Showing posts with label சார்ல்ஸ் சந்தியாகோ. Show all posts
Showing posts with label சார்ல்ஸ் சந்தியாகோ. Show all posts

Saturday, May 14, 2011

சிறுமி அனுஷா சித்ரவதை: குற்றவாளியைச் சட்டம் தண்டித்தாக வேண்டும் – சார்ல்ஸ் சந்தியாகோ


அண்மையில் பாதுகாவலரால் சித்ரவதை செய்யப் பட்ட 13 வயது சிறுமி அனுஷாவின் பாட்டியான லீலாவதி காளிமுத்து நேற்று மாலை (வியாழக்கிழமை) தமது அலுவலகத்தில் கண்ணீர் கம்பலையுமாய் தனது பேத்தியின் நிலையைப் பற்றிய மனவேதனையைக் கொட்டித் தீர்த்தார் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

சிறுமி அனுஷாவின் பெற்றோர் கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரது நான்காவது வயதிலேயே பிரிந்து
விட்டதாகவும், அதற்குப் பிறகு பன்னிரண்டு வயது வரை தனது பாதுகாப்பில்தான் அனுஷா இருந்ததாகவும் பாட்டி லீலாவதி கூறினார்.


இவ்வாறு விளக்கமளிக்கையில், தனது மகனும் அனுஷாவின் தந்தையுமான சேகரன் கேட்டுகொண்டதுக்கிணங்க, அனுஷாவை அவரிடம் அனுப்பி விட்டதாகவும் கூறிய லீலாவதி, அனுப்பி நான்கு மாதம் கூட ஆகவில்லை, ஆனால் இப்படி கொடூரமாக சித்ரவதை செய்யப் பட்டிருப்பதை சொல்லி மலை மலையாய் கண்ணீர் துளியைச் சிந்தினார்.

பிள்ளைகள் எவ்வளவுதான் தவறுகள் செய்திருந்தாலும் அவர்களை கடுமையான முறையில் அடிப்பதோ அல்லது புண்படுத்தும் அதிகாரமோ பெற்றோர்களுக்கு இல்லை என கூறிய சார்ல்ஸ், உண்மையில் சொல்லப் போனால் அவர்களது மீது எந்த ஒரு புண்ணும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவதும் பிள்ளைகளைச் சுகாதாரமாக வளர்ப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறு மனிதாபிமானம் இல்லாமல் கொடுமை படுத்துபவர் யாராகினும் எந்த ஒரு பாரபட்சமுமின்றி தண்டனை பெற்றே ஆக வேண்டும் என வலியுறுத்திய சார்ல்ஸ், அனுஷாவுக்கு தற்போது பாதுகாப்பும் அரவணைப்பும் மிக முக்கியம் என ஆலோசனைக் கூறினார்.

அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், தம்மால் முடிந்த வரையில் சட்டபூர்வமாக உதவிகள் வழங்கத் தயார் எனவும் சார்ல்ஸ் கூறினார்.

Thursday, April 28, 2011

கிள்ளான் எம்.பி ஏற்பாட்டில் குறைந்தபட்ச சம்பளம் பற்றி கலந்துரையாடல்


தற்போது மலேசியர்கள் குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தினர் எதிர்நோக்கும் பிரச்சனையே சம்பளம்தான்.
நாளுக்கு நாள் விலைவாசி ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் இந்த தொழிலாளர்களின் சம்பளமோ குண்டு சட்டியில் குதுரை ஓட்டுவதுப் போல் அதே அளவில்தான் உள்ளது என வருத்தம் தெரிவித்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தொழிலார்கள் தினத்தை முன்னிட்டு குறைந்த பட்ச சம்பளத்தை பற்றி ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.
இக்கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை (29 ஏப்ரல்) காலை மணி 9 தொடங்கி பிற்பகல் வரை, எம்.பி.பி.ஜே அலுவலகத்தில், பிளிக் பூங்கா மவாரில் நடத்தப்படவுள்ளது என ஜ.செ.க உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
பட்டதாரிகள், தொழிற்சங்கம், அரசு சார்பற்ற இயக்கங்கள், முதலாளிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்திருக்கும் இந்த கலந்துரையாடலில் சில முக்கிய விசயங்கள் பேசப்படவுள்ளன. அதில் குறைந்தபட்ச சம்பளத்திற்கும் ஏழ்மை நிலைக்கும் உள்ள தொடர்பு, அடிப்படை சம்பள நிர்ணயிப்பு குழுவின் பங்கு, மாற்றத்திற்கான நடவடிக்கை என்பவன அடங்கும்.
அண்மையில் இந்த தொழிலாளர்களின் சம்பள உயர்வைப் பற்றி பல முறை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளேன். கேட்கும் போதெல்லாம் வரும் ஒரே விடை அரசு இதனை ஆராய்ந்து வருகிறது. குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் என சொல்லி சொல்லி காலம் தாழ்த்தி வருகிறது.
ஆனாலும் தற்போது தொழிலாளர்கள் பெரும் குறைந்தபட்ச சம்பளமே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளான சம்பளம் தான் அதாவது ரிம 720- க்கும் குறைவான சம்பளம். இது தற்போதைய வாழ்க்கை செலவை ஈடுக்கட்ட முடியுமா? என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார்.
இத்துணைக் காலம் இந்த தொழிலாளர் வர்கத்தினர் ஏழ்மையில் வாடினது போதும். அவர்களின் சம்பள உயர்வுக்கு போராட வேண்டியதை தவிர வேறு வலி ஏதும் இல்லை போல் தெரிகிறது. ஆகவே, இந்த குறைந்தபட்ச சம்பள உயர்வை எந்த அணுகுமுறையில் நாடலாம் என்பதனை கண்டறியவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இக்கலந்துரையாடலைப் பற்றி மேல் விவரங்கள் தெரிந்துக்கொள்ள அழைக்க வேண்டிய நபர் ராஜ் 0166045390

Friday, April 1, 2011

இந்தியர்களின் பிரச்னையை தீர்க்க ஏன் இத்துணைக் காலம்? சார்ல்ஸ்








அண்மையில் இந்தியர்களின் நீண்டகால பிரச்னைகளில் முக்கிய மூன்று பிரச்னைகள் அதாவது குடியுரிமை பிரச்னை, இந்திய வியாபாரிகள் தொழில் முனைவராகும் பிரச்னை, மற்றும் இந்தியர்களுக்கு தரமான வேலை வாய்ப்பு உருவாக்கும் ஆகிய பிரச்னைகளை தற்போது நாட்டுப் பிரதமர் நாஜிப் தீர்த்து வருகின்றார் என மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
அவரின் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனாலும், இங்கு எழும் கேள்வியே ஏன் இத்துணைக் வருடம் இந்தியர்களின் பிரச்னையைத் தீர்க்க அரசாங்கம் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பதேயாகும் என ஜ.செ.க உறுப்பினரும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார்.
இந்தியர்கள் காலங்காலமாக தே.மு-க்கு வாக்களித்துக் கொண்டுத்தான் இருந்தனர். 53 ஆண்டுக் காலமாக தே.மு. மலேசியாவை ஆண்டுக் கொண்டுத்தான் இருந்தது. ஆனாலும், இந்தியர்களின் பிரச்னைத் தீர்ந்தபாடில்லை. நாட்கள் பல திரண்டோட இந்திய மக்களின் பிரச்னை மேலோங்கித் தான் நின்றது.
ஆனால், இன்று இத்துணை ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மக்களின் பிரச்னையை தீர்பதாக சொல்கின்ற அரசாங்கத்தின் செயல் மக்கள் கூட்டணிக்கு அதிகாரத்திற்கு வந்த பிறகு பயத்தில் செய்வதுப் போல் தெரிகிறது என சாடினார் சார்ல்ஸ்.
மக்களின் நலனைக் காக்கும் அரசாங்கம் யாருக்கும் பயந்து அவர்களது சேவையை செய்யக் கூடாது. மாறாக மக்கள் நலனை காப்பதில் இலக்காக கொண்ட அரசாங்கமாய் திகழ வேண்டும். மக்களின் பிரச்னையை அறிந்து அதை தீர்க்க வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாக கருத வேண்டும். அதுமட்டுமல்லாது, இந்தியர்களின் பிரச்னை தீர்ப்பது ஒருவார பிரச்சாரமாக இருத்தல் கூடாது, அது அரசாங்க கொள்கையாகவும் யுக்தியாகவும் இருத்தல் வேண்டும் என சார்லஸ் கேட்டுக் கொண்டார்.
அதிலும், மலேசிய இந்தியர்களின் நலன் காப்பதிலும் அவர்களின் பிரச்னைகளையும் இந்த முயற்சியும் ஒரு பகடைக் காயாக இல்லாமல் இந்தியர்களின் பிரச்னையை உண்மையிலே தீர்க்க வேண்டும் என அரசாங்கத்தை சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்.
எப்போது அரசாங்கம் இந்தியர்களின் பிரச்னையைக் கண்டும் காணாமல் இருக்கிறதோ அன்றுதான் பிரச்னையே ஆரம்பமாகிறது என்று அவர் மேலும் கூறினார்.