Saturday, May 14, 2011

உத்துசான் விவகாரம்: இரு அமைச்சர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம், எம்.குலசேகரன் திட்டமிடுகிறார்


பினாங்கு மாநிலத்தில் டிஎபியும்  கிறிஸ்துவ ஆயர்களும் ஒன்றிணைந்து கிறிஸ்துவ சமயத்தை அதிகாரப்பூர்வமான சமயமாக்க சதி செய்தனர் என்ற சர்ச்சையான செய்தியை உத்துசான் மலேசியா வெளியிட்டது.

ஆனால் கடந்த சனிக்கிழமை உத்துசான் வெளியிட்ட அந்தச் செய்தியை தாங்கள் நம்பவில்லை என்று பினாங்கு மாநிலத்தை சேர்ந்த இரண்டு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களான ஹில்மி யாயா (தெலுக் பஹாங்) மற்றும் முகம்மட் பாரித் சாட் (புலவு பெத்தோங்) தெரிவித்தது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

“இவ்விருவர்களின் நிலைப்பாடு தனிப்பட்ட முறையில் எனக்கு ஆச்சிரியத்தை தந்துள்ளது. காரணம், உத்துசான் நாளிதழ் வெளியிடும் செய்தியை அம்னோவை சேர்ந்த இவர்கள் நம்பவில்லை. மேலும் அவர்கள் அவ்வாறு சொல்வதற்கான இரண்டு முக்கிய காரணத்தையும் தந்துள்ளனர்:


முதலாவதாக, அம்னோ உயர்மட்ட தலைவர்கள் அச்செய்தியை படித்தவுடன் உடனடியாக அக்கூற்றை மறுக்கவில்லை.

இரண்டாவதாக, ஒரு சில தேசிய முன்னணியின் தலைவர்கள் அச்செய்தியின் உண்மையை ஆராயாமாலும், அதன் உண்மையை உறுதி செய்யாமலும் அதனை உண்மையென  நம்பியதுதான்.”

உத்துசானின் அந்த செய்தியை படித்தவுடன், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடினும் தகவல் தொடர்பு மற்றும் கலை கலாச்சார அமைச்சர் ரைஸ் யாத்திமும் அந்தத் தகவலை முழுமையாக ஏற்றுக்கொண்டு உத்துசானிடம் விளக்கம் கோராமல், நாட்டில் இஸ்லாம் மதத்தின் அதிகாரப்பூர்வ நிலை பற்றி கேள்வி எழுப்பக்கூடாது என்று மலேசியர்களுக்கு ஒட்டுமொத்த எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த இரு தேசிய முன்னணியின் முழு அமைச்சர்கள் இந்தச் செய்தியை வைத்துப் புதிய வடிவத்தில் அரசியல் நாடகத்தை உருவாகக் முனைந்தது பலரின் மனதைப் புண்படுத்தியுள்ளது என்றார் குலசேகரன்.

மேலும், அச்செய்தியை வெளியிட்ட நிறுவனத்தையோ அல்லது அச்செய்தியை எழுதியவரையோ முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று இவர்கள் இருவரும் கூறாமல் மௌனம் சாதிப்பது, தேசிய முன்னணியின் இன அரசியலின் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
 
அரசியல் நெறிமுறைகளை நன்கு அறிந்த அந்த இரு அமைச்சர்களும், உத்துசானின்  அடிப்படையற்ற செய்திகள் நாட்டு மக்களுக்கிடையே ஆத்திரத்தையும் இன ஒற்றுமைக்கு அச்சுறுத்தலையும் உருவாக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள்.
 
ஆகவே, ஜசெகவின் தேசிய பொதுச் செயலாளரான லிம் குவான் எங் கூறியதுபோல் அச்செய்தி ஆபாத்தான பொய் கலந்தவை என்பதனை ஏற்றுகொள்வதை விட எதிர்த்து கேள்விகளை எழுப்ப அவ்விரு அமைச்சர்களுக்கும் வேறு வழி இல்லை என்றாரவர்.

“மேலும், என்னைப் பொறுத்தமட்டில் நாட்டில் அறிவுடமை கொண்ட, நேர்மையான அரசியல் தலைவர்கள், 
உத்துசானின் அந்தத் தகவல் முற்றாக உண்மைக்கு புறம்பானது என்று கூறுவார்கள் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது.
 
“இருப்பினும், தவறான தகவல் வெளியிட்ட அந்த செய்தி நிறுவனத்தைச் சாடாமல், நாட்டு மக்களுக்கு அறிவுரை என்ற பெயரில் எச்சரிக்கை விடுத்ததற்காக ஹிஷாமுடினும் ரயிஸ் யாத்திமும் பொது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.


“அவர்கள் அவ்வாறு செய்ய தவறினால், நாடாளுமன்றத்தின் அடுத்த வரவு-செலவு  கூட்டத்தில் அவர்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என்பது உறுதி”, என்று டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் கூறினார்.

No comments:

Post a Comment