டிண்டிங்ஸ் நில விவகாரம் குறித்து ம.இ.க உதவ முடியவில்லை என்றாலும் ஜ.செ.க வின் முயற்சியை அனாவசியமாக விமர்சிப்பதை டத்தோ வீரசிங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். - மு.குலசேகரன்
பேராக் மாநில ம.இ.கவின் தலைவர் டத்தோ வீரசிங்கம் மக்கள் கூட்டணி தலைவர்களின் முயற்சியை தவறாக விமர்சிப்பதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் கூட்டணி இந்திய தலைவர்கள் டிண்டிங்ஸ் நிலப்பிரச்சனை குறித்து மத்திய அரசாங்கத்தின் மீது அவதூறுகளை பரப்புவதாகவும் விஷமத்தனமாகவும் பேசுகிறார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளார்.
அச்செய்தியில் ம.இ.க கண்டிப்பாக இந்நிலம் டிண்டிங்ஸ் சங்கத்திற்கே சொந்தமாக நிலைக்கும் என்ற உறுதியை வழங்கும் என்பதனை கூறியது மட்டுமல்லாமல், பினாங்கு மாநில துணை முதல்வர் முனைவர் ராமசாமியும் படாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணனும் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட செய்ய முனைவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய டத்தோ வீரசிங்கம் கல்வி அமைச்சு வேறு ஒரு அருகில் உள்ள காலி நிலங்களை பள்ளி கட்டுவதற்கு வாங்குவதற்கும் சாத்தியமுண்டு என்பதனை தெரிவித்துள்ளார்.
டத்தோ வீரசிங்கம் ம.இக.வின் வெளிப்படையான நிலைபாட்டினை அறிவித்த போதிலும் தற்சமயம் போராட்டத்தில் ஈடுபடுவதை சிரமமாக கருதுகிறார். இதன் வழி வீரசிங்கத்திற்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், மக்கள் கூட்டணி இந்திய தலைவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்களை தூண்டி இப்பிரச்சனையில் அரசியல் லாபம் தேடியது கிடையாது. இப்பிரச்சனை இந்திய சமுதாய பிரச்சனை என்பதனை நன்கு மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு நல்ல மக்கள் தலைவனுக்கு அழகு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை வழங்குவது. அது நமது கடமையும் கூட. மக்களின் நிலைப்பாட்டினை தெரிவதற்கு மக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டுமே ஒழிய மாநில அலுவகத்தில் இருந்து கொண்டு அறிக்கை விடுவதை தவிர்க்க வேண்டும் வீரசிங்கம். மேலும் அனைத்து பொது மக்களும் இவ்விவகாரம் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களின் உறுதியான நிலையை அறிய முடியும் என்பதனை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ம.இ.க வாய்ச்சொல் சேவையை கொள்கையாக கொண்டிருக்கும் வேளையில் நாங்கள் மக்களின் உணர்வுக்கும் ஜனநாயக கொள்கைக்கும் கட்டுப்படும் வேளையில் மக்கள் அவர்களின் மன ஆதங்கத்தை தெரிவிக்க சிறந்த வழியில் ஒன்றுதான் அமைதி பேரணி என்பதை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். அதற்கு என்றுமே நாம் தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்பதனை வீரசிங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் நடைபெறவுள்ள அமைதி பேரணியில் தனது உண்மையான எதிர்ப்பை தெரிவிக்கவும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் வீரசிங்கம் கட்சி பேதமின்றி இந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டு தனது உறுதியான நிலையை தெரிவிக்க வேண்டும். வருகிற 25/08/2010 ம் திகதி இந்தியர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பாரா டத்தோ வீரசிங்கம்?
மத்திய அரசாங்கத்தின் விருபத்தை முற்றாக ம.இ.க எதிர்ப்பதாக இருந்தால் நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இந்நிலப்பிரச்சனை குறிந்து பேசி ஒரு நல்ல முடிவினை பெற அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்ரமணியம் முயலவேண்டும். அப்படி செய்ய தவறிவிட்டால் ம.இ.க-வினர் காலித்தனமாக பேசுவதை நிருந்திக்கொள்ள வேண்டும் என்பதனை நினைவுறுத்த விரும்புகிறேன்.
2008 ம் ஆண்டு பொதுத்தேர்தலின் பலத்த தோல்வி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காததின் விளைவுகளை ம.இ.க-வும் தேசிய முன்னணியும் இன்னும் முழுமையான பாடங்களாக கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இறுதியாக இந்நிலப்பிரச்சனை குறிந்து உங்களால் துணை நிற்க தைரியமில்லை என்றால் இந்திய சமுதாயதிற்கு துரோகம் விளைவிர்க்காதீர்கள் என்ற வேண்டுகோளை டத்தோ வீரசிங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
No comments:
Post a Comment