Showing posts with label மலேசியாஇன்று. Show all posts
Showing posts with label மலேசியாஇன்று. Show all posts

Monday, May 16, 2011

அன்வாருடைய பிரதிவாதித் தரப்பு பிரதமரையும் அவரது துணைவியாரையும் பேட்டி காணும்


16 MAY | செய்தி. மலேசியாஇன்று 

அன்வார் இப்ராஹிமின் பிரதிவாதித் தரப்பு குதப்புணர்ச்சி வழக்கு 11 தொடர்பில் அடுத்த சில நாட்களில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர் ஆகியோரை பேட்டி காணும்.

அந்தப் பட்டியலில் முன்னாள் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், முன்னாள் பிகேஆர் இளைஞர் தலைவரும் அம்னோ செனட்டருமான முகமட் எஸாம் முகமட் நோர் , ரோஸ்மாவுக்கு நெருக்கமானவர் எனக் கருதப்படும் முன்னாள் ஒட்டக்காரர் மும்தாஸ் ஜபார் ஆகியோரும் அடங்குவர்.

அவர்கள் ஜாலான் டூத்தாவில் உள்ள கோலாலமூர் நீதிமன்ற வளாகத்தில் பேட்டி காணப்படுவர். “பின்னர் நாங்கள் அவர்களை சாட்சியமளிக்க அழைப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வோம்.” என வழக்குரைஞர் கர்பால் சிங் கூறினார்.


“நஜிப்பை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதிவாதித் தரப்பு பேட்டி காண வேண்டும் என அரசு தரப்பு விரும்புகிறது. ஆனால் நாங்கள் நடு நிலையான இடம் ஒன்றை விரும்புகிறோம். அதனல் ஜாலான் டூத்தாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தைப் பரிந்துரை செய்துள்ளோம். அடுத்த சில நாட்களில் நாங்கள் அவர்களைப் பேட்டி காண்போம்,” என அவர் சொன்னார்.

“அரசு தரப்பு வழங்கிய பட்டியலிலிருந்து நாங்கள் 25 சாட்சிகளைத் தேர்வு செய்துள்ளோம்.”

பேட்டியைப் பதிவு செய்வதற்கு உதவியாக நீதிமன்ற வளாகத்தில் ஒர் அறையை ஒதுக்குவதற்கு அரசு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது,” என்றும் கர்பால் குறிப்பிட்டார்.

“குற்றம் நடந்த இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இருந்ததற்கான சாட்சிகள்” (‘Alibi witness’) குதப்புணர்ச்சி நிகழ்ந்ததாக கூறப்படும் ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதியில் இருந்த ‘அலபாய் சாட்சிகளும்’  பேட்டி காணப்படும் சாட்சிகளில் அடங்குவர் என இன்னொரு பிரதிவாதி வழக்குரைஞரான சங்கர நாயர் கூறினார்.


“நாங்கள் அவர்களை முதலில் பேட்டி காண்போம். பின்னர் யாரை அழைப்பது என முடிவு செய்வோம்,” என சங்கரா தெரிவித்தார்.
பிரதிவாதித் தரப்பு நிபுணர்களான- டாக்டர் டேவிட் வெல்ஸ், டாக்டர் பிரியான் மெக்டொனால்ட், இந்தியத் தடயவியல் நிபுணர் ஒருவர் ஆகியோரும் சாட்சியமளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு தரப்பு 73 சாட்சிகளைக் கொண்ட பட்டியலைத் தயாரித்திருந்தது. அதில் அரசு தரப்பு வாதத்தின் போது 26 பேர் சாட்சியமளித்தனர். அவர்களில் புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானும் ஒருவர் ஆவார்.

அன்வாருக்கு எதிராக போதுமான ஆதாரங்களை அரசு தரப்புக் காட்டியிருப்பதால் அன்வார் எதிர்வாதம் செய்ய வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஜபிடின் முகமட் டியா இன்று ஆணையிட்டார்.

விசாரணை மீண்டும் ஜுன் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும். 

Sunday, May 15, 2011

கிறிஸ்துவச் சதி: சிறப்புப் போலீஸ் பிரிவு தொடர்பு சந்தேகிக்கப்படுகிறது


கிறிஸ்துவச் சதி எனக் கூறப்படுவது மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ‘ஒரளவு அடிப்படை’ இருப்பதாக உள்துறை அமைச்சு நேற்று அறிவித்த பின்னர் அந்தச் சதி குறித்து போலீஸில் புகார் செய்த டிஎபி உறுப்பினர் அவ்வாறு செய்யுமாறு வற்புறுத்தப்பட்டிருக்கலாம் என டிஎபி ஜெலுத்தோங் எம்பி ஜெப் ஊய் சந்தேகம் கொண்டுள்ளார்.


டிஎபி புக்கிட் துமா கிளையின் குழு உறுப்பினரான முகமட் ரசாலி அப்துல் ரஹ்மான் என்ற அந்த உறுப்பினர், ஜெலுத்தோங் வட்டாரத்தில் அரசியல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் சிறப்புப் போலீஸ் பிரிவு அதிகாரியான அவரது உறவினரால் வற்புறுத்தப்பட்டு போலீசில் புகார் செய்திருக்கலாம் என கோலாலம்பூரில் ஜெப் ஊய்
நிருபர்களிடம் கூறினார்.


“அந்த அதிகாரியும் முகமட் ரசாலியும் உறவினர்கள் என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்துசான் மலேசியா அந்தச் செய்தியைப் பெறுவதற்கு உதவியவர் அந்த அதிகாரி ஆவார். போலீசார் அந்தக் கோணத்தில் விஷயத்தைப் புலனாய்வு செய்து நியாயமான முடிவுக்கு வருவர் என நான் நம்புகிறேன்.”

“உத்துசான் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்து நாங்கள் போலீஸில் புகார் செய்த ஐந்து நாட்களுக்குப் பின்னர் முகமட் ரசாலி போலீஸில் புகார் செய்ததின் நோக்கம் என்னவென்றோ அல்லது எண்ணம் என்னவென்றோ எங்களுக்குத் தெரியாது”, என்றார் அவர்.

மே 8ம் தேதி ஊய் போலீஸில் புகார் செய்யச் சென்ற போது அவருடன் முகமட் ரசாலியும் உடன் சென்றிருந்தார். ஊய், அதற்கு ஆதாரமாக போலீஸ் நிலையத்தில் இருவரும் ஒன்றாகக் காணப்படும் பத்திரிக்கை புகைப்படம் ஒன்றையும் காட்டினார்.


உத்துசான் குற்றச்சாட்டுக்களை மறுத்துப் போலீஸில் புகார் செய்யுமாறு தமக்கு யோசனை தெரிவித்தது முகமட் ரசாலி என்றும் அந்த ஜெலுத்தோங் எம்பி கூறிக் கொண்டார்.

அந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குப் புகார் கிடைத்திருப்பதைப் போலீசார் நேற்று உறுதி செய்தனர். அந்த நிகழ்வுகள் பற்றி ‘மாறுபட்ட’ தகவல்கள் அந்தப் புகாரில் அடங்கியிருப்பதாக போலீசார் கூறினர்.

ஆனால் முகமட் ரசாலியும் அதிகாரிகளும் புகார் பற்றிய விவரங்களைத் தர மறுத்து விட்டனர்.

Saturday, May 14, 2011

சிறுமி அனுஷா சித்ரவதை: குற்றவாளியைச் சட்டம் தண்டித்தாக வேண்டும் – சார்ல்ஸ் சந்தியாகோ


அண்மையில் பாதுகாவலரால் சித்ரவதை செய்யப் பட்ட 13 வயது சிறுமி அனுஷாவின் பாட்டியான லீலாவதி காளிமுத்து நேற்று மாலை (வியாழக்கிழமை) தமது அலுவலகத்தில் கண்ணீர் கம்பலையுமாய் தனது பேத்தியின் நிலையைப் பற்றிய மனவேதனையைக் கொட்டித் தீர்த்தார் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

சிறுமி அனுஷாவின் பெற்றோர் கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரது நான்காவது வயதிலேயே பிரிந்து
விட்டதாகவும், அதற்குப் பிறகு பன்னிரண்டு வயது வரை தனது பாதுகாப்பில்தான் அனுஷா இருந்ததாகவும் பாட்டி லீலாவதி கூறினார்.


இவ்வாறு விளக்கமளிக்கையில், தனது மகனும் அனுஷாவின் தந்தையுமான சேகரன் கேட்டுகொண்டதுக்கிணங்க, அனுஷாவை அவரிடம் அனுப்பி விட்டதாகவும் கூறிய லீலாவதி, அனுப்பி நான்கு மாதம் கூட ஆகவில்லை, ஆனால் இப்படி கொடூரமாக சித்ரவதை செய்யப் பட்டிருப்பதை சொல்லி மலை மலையாய் கண்ணீர் துளியைச் சிந்தினார்.

பிள்ளைகள் எவ்வளவுதான் தவறுகள் செய்திருந்தாலும் அவர்களை கடுமையான முறையில் அடிப்பதோ அல்லது புண்படுத்தும் அதிகாரமோ பெற்றோர்களுக்கு இல்லை என கூறிய சார்ல்ஸ், உண்மையில் சொல்லப் போனால் அவர்களது மீது எந்த ஒரு புண்ணும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவதும் பிள்ளைகளைச் சுகாதாரமாக வளர்ப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறு மனிதாபிமானம் இல்லாமல் கொடுமை படுத்துபவர் யாராகினும் எந்த ஒரு பாரபட்சமுமின்றி தண்டனை பெற்றே ஆக வேண்டும் என வலியுறுத்திய சார்ல்ஸ், அனுஷாவுக்கு தற்போது பாதுகாப்பும் அரவணைப்பும் மிக முக்கியம் என ஆலோசனைக் கூறினார்.

அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், தம்மால் முடிந்த வரையில் சட்டபூர்வமாக உதவிகள் வழங்கத் தயார் எனவும் சார்ல்ஸ் கூறினார்.

உத்துசான் விவகாரம்: இரு அமைச்சர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம், எம்.குலசேகரன் திட்டமிடுகிறார்


பினாங்கு மாநிலத்தில் டிஎபியும்  கிறிஸ்துவ ஆயர்களும் ஒன்றிணைந்து கிறிஸ்துவ சமயத்தை அதிகாரப்பூர்வமான சமயமாக்க சதி செய்தனர் என்ற சர்ச்சையான செய்தியை உத்துசான் மலேசியா வெளியிட்டது.

ஆனால் கடந்த சனிக்கிழமை உத்துசான் வெளியிட்ட அந்தச் செய்தியை தாங்கள் நம்பவில்லை என்று பினாங்கு மாநிலத்தை சேர்ந்த இரண்டு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களான ஹில்மி யாயா (தெலுக் பஹாங்) மற்றும் முகம்மட் பாரித் சாட் (புலவு பெத்தோங்) தெரிவித்தது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

“இவ்விருவர்களின் நிலைப்பாடு தனிப்பட்ட முறையில் எனக்கு ஆச்சிரியத்தை தந்துள்ளது. காரணம், உத்துசான் நாளிதழ் வெளியிடும் செய்தியை அம்னோவை சேர்ந்த இவர்கள் நம்பவில்லை. மேலும் அவர்கள் அவ்வாறு சொல்வதற்கான இரண்டு முக்கிய காரணத்தையும் தந்துள்ளனர்:


முதலாவதாக, அம்னோ உயர்மட்ட தலைவர்கள் அச்செய்தியை படித்தவுடன் உடனடியாக அக்கூற்றை மறுக்கவில்லை.

இரண்டாவதாக, ஒரு சில தேசிய முன்னணியின் தலைவர்கள் அச்செய்தியின் உண்மையை ஆராயாமாலும், அதன் உண்மையை உறுதி செய்யாமலும் அதனை உண்மையென  நம்பியதுதான்.”

உத்துசானின் அந்த செய்தியை படித்தவுடன், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடினும் தகவல் தொடர்பு மற்றும் கலை கலாச்சார அமைச்சர் ரைஸ் யாத்திமும் அந்தத் தகவலை முழுமையாக ஏற்றுக்கொண்டு உத்துசானிடம் விளக்கம் கோராமல், நாட்டில் இஸ்லாம் மதத்தின் அதிகாரப்பூர்வ நிலை பற்றி கேள்வி எழுப்பக்கூடாது என்று மலேசியர்களுக்கு ஒட்டுமொத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த இரு தேசிய முன்னணியின் முழு அமைச்சர்கள் இந்தச் செய்தியை வைத்துப் புதிய வடிவத்தில் அரசியல் நாடகத்தை உருவாகக் முனைந்தது பலரின் மனதைப் புண்படுத்தியுள்ளது என்றார் குலசேகரன்.

மேலும், அச்செய்தியை வெளியிட்ட நிறுவனத்தையோ அல்லது அச்செய்தியை எழுதியவரையோ முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று இவர்கள் இருவரும் கூறாமல் மௌனம் சாதிப்பது, தேசிய முன்னணியின் இன அரசியலின் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
 
அரசியல் நெறிமுறைகளை நன்கு அறிந்த அந்த இரு அமைச்சர்களும், உத்துசானின்  அடிப்படையற்ற செய்திகள் நாட்டு மக்களுக்கிடையே ஆத்திரத்தையும் இன ஒற்றுமைக்கு அச்சுறுத்தலையும் உருவாக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள்.
 
ஆகவே, ஜசெகவின் தேசிய பொதுச் செயலாளரான லிம் குவான் எங் கூறியதுபோல் அச்செய்தி ஆபாத்தான பொய் கலந்தவை என்பதனை ஏற்றுகொள்வதை விட எதிர்த்து கேள்விகளை எழுப்ப அவ்விரு அமைச்சர்களுக்கும் வேறு வழி இல்லை என்றாரவர்.

“மேலும், என்னைப் பொறுத்தமட்டில் நாட்டில் அறிவுடமை கொண்ட, நேர்மையான அரசியல் தலைவர்கள், 
உத்துசானின் அந்தத் தகவல் முற்றாக உண்மைக்கு புறம்பானது என்று கூறுவார்கள் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.
 
“இருப்பினும், தவறான தகவல் வெளியிட்ட அந்த செய்தி நிறுவனத்தைச் சாடாமல், நாட்டு மக்களுக்கு அறிவுரை என்ற பெயரில் எச்சரிக்கை விடுத்ததற்காக ஹிஷாமுடினும் ரயிஸ் யாத்திமும் பொது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.


“அவர்கள் அவ்வாறு செய்ய தவறினால், நாடாளுமன்றத்தின் அடுத்த வரவு-செலவு  கூட்டத்தில் அவர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என்பது உறுதி”, என்று டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கூறினார்.

டிஎபி அடுத்த தேர்தலில் மலாய் பகுதிகளிலும் களம் இறங்கும்


அண்மைய சரவாக் தேர்தலில் அடைந்துள்ள வெற்றிகளைக் கருத்தில் கொண்டு டிஎபி சீனர் அல்லாத தொகுதிகளிலும் தடம் பதிக்கும் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது.

சரவாக்கை அடுத்து சீனர்களை அடிப்படையாகக் கொண்ட அந்தக் கட்சி மலாய் பெரும்பான்மையைக் கொண்ட கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் போட்டியிடுவதற்கு குறைந்தது இரண்டு மாநிலங்களிலும் ஒரு தொகுதியிலாவது போட்டியிட அது எண்ணுகிறது.

“நாங்கள் திரங்கானுவில் பண்டார் தொகுதியில் போட்டியிட எண்ணியுள்ளோம். கிளந்தானைப் பொறுத்த வரையில் நாங்கள் இன்னும் தொகுதியைத் தேடி வருகிறோம்,” என டிஎபி துணை தேசிய அமைப்புச் செயலாளர் வின்சென்ட் வூ கூறினார்.

“எதிர்கால பக்காத்தான் கூட்டங்களில் டிஎபி அந்த விஷயத்தை எழுப்பும்”, என்றார் அவர்.

வூ, கிளந்தான், திரங்கானு மேம்பாட்டு விவகாரங்களுக்கான இயக்குநரும் ஆவார். அவ்விரு மாநிலங்களிலும் உள்ள அடி நிலை கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையும் அதுவே என அவர் சொன்னார்.

“டிஎபி 1980ளில் கிளந்தானிலும் திரங்கானுவிலும் போட்டியிட்டது. நடப்பு அரசியல் சூழ்நிலைகளுக்கு இணங்க அந்த மாநிலங்களில் அது மீண்டும் போட்டியிடுவதற்கான தருணம் வந்து விட்டது”, என குவா மூசாங் டிஎபி கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் வூ கூறினார்.

கடைசியாக அது கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பாடாங் காரோங் சட்டமன்றத் தொகுதியில் 1990 தேர்தலில் டிஎபி வேட்பாளரை நிறுத்தியது.

டிஎபி சீனர் ஆதிக்கம் பெற்ற கட்சி என அம்னோ கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் தாழ்வாகக் கூறி வருகின்றன என வூ தெரிவித்தார்.

ஆகவே டிஎபி பல இனக் கட்சி என்பதைக் காட்டுவதற்கு சீனர் அல்லாதவர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் முயற்சிகளை தீவிரப்படுத்துவதோடு பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுடன் இணைந்து பொருத்தமான தொகுதிகளையும் அடையாளம் காண முயலுவோம்,” என்றார் அவர்.

அண்மைய சரவாக் தேர்தலில் கிட்டத்தட்ட சீனர் பெரும்பான்மை இடங்கள் அனைத்தையும் அந்தக் கட்சி வென்றதைத் தொடர்ந்து அது சீனர் ஆதிக்கக் கட்சி என பட்டியிலப்பட்டது. அதனைப் போக்குவதற்காக அது தற்போது சீனர் அல்லாத பகுதிகளில் ஊடுருவ முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நாட்டில் சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பெரும்பாலான தொகுதிகளை அந்தக் கட்சி வென்றுள்ளது. அது அடுத்த தேர்தலில் சீனர் அல்லாத தொகுதிகளிலும் ஊடுருவாவிட்டால் தேக்க நிலையை அடைந்து விடும்.

ஆனால் அதன் விரிவாக்கம் பிகேஆருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில் அது சீன வாக்காளர்களைக் கணிசமாகக் கொண்ட தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.