Sunday, May 15, 2011

கிறிஸ்துவச் சதி: சிறப்புப் போலீஸ் பிரிவு தொடர்பு சந்தேகிக்கப்படுகிறது


கிறிஸ்துவச் சதி எனக் கூறப்படுவது மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ‘ஒரளவு அடிப்படை’ இருப்பதாக உள்துறை அமைச்சு நேற்று அறிவித்த பின்னர் அந்தச் சதி குறித்து போலீஸில் புகார் செய்த டிஎபி உறுப்பினர் அவ்வாறு செய்யுமாறு வற்புறுத்தப்பட்டிருக்கலாம் என டிஎபி ஜெலுத்தோங் எம்பி ஜெப் ஊய் சந்தேகம் கொண்டுள்ளார்.


டிஎபி புக்கிட் துமா கிளையின் குழு உறுப்பினரான முகமட் ரசாலி அப்துல் ரஹ்மான் என்ற அந்த உறுப்பினர், ஜெலுத்தோங் வட்டாரத்தில் அரசியல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் சிறப்புப் போலீஸ் பிரிவு அதிகாரியான அவரது உறவினரால் வற்புறுத்தப்பட்டு போலீசில் புகார் செய்திருக்கலாம் என கோலாலம்பூரில் ஜெப் ஊய்
நிருபர்களிடம் கூறினார்.


“அந்த அதிகாரியும் முகமட் ரசாலியும் உறவினர்கள் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்துசான் மலேசியா அந்தச் செய்தியைப் பெறுவதற்கு உதவியவர் அந்த அதிகாரி ஆவார். போலீசார் அந்தக் கோணத்தில் விஷயத்தைப் புலனாய்வு செய்து நியாயமான முடிவுக்கு வருவர் என நான் நம்புகிறேன்.”

“உத்துசான் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்து நாங்கள் போலீஸில் புகார் செய்த ஐந்து நாட்களுக்குப் பின்னர் முகமட் ரசாலி போலீஸில் புகார் செய்ததின் நோக்கம் என்னவென்றோ அல்லது எண்ணம் என்னவென்றோ எங்களுக்குத் தெரியாது”, என்றார் அவர்.

மே 8ம் தேதி ஊய் போலீஸில் புகார் செய்யச் சென்ற போது அவருடன் முகமட் ரசாலியும் உடன் சென்றிருந்தார். ஊய், அதற்கு ஆதாரமாக போலீஸ் நிலையத்தில் இருவரும் ஒன்றாகக் காணப்படும் பத்திரிக்கை புகைப்படம் ஒன்றையும் காட்டினார்.


உத்துசான் குற்றச்சாட்டுக்களை மறுத்துப் போலீஸில் புகார் செய்யுமாறு தமக்கு யோசனை தெரிவித்தது முகமட் ரசாலி என்றும் அந்த ஜெலுத்தோங் எம்பி கூறிக் கொண்டார்.

அந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குப் புகார் கிடைத்திருப்பதைப் போலீசார் நேற்று உறுதி செய்தனர். அந்த நிகழ்வுகள் பற்றி ‘மாறுபட்ட’ தகவல்கள் அந்தப் புகாரில் அடங்கியிருப்பதாக போலீசார் கூறினர்.

ஆனால் முகமட் ரசாலியும் அதிகாரிகளும் புகார் பற்றிய விவரங்களைத் தர மறுத்து விட்டனர்.

No comments:

Post a Comment