செ.கவின் மக்கள் பிரதிநிதிகளா? யாரும் ஒரு பொழுதும் அவ்வாறு செய்தது கிடையாது என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆனந்தன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 
பி.பட்டுவின் மகள்களுக்கு அரசியலில் அங்கிகாரம் வழங்க வேண்டும் என்று சொல்வது நியாயமான ஒன்றாக இருக்கும் வேளையில், வாரிசு அரசியல் என்ற கலாச்சாரம் ஜ.செ.க-வில் உள்ளது என்று சுட்டிக்காட்டி இன்றைய கட்சின் சிங்கமாக விளங்கும் கர்பால் சிங்கையும், சின்னமாக காட்சியளிக்கும் லிம் கிட் சியாங் போன்ற தலைவர்களின் புதல்வர்களை எடுத்துக்காட்டாக வைத்து கோரிக்கை விடுவது மூத்த அரசியல்வாதி பஹாங் மாநில சிம்மாத்திரி அவர்களுக்கு அழகல்ல.
ஆனால், தற்பொழுது உள்ள சூழ்நிலையை பார்த்தால், ஒரு சிலர் சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுத்துவிடலாம் என்று எண்ணம் கொண்டுள்ளது போல் தெரிகிறது. பிறரின் இயலாமையை சரியாகப் பயன்படுத்தி கொண்டு அறிக்கை விடுவது திறமையல்ல. ஒருவருக்கு நல்லதை செய்ய வேண்டுமென்ற எண்ணமிருந்தால் அதனை ஓலமிடாமல் செய்வது நன்று. தலைவர் சிம்மாதிரிக்கு இது தெரியாதா என்ன?
பி.பட்டுவின் அரசியல் சேவையை யாரும் மறந்திருக்காத வேளையில், அவரின் புதல்விகளுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தால், அப்பயணத்தையும் நன்றே தொடக்கி வைக்க மு.குலசேகரனும், அ.சிவநேசனும் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களுடன் இணைந்து அவர்களுக்கு உதவிகரம் வழங்க நானும் என்ன கிளையின் உறுப்பினர்களும் தயாராக இருக்கிறோம்.
ஆனால், எந்த ஒரு தலைவரின் வாரிசுகளையும் கட்டாயப்படுத்தி அரசியலில் ஈடுபட நாங்கள் எண்ணம் கொள்ள மாட்டோம்.
இறுதியாக, தலைவர் பி.பட்டுவை யாரும் மறக்கவில்லை என்பதனை இவ்வேளையில் கௌரவமாக தெரிவித்துக்கொள்கிறேன். அறிக்கைக்காக தலைவர் பி.பட்டுவின் பெயரை களங்கப்படுத்த  வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்பருத்தி இணையதள செய்தி 

No comments:

Post a Comment