Monday, May 16, 2011

அன்வாருடைய பிரதிவாதித் தரப்பு பிரதமரையும் அவரது துணைவியாரையும் பேட்டி காணும்


16 MAY | செய்தி. மலேசியாஇன்று 

அன்வார் இப்ராஹிமின் பிரதிவாதித் தரப்பு குதப்புணர்ச்சி வழக்கு 11 தொடர்பில் அடுத்த சில நாட்களில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர் ஆகியோரை பேட்டி காணும்.

அந்தப் பட்டியலில் முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், முன்னாள் பிகேஆர் இளைஞர் தலைவரும் அம்னோ செனட்டருமான முகமட் எஸாம் முகமட் நோர் , ரோஸ்மாவுக்கு நெருக்கமானவர் எனக் கருதப்படும் முன்னாள் ஒட்டக்காரர் மும்தாஸ் ஜபார் ஆகியோரும் அடங்குவர்.

அவர்கள் ஜாலான் டூத்தாவில் உள்ள கோலாலமூர் நீதிமன்ற வளாகத்தில் பேட்டி காணப்படுவர். “பின்னர் நாங்கள் அவர்களை சாட்சியமளிக்க அழைப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வோம்.” என வழக்குரைஞர் கர்பால் சிங் கூறினார்.


“நஜிப்பை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதிவாதித் தரப்பு பேட்டி காண வேண்டும் என அரசு தரப்பு விரும்புகிறது. ஆனால் நாங்கள் நடு நிலையான இடம் ஒன்றை விரும்புகிறோம். அதனல் ஜாலான் டூத்தாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தைப் பரிந்துரை செய்துள்ளோம். அடுத்த சில நாட்களில் நாங்கள் அவர்களைப் பேட்டி காண்போம்,” என அவர் சொன்னார்.

“அரசு தரப்பு வழங்கிய பட்டியலிலிருந்து நாங்கள் 25 சாட்சிகளைத் தேர்வு செய்துள்ளோம்.”

பேட்டியைப் பதிவு செய்வதற்கு உதவியாக நீதிமன்ற வளாகத்தில் ஒர் அறையை ஒதுக்குவதற்கு அரசு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது,” என்றும் கர்பால் குறிப்பிட்டார்.

“குற்றம் நடந்த இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இருந்ததற்கான சாட்சிகள்” (‘Alibi witness’) குதப்புணர்ச்சி நிகழ்ந்ததாக கூறப்படும் ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதியில் இருந்த ‘அலபாய் சாட்சிகளும்’  பேட்டி காணப்படும் சாட்சிகளில் அடங்குவர் என இன்னொரு பிரதிவாதி வழக்குரைஞரான சங்கர நாயர் கூறினார்.


“நாங்கள் அவர்களை முதலில் பேட்டி காண்போம். பின்னர் யாரை அழைப்பது என முடிவு செய்வோம்,” என சங்கரா தெரிவித்தார்.
பிரதிவாதித் தரப்பு நிபுணர்களான- டாக்டர் டேவிட் வெல்ஸ், டாக்டர் பிரியான் மெக்டொனால்ட், இந்தியத் தடயவியல் நிபுணர் ஒருவர் ஆகியோரும் சாட்சியமளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு தரப்பு 73 சாட்சிகளைக் கொண்ட பட்டியலைத் தயாரித்திருந்தது. அதில் அரசு தரப்பு வாதத்தின் போது 26 பேர் சாட்சியமளித்தனர். அவர்களில் புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானும் ஒருவர் ஆவார்.

அன்வாருக்கு எதிராக போதுமான ஆதாரங்களை அரசு தரப்புக் காட்டியிருப்பதால் அன்வார் எதிர்வாதம் செய்ய வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஜபிடின் முகமட் டியா இன்று ஆணையிட்டார்.

விசாரணை மீண்டும் ஜுன் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும். 

No comments:

Post a Comment