நாடு சுதந்திரம் அடைந்து 53வருடங்கள் ஆனாலும் இன்னும் சிலர் இனவாத வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு சிறிதும் அச்சப்படுவதில்லை.
இனவாத வார்த்தைகள் என்றைக்கும் அமைதியான சூழ்நிலைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அது போன்ற வார்த்தைகளை வாரி வீசுகிறார்கள். நமது நாட்டின் ஒழுக்கநெறிகளுக்கும் சட்டமைப்புக்கும் சவால் விடும் வகையில் நடந்துக்கொள்கிறார்கள்.
முதலில் இனவாதம் கொள்கை ஒழிக்கப்படவேண்டும்.மேலும் இனவாத வார்த்தைகளை அள்ளி வீசும் நபர்களின் மீது எந்த ஒரு பாரபட்சமின்றி உடனைடியாக கடும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் வகைசெய்ய வேண்டும். இந்நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் இன ஒற்றுமையை நிலைநிறுத்த பாடுபடவேண்டும்.
இன ஒற்றுமைதான் தேசிய பாதுகாப்பு என்பதனை மக்களுக்கு உணர்த்தவேண்டும். தேசிய பாதுகாப்பு அரசியல் நிலைப்பாட்டினை வலுப்படுத்தும் என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்ளல் வேண்டும்.
கடந்த காலங்களில் நாட்டின் பாதுகாப்புக்கு இன ஒற்றுமை முக்கிய பங்களித்தது. பல லட்சம் மக்கள் பல இனமாக வாழ்ந்தாலும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து வாழ முயற்சி செய்து வெற்றிகொண்டனர். அச்சூழ்நிலை நாட்டின் முதன்மை சொத்தாக திகழ்ந்தது.
மீண்டும் அச்சூழ்நிலை வலுவடைய நாம் எழுந்து நின்று இனத்துவேசமாக பேசும் நபர்களுக்கு எதிராக எதிர்குரல் கொடுப்பதை விட இன ஒற்றுமையான தகவல்களை வெளியிடுவதே சாலச்சிறந்ததாகும்.ஒற்றுமையை சீர்குலைப்பது பயங்கரவாத செயலுக்கு சமமானது.
உலகில் சிறந்த நாடாக இந்நாடு திகழ அரசியல் கொள்கைகளை பாதுகாப்பதை விட்டுவிட்டு சமூக கொள்கைகளை பரப்ப அனைவரும் முன்வரவேண்டும். அவ்வாறு செய்தால் நாட்டின் ஒருமைப்பாட்டை மேலோங்க செய்யமுடியும். அரசியல் தலைவர்களின் அர்பணிப்பே இதில் மிக முக்கிய பங்காகும்.
அன்பான பேச்சும் அமைதியான சூழ்நிலையும் எவ்விதமான இனவாத சந்தத்தையும் தவிடுபொடியாக்கிவிடும் என்பதில் நம்பிக்கை கொள்ளவேண்டும். வார்த்தை மூலம் வாக்குவாதங்களை வளர்க்க ஒருபொழுதும் நாம் முயற்சிசெய்ய கூடாது. உலகுக்கு அன்பின் வழி பல புகழ்பெற்ற பாடங்களை காட்டியது உண்மை. ஆகையால் அவ்வழியே நமது இன ஒற்றுமைக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயலை அடியோடு அறுத்துவிடலாம் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது. ஒற்றுமை வலுவடையும் வரை அனைத்து மலேசியர்களும் ஓய்வெடுக்கக்கூடாது. அன்பாக பேசி அன்பாக வாழுவோம்.
சிந்தித்து பாருங்கள்.
No comments:
Post a Comment