Saturday, September 11, 2010

விநாயகர் சதுர்த்தி

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

எந்த ஒரு பூஜை செய்தாலும் அல்லது நல்லகாரியம் செய்தாலும் விக்னேஸ்வர பூஜை செய்துவிட்டு தான் தொடங்குவார்கள்.

இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம். இந்த ஆண்டு ஆவணி மாதம் 26ஆம் தேதி சனிக்கிழமை 11.09.2010 இந்த விரத தினம் சம்பவிக்கின்றது.

பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும்.

தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, மொரிஷியஸ் தீவு மற்றும் மேற்கு நாடுகளிலும் விநாயக வழிபாடு, ஆவணிச் சதுர்த்தி தினத்தன்று மாத்திரமே கொண்டாடப்படுவதுண்டு. ஆனால் இந்தியாவின் வடமாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயக சதுர்த்தியானது பத்துத் தினங்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. அவர்கள் கழிமண் கடதாசி, அட்டை, பிளாஸ்ரர் ஆவ் பரிஸ் முதலிய பொருட்களைக் கொண்டு சிறியதும், பெரியதும், பிரமாண்டமானதுமான பிள்ளையார் சிலைகளை வடிவமைத்து வர்ணங்கள் தீட்டி அலங்கரித்து பிரதேசங்களின் சந்திகளிலும், வீதியோரங்களிலும், பொது மைதானங்களிலும் மேடையமைத்து வைத்து பத்துத் தினங்கள் வழிபாடியற்றுவர். ஆண், பெண், சிறுவர், பெரியோர், மேல்சாதி கீழ்சாதி என்ற பேதம் எதுவுமின்றி இந்துக்கள் சகலரும் ஒன்றுகூடிப் பிரார்த்தனைகள் பஜனைகளில் கலந்துகொண்டு வழிபடுவர். வழிபாடு மிகவும் கோலாகலமாக பத்து நாட்களுக்கு நீடித்து, 'ஆனந்த சதுர்த்தசியான' பத்தாம் நாள் ஆடல் பாடல்கள், பஜனைகள், வாத்திய இசைகள் சகிதம் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலிலோ, ஆறு குளங்களிலோ, கிணறுகளிலோ நீருடன் சங்கமிக்க விட்டுவிடுவர்.  - சென்னை ஒன்லைன்-

No comments:

Post a Comment