இனவாத அரசியல் கலாச்சாரத்தை கைவிட்டு ஜனநாயக அரசியல் செயற்பாடுகளின் மீது தேசிய முன்னணி முழு நம்பிக்கை வைத்திருந்தாள், தீய சக்தியாக விளங்கும் பெர்காசாவின் சங்கப் பதிவை உடனடியாக இரத்து செய்து அதன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என ஜ.செ.க-வின் தேசிய உதவித் தலைவர் மு.குலசேகரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
பெர்காசாவின் எல்லை மீறல் செயலுக்கு அளவுகோள் என்பது இல்லாமல் போய்விட்டது. ஆரம்பக் கட்டத்தில் இனவாத வார்த்தைகளை விதைத்த பொழுது மௌனமாக இருந்த தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள், இன்று அவை துளிர் விட்டு வளரும் பொழுது அதன் ஆழமான பாதிப்பை உணர்கிறார்கள் என்பது உண்மையாகிறது என குலா கூறினார்.
வன்முறையாக பேசுவதும், வன்முறையாக சாடுவதும், வன்முறையாக ஆர்பாட்டம் நடத்துவதும் ஜனநாயக உரிமையை வெளிப்படுத்தாது என்று பெர்காசாவுக்கு தெரியாதா? தனது இனத்தின் சகல அம்சங்களை பாதுகாக்க பெர்காசா குரல் எழுப்பலாம், கோரிக்கை விடலாம், ஆனால் அவை மற்ற இனத்தவர்களின் ஜனநாயக உரிமைக்கு பாதிப்பு தரும் அளவிற்கு நடந்துக்கொள்வது ஏற்புடையதள்ள. இவ்வாறு செய்வதினால், அவை பல இன மக்களுக்கிடையே வெறுப்புத்தன்மையை உருவாக்கும் என்பது திண்ணம். பெர்காசாவின் உண்மையான நோக்கம் என்ன? மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதா? அல்லது இந்நாட்டில் மலாய் அல்லாத மக்களை தனது கொள்கைக்கு பலிகொடுப்பதா? என குலசேகரன் கேள்வியெழுப்பினார்.
இப்பொழுது தனது அடுத்த கட்ட இனவாத செயலை தூண்டுவதற்காக, தற்போது பெர்காசா ரெலா உறுப்பினர்களை தனது இனவாத கொள்கைக்கு பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கியதா? இல்லையென்றால், ரெலா சீருடையில் பெர்காசாவின் அப்துல்லா, நிகழ்ச்சி ஒன்றில் பேசியதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என அவர் மீண்டும் கேள்வியெழுப்பினார்.
பெர்காசா தனது உறுப்பினர்களின் மனதில் பிற இனத்தவர்களின் பற்றி மிகவும் ஈனத்தனமான முறையில் பேசி அவர்களை இனவாத மோகத்தில் தள்ளி அவர்களின் மனதில் நஞ்சை பூசுகிறது. இதனால் எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் நாட்டின் பல இன மக்களின் ஒற்றுமை சீர்குலைந்து போகும் அபாயம் தோன்றும் நிலை உருவாகிவிட்டது. அதைவிட பொது மக்களின் மத்தியில் ஒரு வகை அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் தெளிவாக கூறலாம். அதே தருணத்தில் பெர்காசாவின் எல்லை மீறல் மோசமடைந்தால், மக்களிடையே இருக்கும் அச்சம் தலைதூக்கினால் நாட்டில் கலவரம் ஏற்படும் சாத்தியமும் உள்ளது.
அதனால் இவர்களின் செயல்களை அடியோடு வேரறுக்கப்பட்டு நாட்டில் சமாதானமும் சுபிச்சமும் மற்றும் சமமான வாய்ப்பு சந்தர்ப்பங்கள் அமைக்க அரசு எண்ணம் கொண்டிருந்தாள் பெர்காசா இயக்கத்தின் சங்க பதிவினை இரத்து செய்து உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க முயலவேண்டும் என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் சொன்னார்.
பெர்காசாவின் எந்த ஒரு ஆர்பாட்ட அணிக்கும் இனியும் போலீஸ் அனுமதியோ? அல்லாதோ பாதுகாப்போ வழங்க கூடாது என்று உள்துறை அமைச்சு பரிந்துரை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் நாட்டு மக்கள் சுதந்திரமாக தமது மக்கள் பணியை மேற்கொள்ளுவதற்கு போலீசும் தனது கடமையை சரிவர செய்து சமமான பாதுகாப்பு தன்மையை வழங்க வேண்டும் என குலசேகரன் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment