Tuesday, February 8, 2011

மலாய் ஆலோசனை மன்றத்தின் நடவடிக்கை விரோதத் தன்மையை நிலைநாட்டும்

செம்பருத்தி இணையதள செய்தி









ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைத்தும் உள்நோக்கத்துடனும் இழிவு படுத்திய இண்டர்லோக் நாவலை தடைசெய்ய கோரிக்கை விடுத்தால், மலாய் ஆலோசனை மன்றம் ஒட்டுமொத்த மலேசியவாழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அளவிற்கு குரல் எழுப்புவது நாட்டில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயலாக கருதப்படுகிறது என ஈப்போ பாராட் நாடாளுமன்ற  உறுப்பினர் மு. குலசேகரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குலா தெரிவித்துள்ளதாவது:
நாவலை தடைசெய்ய இந்தியர்கள் கொடுக்கும் குரலுக்கும் மலாய் மேலாண்மையை காரணமாக கொண்டு மலாய் ஆலோசனை மன்றம் சொல்லும் காரணத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. எதற்க்காக மலாய் மேலாண்மையை பற்றி இவர்கள் இவ்வேளையில் பேச வேண்டும்?
பிற இனத்தவர்களுக்கு சகல வாழ்வுரிமைகள் இருக்கும் வேளையில் இந்நாட்டில் பிறந்து வளர்ந்த அனைத்து இந்தியர்களுக்கும் அதே சலுகைகளும் உரிமைகளும் உண்டு என்பதனை மலாய் ஆலோசனை மன்றம் ஆழமாக உணர்தல் வேண்டும்.
இண்டர்லோக் நாவலில் வார்த்தை கோளாறுகள் மட்டுமல்லாமல் சரித்திரபூர்வமான தவறுகள் ஏற்பட்டுள்ளது. அதனை முதலில் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். எந்த ஒரு மதத்தை சார்ந்த எழுத்தாளனாக இருந்தாலும், ஒரு நாவலை எழுதும் முன், அதன் கற்பனை கதாபாத்திரத்திற்கு நல் வழி ஒழுக்க குணங்களை எடுத்து காட்ட வேண்டும்.
அதனை செய்யாமல் இந்திய சமுதாயத்தை இழிவு படுத்தும் வகையில் விமர்சனம் செய்து புத்தகம் வெளியிட்டு அதனை பாட புத்தகமாக அங்கிகாரம் வழங்கியது மலேசியவாழ் இந்தியர்களின் மனதை புண்படுத்தியுள்ளது.
இந்நாவலை தடை செய்ய கோரிக்கை விடுத்தது “இந்தியர்களின் பாரம்பரியத்தை பற்றி இனிமேலும் யாரும் தவறாக எழுதக்கூடாததற்க்காகவும், இந்தியர்களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க மட்டுமே”. ஆனால் மலாய் ஆலோசனை மன்றம் மிகவும் உணர்சிகரமாக இப்பிரச்னை கையாளுகிறது.
ஒரு மலாய் இலக்கியவாதியின் நாவலை ஒட்டுமொத்த இந்திய சமுதாயமே எதிர்க்கும் அதே வேளையில், அனைத்து மலாய்காரர்களும் இனிமேலும் எந்த ஒரு அரசியல் கூட்டணியின் இந்திய பிரதிநிதிகளுக்கு ஆதரவு வழங்ககூடாது என்பது, தனிமனித ஜனநாயக சுதந்திரத்திற்கு  தடையாக அமைகிறது.
மேலும், மலாய்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் மத்தியில் ஒற்றுமையை முறிக்க தூண்டும் செயலாகவும் உள்ளது. இவர்களின் இத்தகையான கூற்று, மலாய் மக்களிடம் விழிப்புணர்வை கொண்டுவராது, மாறாக மனதில் காலத்திற்கும் அழியாத விரோதத்தன்மையை நிலைநாட்டும் என்பதே திண்ணம்.
இந்தியர்களின் ஆட்சேப குரலின் காரணத்தால் இண்டர்லோக் நாவலை தடைசெய்தால், அரசாங்கம் பலவீனமாகிவிடும் என்று மலாய் ஆலோசனை மன்றம் கூறுவது அர்த்தமற்றது. அந்நாவல் இந்திய சமுதாயத்தின் கௌரவத்திற்கு இழிவை ஏற்படுத்தியது, இந்தியர்களின் மத்தியில் வேதனை உண்டாகியுள்ளது.
பல அடிப்படையற்ற குறிப்புகள் அடங்கிய மகஜரை மலாய் ஆலோசனை மன்றம் பிரதமருக்கு வழங்கியதோடு மௌனம் சாதிப்பது அனைவருக்கும் நல்லது. மேலும் மேலும் விஷம குணத்தோடு சூழ்நிலையை உஷ்ண நிலைக்கு கொண்டு செல்ல முற்படுவதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்.
தவறாக கதை விமர்சனம் செய்த ஒரு இலக்கியவாதிக்கு இத்தனை ஆதரவு குரல் என்றால், பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் குரல் எவ்வளவு வலுவாக இருக்கும் என்பதனை அரசாங்கம் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
ஆகவே அரசாங்கம் மலாய் ஆலோசனை மன்றத்தின் மகஜரை பெற்றுக்கொண்ட அதே வேளை, இவர்களின் எல்லை மீறலான செயலை உடனடியாக நிறுத்தியாக வேண்டும். இவ்வாறு குலசேகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment