Friday, January 28, 2011

சீக்கிய மாணவனின் முடி வெட்டப்பட்ட விவகாரம்

செம்பருத்தி இணையதள செய்தி.










பல புதிய கனவுகளோடு தேசிய பயிற்ச்சி முகாமில் சேர்ந்த 18வயது பசாந்த் சிங் என்ற சீக்கிய மாணவனுக்கு கடைசியில் அதிர்ச்சி மட்டுமே கிடைத்து. கடந்த ஜனவரி 15 ஆம் திகதி பசாந்த் சிங்-குக்கு தனது வாழ்கையில் மறக்கமுடியாத சம்பவமாக தனது நீளமான முடியை வெட்டியது, நாட்டில் பலரின் கவனத்தை ஈர்த்தது.
இச்சம்பவம் ஸ்ரீ இம்பியான் சுங்கை பாகப் கெடா மாநிலத்திலுள்ள முகாமில் நடந்தது. பசாந்த் சிங்கின் முடி அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொழுது கத்தரிக்கப்பட்டது.
இன்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் பொங் போ குவான், வழக்கறிஞர் பாலா, குலசேகரனின் முன்னாள் செயலாளர் திரு.பாலா ஆகியோர் புந்தோங் வட்டாரத்தில் அமைந்துள்ள பசாந்த் சிங்கின் வீட்டிற்கு சென்று பசாந்த் சிங்-கையும் அவரது தந்தை சுரிண்டர்பால் சிங் மற்றும் தாயாரையும் சந்தித்து பேசியுள்ளனர்.








“பசாந்த் சிங்கின் பெற்றோர்கள் மிகவும் வேதனையாக இருந்ததை எங்களால் உணரமுடிந்தது. பொதுவாக சீக்கியர்கள் தனது முடியை நீளமாக வைத்திருப்பது என்பது அவர்கள் தனது மத நம்பிக்கை கொடுக்கும் மரியாதையாகும் என்று தெரிவித்தனர். மேலும், தனது மகன் பசாந்த் சிங்-கின் 60 cm நீளமான முடியை ஒரு சில குறும்புத்தனமானவர்கள் கத்தரித்துவிட்டனர் என்று சொல்லி பசாந்த் சிங்கின் தந்தை மன வேதனைப்பட்டார்” என குலசேகரன் தெரிவித்தார்.
“மாணவன் பசாந்த்னுடன் நாங்கள் அனைவரும் கலந்து பேசும் பொழுது, “இன ஒற்றுமை” என்ற பாடம் அப்பயிற்சியில் சொல்லிக்கொடுக்கப்படும் என்று நான் தெரிந்து கொண்டேன். ஆனால் அவை இறுதி கட்டத்தில் பயிற்சி முடியும் முன் சொல்லி கொடுக்கப்படும் இறுதி கட்டப்பாடமாக அவை போதிக்கப்படும் என்று எங்களுக்கு தெரியவந்தது” என்று குலா மேலும் கூறினார்.







தனக்கு ஏற்பட்ட அந்த சம்பவத்தை போலீஸ் புகார் செய்யப்பட்டு, இப்பொழுது காவல்துறையும் விசாரணையை தொடங்கி இருப்பதாக கூறப்படும் அதே வேளையில், தேசிய பயிற்சி முகாமும் தனது உள்விசாரனையை நடத்தியுள்ளது. இருப்பினும், இது நாள் வரை பசாந்த் சிங்கை எந்த ஒரு தரப்பினரும் விசாரணைக்கு உதவும் விதமாக அவரிடம் மேல் விவரங்களை பெறவில்லை என்பதும் இங்கே நிரூபனமாகிறது.
ஆகவே, இச்சம்பவம் குறித்து மேலும் முழுமையான விசாரணையை காவல்துறையும் தேசிய பயிற்சி முகாமின் ஆணையமும் செய்ய வேண்டும். இப்பிரச்னை இனியும் தொடர்கதையாகாமல் இருக்க பசாந்த் சிங்கின் முடியை கத்தரித்தவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என குலசேகரன் கோரிக்கைவிடுத்தார்.
இதேவேளை, என்னதான் மன அதிர்ச்சி ஏற்படும் வகையில் தனக்கும் தனது மத நம்பிக்கைக்கும் சிரமம் ஏற்பட்டிருந்தாலும், தனது தேசிய சேவையை தொடர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கும் பசாந்த் சிங்கின் மன தைரியத்தை நாங்கள் பாராட்டுகிறோம். 


மூக்கை நுழைத்தது குலசேகரன் அல்ல! -

செம்பருத்தி இணையதளம் செய்தி.










ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சேவை என்பது மக்கள் பிரச்னையை நாடாளு மன்றத்தில் மட்டும் விவாதிப்பதில் இல்லை, மாறாக அனைத்து உள்ளநாட்டு வெளிநாட்டு அரசியல், சமூகவியல், பொருளாதாரம் என்று இன்னும் பல மக்களின் பிரச்னைகளை இனம் மதம் பாராமல் குரல்கொடுப்பதே அவர்களின் முதற்க் கடமை என பஹாங் மாநில ஜ.செ.க-வின் மகளிர் தலைவி து.காமாட்சி தெரிவித்துள்ளார்.
“குவால பிலா தமிழ்ப்பள்ளியின் விவகாரத்தை மு.குலசேகரன் அவர்கள் மூக்கை நுழைத்தார் என்று நெகிரி மாநிலத்தின் முன்னாள் ம.இ.க இளைஞர் அணியின் சசாசி சாடுவது எந்த வகையில் நியாயமாகும்?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் து.காமாட்சி இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணியில் மக்கள் சேவையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தது யார் சகோதரர் சசாசி அவர்களே?
உங்கள் ம.இ.க தலைவர்கள் அதிகப்படியான நேரங்களில் தொகுதி விட்டு தொகுதி சென்று பல நிகழ்சிகளில் கலந்து கொள்வது சரியா? அல்லது அவர்களும் நீங்கள் சொன்னது போல அடுத்த பொதுத்தேர்தலில் வாய்ப்புக்கு கல்தாவா?
மக்களின் ஆதரவை மகுடமாக் கொண்டு செயல்படும் மு.குலசேகரன் போன்ற தலைவர்களை குறைக் கூறுவதற்கு உங்களின் அரசியல் தகுதி என்ன? அல்லது இனிமேல் தான் வாய்ப்பின்  வழியை உருவாக்கிக் கொள்கிறீர்களா?
மு.குலசேகரனை குறை கூறினால் உங்களுக்கு அரசியலில் வாய்ப்பு மலரும் என்றால், உங்களின் தாக்குதலை மு.குலசேகரன் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்வார் என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
ஐயா மேதாவி சசாசி அவர்களே, குவால பிலா தமிழ்ப்பள்ளியின் பிரச்னைக்குத் தீர்வு கண்ட விஷயம் என்று சொல்லும் நீங்கள், மு.குலசேகரனிடம் இப்பிரச்னையைக் கொண்ட வந்த பொது மக்களிடம் தெரிவித்திருக்கலாமே? ஏன் செய்ய வில்லை?
பல நாட்களாக் இப்பிரச்னையை அப்பள்ளியின் மாணவர்களும் பெற்றோர்களும் குரல் கொடுத்த பொழுது உங்களின் அதிமேதாவிதனத்தை அங்கே காட்டிருக்கலாமே? ஏன் காட்ட வில்லை? அவ்வாறு செய்திருந்தால், மு.குலசேகரனிடம் மக்கள் இப்பிரச்னையை கொண்டுவர அவசியம் உருவாக்கி இருக்காது.
அந்த பள்ளிக்கு நிலம் அங்கே உள்ளது இங்கே உள்ளது என்று தட்டி கழிக்காமல் உடனடியாக அப்பள்ளிக்கான நிலப்பட்டாவை உரிய நேரத்தில் உரிய தரப்பினரிடம் வழங்கிருந்தால் இப்பிரச்னை தீர்வு கண்டிருக்கும் அல்லவா? இந்த சொற்ப அரசியல் அறிவு கூர்மை கூடவா இல்லை உங்களுக்கு?
சகோதரர் சசாசி, கடந்த திகதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய மாணவர்களின் எதிர்காலத்திற்க்கா அப்பள்ளிக்கான நிலத்திற்கு குரல் கொடுத்திருந்தால் மதிப்பும் மரியாதையும் கூடியிருக்கும் அல்லவா? அதனை தவிர்த்து வீண் குறை கூறுவது யாருக்கும் லாபம் தராது அதுவும் நீங்கள் கூறிய அதிமேதாவிதனமான குறைகளுக்கு சொல்ல வார்த்தை கிடையாது.
ஏன் இவ்வளவு அனாவசியத்தனம். அக்கூட்டம் யாருடைய அரசியல் நாடாகமல்ல, ஆனால் ம.இ.க.வின் குட்டி தலைவர்களின் அரசியல் கூத்தை வெட்டவெளிச்சமாக்கிய நிகழ்வு அது. உணர்ந்து கொள்ளவும்.
இறுதியாக, இந்த ஒரு தமிழ்ப்பள்ளி மட்டும் தான் பிரச்னையாக உள்ளது போலவும், அதற்க்கு மு.குலசேகரன் போன்ற தலைவர்கள் முட்டி மோதி கொண்டு தலையிட்டு அரசியல் படம் காட்டுவது போலவும் விளங்காமல் விளங்காத்தனமாக கருத்து தெரிவித்த சகோதரர் சசாசி, நாட்டில் இன்னும் எத்தனையோ தமிழ்ப்பள்ளி கூடங்கள் இவ்வகையான அவல நிலையில் இருக்கின்றன என்று தெரிந்து பேசவும்.
இந்நிலை இன்று புதிதாக முளைத்தது அல்ல, 53  வருட தேசிய முன்னணி ஆட்சியில், ம.இ.க.வின் சாதனையின் சின்னம் என்று புறிந்து கொள்ள வேண்டும்.
குவால பிலா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் மு.குலசேகரனின் நற்பணியை புரிந்திராமல் பத்திரிகை அறிக்கை விட்டு அரசியலில் பரிதாப நிலையில் இருக்கும் சசாசி போன்ற சகோதரருக்கு இத்தெளிவுரை பிற்காலத்தில் கைகொடுக்கும் என காமாட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Monday, January 24, 2011

இண்டர்லோக் நாவலுக்கு எதிராக போலீஸ் புகார்

மலேசியா நண்பன் செய்தி 24/01/2011

தமிழ் நேசன் செய்தி 24/01/2011

நாடு முழுவதும் இண்டர்லோக்கிற்கு எதிராகப் போலீஸ் புகார்கள்

மலேசியா இன்று செய்தி.











இண்டர்லோக் புத்தகம் இந்தியர்களை இழிவுபடுத்துகிறது  என்றும் அது இடைநிலைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கான கட்டாய வாசிப்பு பட்டியலிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கூறி நாடு முழுவதும் பல இந்திய அமைப்புக்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஒரே சமயத்தில் புகார் செய்துள்ளன.


பேராக்கில் ஈப்போ, பத்து காஜா, சித்தியவான், தெலுக் இந்தான், தைப்பிங் ஆகியவற்றிலும் பாகாங்கில் குவாந்தானிலும் கிளந்தானில் கோத்தா பாருவிலும் கோலாலம்பூரில் செந்தூல், பினாங்கில் தாசெக் குளுகோரிலும் மலாக்காவில் ஜாசினிலும் நெகிரி செம்பிலானில் போர்ட்டிக்சனிலும் போலீசில் புகார்செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

“அரசாங்கமும் கல்வி அமைச்சும் இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்காமல் அந்த சர்ச்சையை வேண்டுமென்றே தொடர விரும்புகின்றன”, என்றும் கூறி தாம் அவற்றின் போக்கு மற்றும் நிலை மீதும் புகார் செய்துள்ளதாக பேராக் டிஎபி இளைஞர் பிரிவின் அரசியல் கல்விப் பிரிவுத் தலைவர் பி சுகுமாரன் கூறினார்.


“சுய மரியாதையுள்ள எந்த இந்திய சமூகமும் தேசிய இலக்கியவாதியான அப்துல்லா ஹுசேன் எழுதிய இண்டர்லாக் நாவலை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் ஆதாரமற்றது, அவமானப்படுத்துகிறது, இன உணர்வுகளைத் தொடுகிறது. இந்திய சமூகத்தை முழுமையாக இழிவுபடுத்தும் வகையில் வேண்டுமென்றே திரிக்கப்பட்ட வரலாற்று பிழைகளும் அதில் உள்ளன”, என்று சுகுமாரன் சொன்னார்.
அந்த நாவல் பற்றி மேலும் மறு ஆய்வுகளோ அல்லது மற்ற தரப்புக்களுடன் ஆலோசனைகளோ நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்ட அந்த டிஎபி போராளி, அந்தப் புத்தகம் இந்த நாட்டில் நிலவுகிற இன ஒற்றுமை சீர்குலைவதற்கு வழி வகுப்பதற்கு முன்னர் தேசிய இடைநிலைப் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலிருந்து அது மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

"அந்த நாவலில் வருகின்ற கதாபாத்திரங்கள் ஆக்கப்பூர்வப் பண்புகளைப் பிரதிபலிக்கவில்லை. பள்ளிக்கூட நிலையில் அது கற்பதற்கான ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டால் அது புனிதமான பண்புகளை மேம்படுத்தாது.  மாறாக மற்ற இனங்கள் மீதும் இந்திய சமூகம் மீதும்  வெறுப்புணர்வையே அதிகரிக்கும்”, என்றும் சுகுமாரன் குறிப்பிட்டார்

Monday, January 17, 2011

மக்களுடன் பொங்கலோ பொங்கல் கொண்டாட்டம் - வணக்கம் மலேசியா செய்திகள்


ஈப்போ வட்டாரத்தில் அமைந்துள்ள கம்போங் தை லீ கிராமத்தில் சமூக நல கலந்துரையாடல் இயக்கத்தின் ஏற்பாட்டில் பொங்கல் தினத்தன்று "மக்களுடன் பொங்கலோ பொங்கல் கொண்டாட்டம்" மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
இந்த விழாவில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன், பேராக் மாநில இந்து சங்க பேரவையின் தலைவர் திரு.ஏகாம்பரம் மற்றும் சுற்று வட்டார மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
இந்த பொங்கல் கொண்டாட்ட நிகழ்வை முன்னிட்டு, பல தனியார் கல்லூரி மாணவர்களும் பொது மக்களும் ஏற்பாட்டாளர் ஏற்பாடு செய்த பொங்கல் போட்டியில் கலந்து கொண்டனர். இப்பொங்கல் போட்டி வந்திருந்த பொது மக்களின் பார்வையை மிகவும் கவர்ந்தது. 
இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக கலந்துக்கொண்ட மு.குலசேகரன் அவர்கள், இது போன்ற பாரம்பரிய நிகழ்வுகளை அனைத்து இந்தியர்களும் ஒன்றுமையாக கொண்டாடி அதன் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். 
அவரை தொடர்ந்து பேராக் மாநில இந்து சங்க தலைவர், திரு ஏகாம்பரம் அவர்கள் பேசுகையில், பொங்கலின் மகத்துவங்களை பற்றி வந்திருந்த மக்களுக்கு எடுத்துரைத்தார்.


பொங்கல் போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு மு.குலசேகரன் பரிசுகளை எடுத்து வழங்கினார். இறுதியாக இப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கம்போங் தை லீ மக்கள் அன்னதானம் வழங்கினர். 

இந்நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியதற்கு ஏற்பாட்டுக் குழுவின் தலைவி திருமதி.ஆ.சுகந்தி அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Sunday, January 16, 2011

"மக்களுடன் பொங்கலோ பொங்கல் கொண்டாட்டம்"



ஈப்போ வட்டாரத்தில் அமைந்துள்ள கம்போங் தை லீ கிராமத்தில் சமூக நல கலந்துரையாடல் இயக்கத்தின் ஏற்பாட்டில் பொங்கல் தினத்தன்று "மக்களுடன் பொங்கலோ பொங்கல் கொண்டாட்டம்" மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்த விழாவில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன், பேராக் மாநில இந்து சங்க பேரவையின் தலைவர் திரு.ஏகாம்பரம் மற்றும் சுற்று வட்டார மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இந்த பொங்கல் கொண்டாட்ட நிகழ்வை முன்னிட்டு, பல தனியார் கல்லூரி மாணவர்களும் பொது மக்களும் ஏற்பாட்டாளர் ஏற்பாடு செய்த பொங்கல் போட்டியில் கலந்து கொண்டனர். இப்பொங்கல் போட்டி வந்திருந்த பொது மக்களின் பார்வையை மிகவும் கவர்ந்தது. 

இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளராக கலந்துக்கொண்ட மு.குலசேகரன் அவர்கள், இது போன்ற பாரம்பரிய நிகழ்வுகளை அனைத்து இந்தியர்களும் ஒன்றுமையாக கொண்டாடி அதன் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். 

அவரை தொடர்ந்து பேராக் மாநில இந்து சங்க தலைவர், திரு ஏகாம்பரம் அவர்கள் பேசுகையில், பொங்கலின் மகத்துவங்களை பற்றி வந்திருந்த மக்களுக்கு எடுத்துரைத்தார்.

பொங்கல் போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு மு.குலசேகரன் பரிசுகளை எடுத்து வழங்கினார். இறுதியாக இப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கம்போங் தை லீ மக்கள் அன்னதானம் வழங்கினர். 

இந்நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியதற்கு ஏற்பாட்டுக் குழுவின் தலைவி திருமதி.ஆ.சுகந்தி அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். 

நன்றி.

Friday, January 14, 2011

ஜ.செ.க வின் தேசிய உதவித் தலைவர் குலசேகரனின் பொங்கல் திருநாள் வாழ்த்து

 ஜ.செ.க வின் தேசிய உதவித் தலைவர் குலசேகரனின்  பொங்கல் திருநாள் வாழ்த்து
உலக வாழ் இந்திய மக்களின் மனதில் தை மாதம் ஒரு சிறப்பான மாதமாக நிலைத்துள்ளது. வருட தொடக்கத்தில் இந்தியர்களின் முதல் திருநாளாகிய பொங்கல் திருநாள் அனைவருக்கும் சமத்துவமான பொங்கலாக அமைய வேண்டுமென்று இறைவனை பிராத்திப்போம். உண்ணதமான உழைப்புக்கு உயர்ந்த கௌரவத்தை தரும் இந்த நன்னாளில், வியர்வையை சிந்தி பாடுபடும் அனைத்து மக்களுக்கும் நற்பலன் தரும் நாளாக பொங்கல் கொண்டாடப்படும் வேளையில், நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து இந்நாளை கொண்டாடுவோம்.சமுதாயத்தில் சமத்துவம் மட்டும் போதாது, சமவாய்ப்பு தேவை அப்பொழுதுதான் சமவாழ்வு பிறக்கும். 
தமிழர்களின் திருநாளாகிய இப்பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கலாக அமைய எனது சார்பிலும் மற்றும் எனது குடும்பத்தார் சார்பிலும் அனைத்து மலேசியா வாழ் மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என ஜ.செ.க வின் தேசிய உதவித் தலைவரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.குலசேகரன் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


மக்களுடன் பொங்கலோ பொங்கல்

பொங்கல் விழா கொண்டாட்டம்

Wednesday, January 12, 2011

நீதிமன்ற தலையீடு அவசியமற்றது

மக்கள் ஓசை செய்தி 12/01/2011


செம்பருத்தி இணையதள செய்தி 
இண்டர்லோக் நாவலுக்கு எதிரான குரல் மேலோங்கி உயர்ந்து சென்று கொண்டிருக்கும் வேளை யில் அதனை மீட்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் எந்த ஒரு முனைப்பையும் காட்டாமல் இருப்பது, இந்திய சமுதாய மக்களிடையே ஆத்திரத்தை உருவாக்குகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு பலவிதமான சூழ்சிகளை செய்து அந்நாவலை தக்க வைப்பதில் ஆர்வத்தை காட்டுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு இலக்கிய நாவலாக உபயோக படுத்த வெளியிட்ட அப்புத்தகம், இந்தியர்களின் பொறுமையை சோதித்துள்ளது. இந்நாவல் ஒரு கற்பனை கதையாக இருக்கும் பட்சத்தில், இந்நாவலின் உள்ளடக்கங்களை உணர்வுள்ள தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது.
அதற்க்கு காரணம், இந்தியர்களை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டிருப்பதை நன்கு உணரமுடிகிறது. அதன் அடிப்படையில் பல தமிழ் இயக்கங்களும் தனிமனிதர்களும் அந்நாவலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர், கல்வி அமைச்சின் அலட்சிய போக்கை கண்டு அப்புத்தகத்தை ஏரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இது போன்ற செயல்கள் சட்டத்திற்கு எதிரானதாக இருந்தாலும், அவை இந்தியர்களின் மன ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது.
இப்பொழுது இப்பிரச்னை ஒரு புதிய பாதையை நோக்கி சென்று மேலும் இந்தியர்களின் இழிவுக்கும், கௌரவ அழிவுக்கும் பாதையை அமைக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. ம.இ.க. மத்திய செயற்க்குழுவின் உறுப்பினரும், முன்னால் ம.இ.க-வின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின் புதல்வருமான ச.வேள்பாரி அவர்கள் இந்நாவலை மீட்டுக்கொள்ள சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு செய்துள்ளார்.
தான் எடுக்கப் போகும் அந்த சட்ட நடவடிக்கையில், நீதிமன்றம் இண்டர்லோக் நாவலை உபயோகத்திலிருந்து மீட்டுக்கொள்ள உத்தரவை பிறப்பிக்க எடுக்கும் முயற்சியாக அமைகிறது  என்று கூறியுள்ளார். நோக்கம் நல்லவையாகதான் உள்ளது. ஆனால் இதன் எதார்த்தத்தை ஆழமாக அறிந்திருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செய்வதினால் உடனடியாக இந்நாவலை மீட்டுக்கொள்ள உத்தரவு கிடைக்கப்பெறாது என்பது உண்மையாகும். அதற்க்கு கால அவகாசம் தேவை. இந்த கால கட்டம் இந்தியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை உருவாக்கும் என்பதும் திண்ணம்.
திரு.வேள்பாரி அவர்கள் ஆஸ்ட்ரோலியா மற்றும் மலேசியாவில் உள்ள சட்ட ஆலோசகர்களை கலந்து பேசிய பிறகுதான் இம்முடிவை எடுத்தார் என்று தெரிவித்துள்ளார். சட்ட நடவடிக்கை இந்நாவல் பிரச்னைக்கு சாதகமான தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சட்ட நடவடிக்கை இப்பிரச்சனைக்கு சிறந்த முடிவை தருமா?
அதன் அடிப்படையில் நீதிமன்றம் சென்று அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரான நடவடிக்கை சாத்தியமில்லை என்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:
1). இந்நாவலை கல்வி அமைச்சு அறிமுகப்படித்துயுள்ள வேளையில், இந்நாவலை மீட்டுக்கொள்ளபடும் என்ற முடிவை கல்வி அமைச்சே அறிவித்தாக வேண்டுமே ஒழிய, இவ்விவகாரத்தில் நீதிமன்ற தலையீடு தேவையற்றது.
2). அதையும் தாண்டி இப்பிரச்சனை நீதிமன்றத்தில் செவிமடுக்கப்பட்டால், இதன் முடிவு, உயர் நீதிமன்றம், மேல் முறையீட்டு நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றம் வரை சென்று கால தாமதத்தை உருவாக்கும் அதே வேளையில், அந்நாவல் பள்ளிக்கூட உபயோகத்திற்கு பெரும் வாய்ப்பைத் தரும் சாத்தியமுண்டு.
3). இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வாக, ம.இ.க.வின் தலைவர்கள் அம்னோவின் சர்வாதிகாரிகளுடன் ஒன்று கூடி கலந்து பேசி இந்நாவலை மீட்டுக்கொள்ள முடிவெடுக்கவேண்டும். அதிலும் குறைந்த பட்சமாக இந்தியர்களை இழிவுபடுத்திய அனாவசிய சொற்களை அகற்றி அதன் பிறகு பயன்பாட்டை உறுதிபடுத்தலாம்.
4). ம.இ.க தேசிய முன்னணின் மூத்த பங்காளி கட்சியாக இருக்கும் வேளையில், இப்பிரச்சனையை தேசிய முன்னணின் வட்டாரத்திலேயே பேசி முடிக்க முடியாதது ஏன்? எதற்காக ம.இ.க-வின் குட்டித் தலைவர்கள் அரசாங்க ஆட்சியில் இருக்கும் கட்சியில் இருந்துக் கொண்டு அரசாகத்திற்க்கு எதிராக நீதிமன்றம் செல்லவேண்டும்? இதன் அவசியம் என்ன? ம.இ.க-வின் குரல் பலவீனமாக உள்ளதா? அல்லது மதிப்பற்ற நிலையில் ம.இ.க வா?
இந்திய மக்களின் உணர்வை தேசிய முன்னணியின் அரசியல் கொள்கை உதாசினப்படுதுகிறது என்ற உண்மையை ம.இ.க அறிந்திருந்தால் அல்லது அறிந்துக்கொண்டாள், தேசிய முன்னணியை விட்டு விலக வேண்டும். அவ்வாறு செய்வதற்கு ம.இ.க தயார் நிலையில் உள்ளதா அல்லது அவ்வாறு செய்வதற்கு துணிச்சல் இருக்கிறதா?
இந்திய சமுதாயத்தின் காவலன் என்று கொக்கரிக்கும் ம.இ.க, இன்று இந்தியர்களின் கௌரவத்தை அம்னோ காற்றில் பறக்கவிடுவதை பார்க்க மட்டுமே முடிகிறது. அம்னோ அரசாங்கத்திற்கு  எதிராக சட்ட நடவடிக்கை என்பது ம.இ.க தனது சட்டையில் சாக்கடையை அள்ளி போடுவது போல உள்ளது. அதற்க்கு மாறாக தேசிய முன்னணியை விட்டு விலகுவதே சிறந்த பதிலடியாகும். அவ்வாறு  முடியுமா?
கடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியின் அரசியல் காயங்களை மறைக்க சீர்திருத்த கொள்கையை கையாளும் என்று சொல்லப்படுவது வெறும் வாய்ச் சொல்லே !!! மக்களின் ஆதரவை பெற நடத்தும் அரசியல் கபட நாடகம் அது.
இருப்பினும், இந்தியர்கள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வில்லை என்றால், இனி வருங் காலங்களில் தேசிய முன்னணி இந்தியர்களை மேலும் மேலும் அவமானப்படுத்தி அதன் ஆணவத்தை பலமாக்கிக்கொள்ளும் என குலசேகரன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, January 10, 2011

மாணவர்களை செருப்பால் அடித்த ஆசிரியரை தண்டிப்பது யார்?


இடைநிலைப்பள்ளியில் புகுமுக வகுப்பை சார்ந்த இரண்டு இந்திய மாணவர்களை ஆசிரியர் தலையில் செருப்பால் அடித்தது மட்டுமல்லாமல் கீழே தள்ளி மாணவனின் நெஞ்சில் உதைத்தார்  என்று அம்மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
இந்நிகழ்வு சுல்தான் அப்துல் அசிஸ் இடைநிலைப் பள்ளியில் நிகழ்ந்துள்ளது. மாணவர்கள் ஒன்று கூடும் சபை நிகழ்வில் இவ்விருவரும் பேசிக்கொண்டிருந்தனர் என்ற காரணத்தினால் அந்த ஆசிரியர் அளவுக்கு மீறிய செயலை செய்தது கண்டிக்கத்தக்கது.
மாணவர்கள் தப்பு செய்வது சகஜம். அவர்களை கண்டிப்பது ஆசிரியர்களின் முழுமையான கடமையும் கூட. ஆனால் ஆசிரியர்களுக்கும் எல்லை உண்டு.
இச்செயல் எல்லை மீறலை விட சர்ச்சையான விவகாரம். அதுவும் சமீப காலமாக இந்திய மாணவர்களின் மேல் ஆசிரியர்கள் இவ்வாறு செய்வது, அவர்களின் மேல் அளவு கடந்த வெறுப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
ஒரு வேலை, அவ்விரு மாணவர்களுக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் யார் அதற்க்கு பொறுப்பு வகிப்பது? காலால் ஒரு மாணவனை நெஞ்சில் உதைத்ததாக கூறப்படும் மாணவனின் நெஞ்சில் உள்காயங்கள் ஏற்பட்டிருந்தால், என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது கல்வி கற்ற ஆசிரியர்களுக்கு தெரியாதா?
அதவைவிட பெரிய கொடுமை, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் செய்ய சென்ற பொழுது காவலர்கள் புகாரை எடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் முத்தையா உதவியுடன் புகார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதே போன்ற இன்னொரு சர்ச்சையான விவகாரம் கம்பாரிலும் நடந்தது. அதிலும் ஒரு இந்திய மாணவன் தான் ஆசிரியரால் செருப்பால் தாக்கப்பட்டார். இதுநாள் வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று யாருக்கும் தெரிவிப்பதும் கிடையாது. காவல்துறையில் புகார் செய்தால் அந்த ஆசிரியர்களையும் காவல்துறையில் விசாரணை செய்வதில்லை. கல்வி இலாக்காவில் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கையும் எடுப்பதும் கிடையாது. காலம் கடந்த பிறகு தான் விசாரணை செய்கிறார்கள்.
இது போன்ற செயல்கள் மாணவர்களுக்கு பெரிய பிரச்சனையாக முடிகிறது. புகார் செய்த காரணத்தினால் இனிமேல் அம்மாணவர்கள் அப்பள்ளியில் பயில தயக்கம் காட்டுவார்கள். மாற்றலாகி வேற ஒரு பள்ளிக்கு சென்றால் அங்கே இப்பிரச்சனையை முன்வைத்து அம்மாணவர்களின் மேல் கவனத்தை ஆசிரியர்கள் முழுமையா செலுத்துவதில்லை. ஏன் என்று கேட்டால், கடந்த கால புகாரை சுட்டிக்காட்டி பேசவும் வாய்ப்புண்டு. இதனால் மனரீதியாக பாதிக்கப்படுபவர்கள் மாணவர்களே.
சமீப காலமாக இந்தியர்களின் மேல் இழைக்கப்படும் கொடுமைகளை குறித்து நாம் அன்றாடம் தினசரி நாளிதள்களில் படிபதுண்டு. இதற்க்கு யார் காரணம் என்று ஆராயாமல், தக்க நடவடிக்கை எடுக்க மறுக்கும் தேசிய முன்னணின் அரசாங்கத்தை முழுமையா ஒதுக்குவதே இன்றைய சூழ்நிலையின் அவசியம்.
இரக்கமின்றி அரக்க குணத்தோடு நடந்துக்கொள்ளும் ஆசிரியர்களை குறை கூறுவதை விட பொறுப்பற்ற கல்வி அமைச்சின் தன்மூப்பான செயலே இதற்க்கு காரணம்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் மேல் உரிய நடவடிக்கை தேவை என்பதெல்லாம் கடந்த கால கோரிக்கை. ஆனால் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப அந்த ஆசிரியரை உடனடியாக கல்வி கற்க தகுதியற்றவர் என்று முத்திரை குத்தி பணிநீக்கம் செய்தால், இது போன்ற பிரச்சனைகள் வருங் காலத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.குலசேகரன் தனது பத்திரிக்கை   அறிக்கையில் தெரிவித்துள்ளார்.