பலரும் பலவிதமாக எதிர்த்த இண்டர்லோக் நாவலை தடைசெய்ய முடியாது என்று மிகவும் புன்னகை கலந்த கேலித்தனம் கொண்ட முக பாவனையுடன் நாட்டின் துணை பிரதமர் முகைதீன் யாசின் நாடாளுமன்ற விவாதத்தின் போது நாவலின் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது என்று தெரிவித்தார்.
அவரின் அந்த அறிவிப்பு, இந்திய சமுதாயத்தை தேசிய முன்னணி அரசாங்கம் துளி அளவு கூட மதிக்கவில்லை என்பதனை தெளிவுபடுத்திவிட்டது. அதற்கு தோதாக ம.இ.கா-வும், தலையசைத்து சம்பதம் தெரிவித்தது.
இருப்பினும், இவ்விவகாரம் இன்னும் ஓயவில்லை என்று தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு நன்கு புரியும். இண்டர்லோக் நாவலை இடைநிலைப் பள்ளியின் பாட புத்தகப் பயன்பாட்டிலிருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய சமுதாயம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதும் அவர்களுக்கு தெரியும் என பந்தை ரெமிஸ் துன் சம்பந்தன் தோட்டத்தில் உரை நிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் கூறினார்.
மேலும் இந்நாவலில் இடம்பெற்றுள்ள வாக்கிய கோளாறுகள், சரித்திர தவறுகள் அனைத்தும் இந்திய சமுதாயத்தின் வாழ்க்கை தரத்தை சிதைக்கும் அளவிற்கு அமைந்திருக்கிறது என்று தேசிய முன்னணி உணர்ந்துள்ளது. ஆனால் எதனால் இவை அனைத்தும் அறிந்த ஒரு அரசாங்கம் இதுநாள் வரை இண்டர்லோக் நாவலை தடைசெய்ய தயக்கம் காட்டுவது ஏன்? என குலா கேள்வியெழுப்பினார்.
தேசிய முன்னணி இப்பொழுது ஒரு வெளிப்படையான தைரியத்தில் உள்ளது. அதாவது, கூடிய விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலில், இந்த இண்டர்லோக் நாவல் பிரச்சனை தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்பினை பெரிதும் பாதிக்காது என்ற பகல் கனவில் இருக்கிறது.
அண்மையில் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் தி.மோகன், தேசிய முன்னணிக்கு இந்தியர்களின் ஆதரவு உள்ளது என்று மிகவும் ஆரவாரத்துடன் பேச ஆரம்பித்துள்ளார்.
இந்த இண்டர்லோக் நாவல் விவகாரம் மட்டுமே தேசிய முன்னணியின் உணர்ச்சியற்ற கர்வமுள்ள அரசியல் சாசனத்தை முறியடிக்க முடியும் என்பதே திண்ணம். ம.இ.காவை போன்ற முதுகெலும்பு இல்லாத கட்சிக்கு, இண்டர்லோக் நாவல் பிரச்சனை என்பது ஒரு பெரிய பிரச்சனையல்ல. காரணம், தைரியமாக குரல் எழுப்ப திறமை இல்லாத கட்சிதான் ம.இ.கா என குலசேகரன் சாடினார்.
இண்டர்லோக் நாவல் தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பக்கூடியவர்களுக்கு, நிச்சயமாக அதன் காரணம் விளங்கும். அதன் அடிப்படையில், இந்நாவல் இடைநிலைப்பள்ளியில் கட்டாயப் பாட நூலாக பயன்படுத்தப்பட்டால், அவை உறுதியாக இன ஒற்றுமையில் நஞ்சுத் தன்மையை உருவாக்குவதை நாம் ஆணித்தரமாக சொல்லலாம் என அவர் கூறினார்.
ஆகவே இனியும் தேசிய முன்னணி இந்தியர்களின் எதிர்ப்பு குரலை பொருப்படுத்தாமல் புறக்கணித்து தொடர்ந்து செயல்பட்டால், இந்திய சமுதாயம் தனது அதிகாரப்பூர்வமான சக்தியாக விளங்கும், வாக்குரிமையைக் கொண்டு அடுத்தப் பொதுத்தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர முயற்சி செயல் வேண்டும் என குலசேகரன் வேண்டுகோள்விடுத்தார்.
செம்பருத்தி இணையதள செய்தி
No comments:
Post a Comment